- சென்னை, செய்திகள், மாநிலச்செய்திகள்

ரூ.6456 கோடி நிதி ஒதுக்கீட்டில் 31.76 லட்சம் மாணவர்களுக்கு மடிக்கணினி

சென்னை, பிப்.4-
தமிழ்நாட்டில் 5 ஆண்டுகளில், மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினி(லேப்டாப்) வழங்கும் திட்டத்துக்கு, ரூ.6456 கோடி  நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, 31.76 லட்சம் மாணவ, மாணவிகளுக்கு லேப்டாப் வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலமாக, இந்த திட்டம், 100 சதவீத இலக்கினை அடைந்து நிறைவு  பெற்றுள்ளது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
ஆய்வுக்கூட்டம்
முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் சிறப்புமிகு  திட்டங்களின் ஒன்றான மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினி(லேப்டாப்) வழங்கும் திட்டத்தின் முன்னேற்றம் குறித்து செய்தி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத் துறை அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி பேசும்போது கூறியதாவது:-
மாணவ-மாணவிகளின் திறனை மேம்படுத்த வேண்டும் என்ற நோக்கில், தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா,      அரசு  மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள், அரசு மற்றும் அரசு உதவி பெறும் கலை மற்றும் அறிவியல் கல்லலூரிகள், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பொறியியல் கல்லூரிகள், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பல்தொழில்நுட்பக் கல்லூரிகள், ஆகியவற்றில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு இலவசமாக லேப்டாப் வழங்க  உத்தரவிட்டார்.
ஜெயலலிதா தொடங்கி வைத்தார்
இந்த திட்டத்தை முதல்-அமைச்சர் ஜெயலலிதா, கடந்த 2011-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 15-ந் தேதி,  பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாள் விழாவின்போது, திருவள்ளுர் மாவட்டம், காக்களூரில், தொடங்கி வைத்தார்.
இதையடுத்து, முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் ஆணைப்படி 2011-12 முதல் 2015-16-ம் ஆண்டுகளில் இத்திட்டத்திற்காக ரூ.6456.44 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, 31 லட்சத்து 76 ஆயிரத்து 18 மாணவ, மாணவிகளுக்கு லேப்டாப்கள் வழங்கப்பட்டுள்ளது.
சாதனை

கடந்த 5 ஆண்டுகளில் இந்த திட்டம், 100 சதவீத இலக்கினை அடைந்து நிறைவு பெற்றுள்ளது. இது முதல்-அமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான அரசின் சாதனையாகும்.
இவ்வாறு அமைச்சர் ராஜேந்திரபாலாஜி தெரிவித்தார்.
இந்த கூட்டத்தில் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத் துறை அரசு முதன்மைச் செயலாளர் சத்யகோபால், தமிழ்நாடு மின்னணு நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் அதுல் ஆனந்த், பள்ளிக் கல்வி இயக்குநர் கண்ணப்பன் மற்றும் துறை உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply