- செய்திகள், மாநிலச்செய்திகள்

ரூ. 5 ஆயிரம் கோடியில் 14 லட்சம் புதிய மின்னணு வாக்குப் பதிவு எந்திரங்கள்

புதுடெல்லி, ஏப். 28-
2019-ம் ஆண்டு நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலுக்காக ரூ. 5 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் 14 லட்சம் புதிய வாக்குப் பதிவு எந்திரங்களை வாங்க மத்திய அமைச்சர்கள் குழு ஒப்புதல் அளித்துள்ளது.

தேர்தலுக்காக 14 லட்சம் புதிய மின்னணு வாக்குப் பதிவு எந்திரங்களை வாங்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு தேர்தல் ஆணையம் கடந்த ஆண்டு பரிந்துரை செய்திருந்தது.
நிதியமைச்சக செலவின துறை செயலாளர் தலைமையில் கடந்த ஜனவரி மாதம் 18-ந் தேதி நடைபெற்ற கூட்டத்தில், தேர்தல் ஆணையத்தின் பரிந்துரை கொள்கை அளவில் ஏற்கப் பட்டது.

2015-16 ம் நிதியாண்டு முதல் 2018-19 ஆண்டு வரை 13 லட்சத்து 95 ஆயிரத்து 648 புதிய எந்திர அலகுகளையும், 9 லட்சத்து 30 ஆயிரத்து 432 கட்டுப்பாட்டு அலகுகளையும் 5 ஆயிரத்து 511 கோடியே 48 லட்சம் ரூபாய் செலவில் படிப்படியாக வாங்க முடிவு எடுக்கப் பட்டது.

அதிகாரிகள் மட்டத்தில் எடுக்கப்பட்ட கொள்கை முடிவு குறித்து, மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையிலான மத்திய அமைச்சர்கள் குழு நேற்று கூடி ஆலோசனை நடத்தியது. இந்தக் கூட்டத்தில் தேர்தல் ஆணையத்தின் கோரிக்கை ஏற்றுக் கொள்ளப் பட்டது. அமைச்சர்கள் குழுவின் முடிவு பிரதமர் அலுவலகத்திற்கும் பரிந்துரை செய்யப்படும்.
பிரதமர் ஒப்புதல் அளித்த பின், புதிய மின்னணு வாக்குப் பதிவு எந்திரங்கள் வாங்குவது தொடர்பாக மத்திய அமைச்சரவை விவாதித்து ஒப்புதல் வழங்கும்.

நடப்பு நிதியாண்டில் புதிய மின்னணு வாக்குப் பதிவு எந்திரங்கள் வாங்குவதற்காக ஆயிரத்து 872 கோடி ரூபாய் செலவாகும் என அரசு மதிப்பீடு செய்துள்ளது. இருப்பினும் இதற்கான ஒப்பந்தப் புள்ளியை தேர்தல் ஆணையம் கோரிய பின்பே, அதற்கான முழு செலவுத் தொகை குறித்த முழு விவரம் தெரியவரும்.

படிப்படியாக பெறப்படும் வாக்குப் பதிவு எந்திரங்கள் அடுத்து நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தல்களில் பயன்படுத்தப்படும். நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக அனைத்து வாக்குப் பதிவு எந்திரங்களையும் கொள்முதல் செய்து, வாக்குப் பதிவுக்குப் பயன்படுத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது.

Leave a Reply