- சென்னை, செய்திகள், மாவட்டச்செய்திகள்

ரூ.400 கோடியில் சாலைகளை அகலப்படுத்த நடவடிக்கை சென்னை மாநகராட்சி பகுதியில்

சென்னை, பிப்.17-

சென்னை மாநகராட்சி சாலைகள் ரூ.400 கோடியில் அகலப்படுத்தப்படும் என்று, தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட்டில் நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறி உள்ளார்.
இது தொடர்பாக, பட்ஜெட்டில் கூறப்பட்டு இருப்பதாவது:-

சாலைக்கட்டமைப்பு

2011-ம் ஆண்டு மே மாதம் முதல், சாலைக் கட்டமைப்பை மேம்படுத்துவதற்காக, ரூ.14,841 கோடி செலவில் பணிகளை இந்த அரசு செயல்படுத்தியுள்ளது.  இத்திட்டத்தின் கீழ், 5,935 கிலோ மீட்டர் மாநில நெடுஞ்சாலைகளும், 6,740 கிலோ மீட்டர் முக்கிய மாவட்டச் சாலைகளும், 11,879 கிலோ மீட்டர் இதர மாவட்டச் சாலைகளும் அகலப்படுத்தப்பட்டு, மேம்படுத்தப்பட்டுள்ளன. மேலும், நபார்டு வங்கியின் உதவியோடு, 2011-2012-ம் ஆண்டிலிருந்து 1,184.84 கிலோ மீட்டர் சாலை மேம்பாட்டுப் பணிகளையும், 914 பாலப் பணிகளையும், ரூ.2,563.87 கோடி மதிப்பீட்டில் இந்த அரசு செயல்படுத்தி வருகிறது.
சென்னையில்…
விரிவுபடுத்தப்பட்ட சென்னை மாநகராட்சிப் பகுதிகளில், சாலை அகலப்படுத்துதல் மற்றும் நடைபாதைகள், வடிகால்கள் போன்றவற்றை அமைப்பதற்கான பணிகள் ரூ.400 கோடி செலவில் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. சென்னை வெளிவட்டச் சாலையின் முதற்கட்டப் பணிகளை இந்த அரசு வெற்றிகரமாக முடித்துள்ளதோடு, இச்சாலையின் 2-வது கட்டப் பணிகளும் விரைவாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
ஒரகடம் தொழில் பகுதி வழித்தடத் திட்டம் ரூ.961.29 கோடி செலவில் விரைவாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.  கிழக்கு கடற்கரைச் சாலையை நான்கு வழித்தடச் சாலையாக்கும் பணிகள் ரூ.314.15 கோடி செலவில் நடைபெற்று வருகின்றன.
இவ்வாறு இடைக்கால பட்ஜெட்டில் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

Leave a Reply