- சென்னை, செய்திகள், மாநிலச்செய்திகள்

ரூ.40.36 கோடியில் கட்டப்பட்டுள்ள வருவாய்த்துறை கட்டிடங்கள் 16 புதிய வருவாய் வட்டங்கள்

சென்னை, மார்ச்.1-

ரூ.40.36 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள வருவாய்த் துறை, நில அளவை  மற்றும் நிலவரித்திட்டத் துறைகளின் அலுவலகக் கட்டிடங்கள் மற்றும்  குடியிருப்புகளை முதல்-அமைச்சர் ஜெயலலிதா சென்னை தலைமைச் செயலகத்தில் காணொலிக் காட்சி மூலமாகத் திறந்து  வைத்து, புதியதாக தோற்றுவிக்கப்பட்ட 16 வருவாய் வட்டங்களையும் தொடங்கிவைத்தார்.
இது தொடர்பாக, தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
அலுவலகங்கள், குடியிருப்புகள்
புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூரில் தரை மற்றும் முதல் தளத்துடன் ரூ.1.64 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கோட்டாட்சியர் அலுவலகக் கட்டிடம் மற்றும் வருவாய் கோட்ட அலுவலர் குடியிருப்பு ஆகியவற்றை முதல்-அமைச்சர் ஜெயலலிதா சென்னை தலைமைச் செயலகத்தில் காணொலிக் காட்சி மூலமாக  திறந்து வைத்தார்.  இப்புதிய கோட்டாட்சியர் அலுவலகக் கட்டிடமானது, வருவாய் கோட்ட அலுவலர் அறை, பணியாளர்கள் அறை, கூட்ட அறை, கணினி அறை, பதிவு வைப்பறை, பணியாளர்கள் உணவருந்தும் அறை, கழிப்பறை, வாகனங்கள் நிறுத்துமிடம் ஆகிய வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளது.

மேலும், திருவள்ளூர் மாவட்டம் அம்பத்தூரில் ரூ.1.49 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் மற்றும் குடியிருப்பு, செங்கல்பட்டு, மதுரை (கிழக்கு), உசிலம்பட்டி, சேலம் (தெற்கு), சேலம் (மேற்கு),  திருவெறும்பூர் மற்றும் நீடாமங்கலம் ஆகிய இடங்களில் ரூ.14.33 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள  வட்டாட்சியர் அலுவலகக் கட்டிடங்கள், கடலூர் மாவட்டம் வேப்பூர், கரூர் மாவட்டம்  மண்மங்கலம், வேலூர் மாவட்டம் நாட்றாம்பள்ளி, திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் ஆகிய இடங்களில் ரூ.8.81 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள வட்டாட்சியர் அலுவலகங்களுடன் கூடிய குடியிருப்புகள்.
ஜெயலலிதா திறந்துவைத்தார்

நில அளவை மற்றும் நிலவரித் திட்டத் துறையின் குறுவட்ட அளவர்களுக்கு திருவாரூர் மாவட்டம் – நீடாமங்கலம் மற்றும் சன்னாநல்லூரில் ரூ.25.42 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள குடியிருப்புகளுடன் கூடிய அலுவலகக் கட்டிடங்கள் என மொத்தம்  ரூ.42.81 கோடி மதிப்பீட்டிலான வருவாய்த் துறை, நில அளவை மற்றும் நிலவரித் திட்டத் துறைகளுக்கான அலுவலகக் கட்டிடங்கள் மற்றும் குடியிருப்புகளை முதல்-அமைச்சர் ஜெயலலிதா திறந்து வைத்தார்.

புதிய வருவாய் கோட்டங்கள்
மேலும், சென்னை – எழும்பூர், மதுரை மாவட்டம் மேலூர், கோயம்புத்தூர் மாவட்டம் கோயம்புத்தூர் (வடக்கு), விருதுநகர் மாவட்டம் சாத்தூர் ஆகிய இடங்களில் தோற்றுவிக்கப்பட்ட 4 புதிய வருவாய் கோட்டங்கள், கீழ்பென்னாத்தூர், மேல்மலையனூர், கண்டாச்சிபுரம், சூளகிரி, காரிமங்கலம், நல்லம்பள்ளி, காடையாம்பட்டி, பல்லாவரம், நெமிலி, பேர்ணாம்பட்டு, மானூர், சேரம்மகாதேவி, கொமாரபாளையம், தாளவாடி, கொடுமுடி மற்றும் மொடக்குறிச்சி ஆகிய இடங்களில் தோற்றுவிக்கப்பட்ட 16 புதிய வருவாய் வட்டங்களை தொடங்கிவைத்தார்.

அமைச்சர்கள்

இந்த நிகழ்ச்சியில், வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர்
டாக்டர் சி. விஜயபாஸ்கர், தலைமைச் செயலாளர் கு. ஞானதேசிகன், தமிழ்நாடு அரசு ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணன், வருவாய்த் துறைச் செயலாளர் வெங்கடேசன், வருவாய் நிர்வாக ஆணையர் அதுல்ய மிஸ்ரா, நில அளவை மற்றும் நிலவரித் திட்ட ஆணையர் வாசுகி மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply