- சென்னை, செய்திகள், மாநிலச்செய்திகள்

ரூ.35 கோடி மதிப்பீட்டில் சென்னை அண்ணா நகரில் புதிய மேம்பாலம்

சென்னை, மார்ச் 2-
சென்னை அண்ணாநகரில் ரூ.35 கோடி மதிப்பீட்டில் அண்ணா வளைவு அருகில் கட்டப்பட்டுள்ள மேம்பாலத்தை முதல்-அமைச்சர் ஜெயலலிதா தலைமைச் செயலகத்தில் காணொலிக் காட்சி மூலமாகத் திறந்து வைத்தார்.
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
போக்குவரத்து மேம்பாட்டிற்கு…
சென்னை, அண்ணாநகர், அண்ணா வளைவு அருகில் ஈ.வெ.ரா. சாலையை நெல்சன்மாணிக்கம் சாலையுடன் இணைக்கும் 361 மீட்டர் நீளம் கொண்ட  ரூ.35 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மேம்பாலத்தை முதல்-அமைச்சர் ஜெயலலிதா காணொலிக் காட்சி மூலமாக திறந்து வைத்தார்.
இப்புதிய சாலை மேம்பாலமானது, பொதுமக்கள் பயன்பெறும் வகையில் அண்ணாநகர், அமைந்தக்கரை, என்.எஸ்.கே நகர், கோயம்பேடு ஆகிய சாலைப் பகுதிகளில் உள்ள போக்குவரத்து நெரிசலைச் சீர்செய்து போக்குவரத்து மேம்பாட்டிற்கு உறுதுணையாக இருக்கும்.
மேலும் காஞ்சிபுரம் மாவட்டம் குன்னப்பட்டில் கட்டப்பட்டுள்ள பாலம்,  ஈரோடு மாவட்டம் கராச்சிகோரையில் கட்டப்பட்டுள்ள பாலம், திருப்பூர் மாவட்டம் மலையாண்டிப்பட்டினத்தில் கட்டப்பட்டுள்ள பாலம், சென்னை கிண்டியில் கட்டப்பட்டுள்ள முதன்மை இயக்குநர் மற்றும் தலைமைப் பொறியாளர்களுக்கான ஒருங்கிணைந்த குடியிருப்புகள், திருநெல்வேலி மாவட்டம் தென்காசியில் கட்டப்பட்டுள்ள தரக்கட்டுப்பாடு உட்கோட்ட அலுவலகக் கட்டடம், பெரம்பலூர் மாவட்டம் பெரம்பலூரில் கட்டப்பட்டுள்ள தரக்கட்டுப்பாடு உட்பிரிவு அலுவலகக் கட்டடம் என மொத்தம் ரூ.141.02 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள அண்ணா வளைவு மேம்பாலம், பாலங்கள், அலுவலகக் கட்டிடங்களை அவர் திறந்து வைத்தார்.
ரூ.1354 கோடியில்
மேலும், காஞ்சிபுரம் மாவட்டம் கீழ்கட்டளையில் மேம்பாலம், காஞ்சிபுரம் மாவட்டம், வண்டலூர் – மாம்பாக்கம் – கேளம்பாக்கம் சாலையில் என்.எச்-45 சந்திப்பில் மேம்பாலம், வண்டலூர் முதல் வாலாஜாபாத் வரையிலான  நான்கு வழிச்சாலையினை ஆறு வழிச்சாலையாக மேம்படுத்தும் பணி, மதுரை மாவட்டம்  மதுரை சுற்றுச் சாலை இருவழித்தடத்திலிருந்து நான்கு வழித்தடமாக அகலப்படுத்தும் பணி, திருவள்ளூர் மாவட்டத்தில், 485 கி.மீ. மாநில சாலைகள் மற்றும் 278 கி.மீ. மாவட்ட முக்கிய சாலைகளை செயல்பாட்டு அடிப்படையிலான பராமரிப்பு ஒப்பந்தப்படி  ஐந்து ஆண்டுகளுக்கு பராமரிக்கும் பணி என மொத்தம் ரூ.1354.78 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படவுள்ள பாலங்கள், சாலைப் பணிகளுக்கு முதல்-அமைச்சர் ஜெயலலிதா அடிக்கல் நாட்டினார்.
இந்த நிகழ்ச்சியில், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி, தலைமைச் செயலாளர் கு. ஞானதேசிகன், தமிழக அரசு ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணன் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply