- செய்திகள்

ரூ.3 கோடியில் சீரமைப்பு பணிகள் தீவிரம் செம்பரம்பாக்கம் ஏரியில் மண் அரிப்பு…

பூந்தமல்லி, ஆக.19-
செம்பரம்பாக்கம் ஏரி கரைகளில் கடந்த ஆண்டு பெய்த பலத்த மழையால் மண் அரிப்பு  ஏற்பட்டதையடுத்து, மழை காலத்துக்கு முன்பாக ரூ. 3 1/2 கோடியில்  செம்பரம்பாக்கம் ஏரியில் சீரமைப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது
பலத்த மழை
சென்னையில், கடந்த ஆண்டு நவம்பர், டிசம்பர் மாதங்களில் வரலாறு காணாத வகையில் பெய்த பலத்த மழையால் சென்னை நகரமே ஸ்தம்பித்தது. பலத்த மழையின் காரணமாக நகரில் இருக்கும் முக்கியமான ஏரிகள் அனைத்தும் தனது முழுகொள்ளளவுகளை எட்டியதால், ஏரி உடைந்து விடாமல் தடுக்கும் வகையில் திறந்து விடப்பட்டன.
பொருட்சேதம்
டிசம்பர் 1-ந் தேதி ஏரியில் இருந்து திறந்து விடப்பட்ட உபரிநீர், அடையாறு  ஆற்றில் பெருக்கெடுத்து ஓடி உயிர்ச்சேதம், பொருட்சேதத்தை ஏற்படுத்தியது.  பலர் தங்கள் வீடு மற்றும் உடமைகளை இழக்க நேர்ந்தது. இந்த சம்பவம் சென்னை  மக்களின் வாழ்க்கையில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி விட்டது.
மணல் மூட்டைகள்
கடந்த டிசம்பர்  மாதம் ஏரியில் இருந்து வழக்கத்தை விட அளவுக்கு அதிகமாக அனைத்து மதகுகள்  வழியாக உபரி நீர் திறந்து விடப்பட்டதால் ஏரியின் மதகுகள், கரைகள் என  பல்வேறு இடங்களில் மண் அரிப்புகள் ஏற்பட்டு செம்பரம்பாக்கம் ஏரியே உடைந்து  விடுமோ? என்ற அச்சத்தை ஏற்படுத்தியது. அதனால், இரவோடு, இரவாக தற்காலிகமாக அசம்பாவிதத்தை  தவிர்க்கும் வகையில் மண் அரிப்பு ஏற்பட்ட இடங்களில் மணல் மூட்டைகள் அடுக்கி  வைக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டது.
மண் அரிப்பு
ஏரி உடைந்து விடாமல் இருப்பதற்காக சேதாரத்தின் அளவுகளையும் பொருட்படுத்தாமல் அனைத்து மதகுகளின் கதவுகளும் திறந்து விடப்பட்டதன் காரணமாக செம்பரம்பாக்கம் ஏரி கரைகளில் அதிகளவில் மண் அரிப்பு ஏற்பட்டது. அதனால், ஏரி கரையை சீரமைக்கும் பணிக்காக ரூ. 3 1/2 கோடி நிதிஒதுக்கீடு செய்யப்பட்டது. அதையடுத்து, சீரமைக்கும் பணிகளை மழை காலத்துக்கு முன்பாகவே முடிக்கும் வகையில், தீவிரமாக நடைபெற்று வருகிறது.
மழைக்காலம் தொடங்க
வருகின்ற, 2 மாதங்களில் மழைக்காலம் தொடங்க உள்ள நிலையில் பாதிப்புகள் அதிகமாகி விடக்கூடாது என்பதற்காக தற்போது ரூ. 3 கோடியே 40 லட்சம் மதிப்பீட்டில் செம்பரம்பாக்கம் ஏரியில் சீரமைப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
தடுப்புச்சுவர்
ஏரியின் பல்வேறு பகுதிகள் புதுப்பிக்கப்பட்டு கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. இது குறித்து பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது, செம்பரம்பாக்கம் ஏரி கரையின் இடது புறத்தில் தடுப்புகள் இல்லாமல் இருந்தது. இதனால் வாகனத்தில் வேகமாக வருபவர்கள் நிலை தடுமாறி கரையின் மேல் இருந்து கீழே விழும் சூழல் ஏற்பட்டது. அதை தடுக்கும் வகையில் 5 கிலோ மீட்டர் தூரத்துக்கு ரூ.1 கோடியே 27 லட்சத்தில் தடுப்பு சுவர்கள் மற்றும் மதகுகளில் அரிப்பு ஏற்பட்ட பகுதிகளில் தடுப்புகள் அமைக்கப்பட்டு வருகிறது.
வடிகால்வாய்
ரூ.1 கோடியே 40 லட்சத்தில் மழைநீர் வடிகால்வாய் அமைக்கப்பட்டு வருகிறது. ஏரிக்கரையின் மேல் இருந்து வழியும் மழைநீர் நேராக கீழே சென்று வீணாகாமல் இருக்க கீழ்ப்பகுதியில் ரூ.43 லட்சத்தில் கால்வாய் அமைக்கப்பட்டு வருகிறது.
மண் அரிப்பு பகதிகளில்
ரூ.30 லட்சத்தில் 5 கண் மற்றும் 19 கண் மதகுகளில் உள்ள ஷட்டர்களும், கரையின் மீது அரிப்பு ஏற்பட்ட பகுதிகளில் மண் கொட்டி கற்கள் பதிக்கும் பணியும், தடுப்பு சுவர் அமைக்கும் பணியும் நடைபெற்று வருகிறது. கரையின் மேல் அதிகளவில் வளர்ந்துள்ள செடிகளை அகற்றும் பணியும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
சென்னை குடிநீருக்காக
மொத்தம் 6,300 ஏக்கர் நிலபரப்பு கொண்ட செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த நீர் கொள்ளளவு 3,645 மில்லியன் கன அடி. தற்போதைய நீர் கொள்ளளவு 1,416 மில்லியன் கன அடியாகவும், நீர் மட்டம் 14.36 அடியாகவும் உள்ளது. ஏரியில் இருந்து தினமும் 109 கன அடி நீர் சென்னை குடிநீருக்காக திறந்து விடப்பட்டு வருகிறது.

Leave a Reply