- செய்திகள்

ரூ.25 கோடிக்கு கதர் மற்றும் பட்டு விற்பனை சட்டசபையில் அமைச்சர் பாஸ்கர் தகவல்…

சென்னை, ஆக.25-
கதர் மற்றும் பட்டு விற்பனை ரூ.25 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் பாஸ்கர் தெரிவித்தார்.

சட்டசபையில் நேற்று கதர்துறை மானியக்கோரிக்கை மீதான விவாதத்துக்கு அமைச்சர் பாஸ்கர் பதில் அளித்து பேசியதாவது:-

ரூ.25 கோடிக்கு விற்பனை

தமிழகம் முழுவதும் உள்ள 107 கிராமிய நூற்பு நிலையங்கள், 40 கதர் உபகிளைகள் மற்றும்  9 நேபாளி தறி நிலையங்கள்,
18 கதர் பட்டு உப கிளைகளின் மூலம் கிராமப்புற பெண்களை உள்ளடக்கி ஆயிரத்து 845 பேருக்கு வேலைவாய்ப்பு
அளிக்கப்பட்டு வருகிறது.

2015 –-2016 -ம் ஆண்டில் ரூபாய் 14 கோடியே 65 இலட்சத்து 49 ஆயிரம் மதிப்பில்  கதர் மற்றும் பட்டு உற்பத்தி
செய்யப்பட்டு  ரூபாய் 25 கோடியே 74 இலட்சத்து  13 ஆயிரம் மதிப்பில் விற்பனைசெய்யப்பட்டுள்ளது  என்பதை
தெரிவித்துக்கொள்கிறேன்.

நலத்திட்ட உதவிகள்

நூற்போர் மற்றும் நெசவாளர்களுக்காக அரசால் நல வாரியத்தின் மூலம் கதர் வாரியம் மற்றும்  சர்வோதய சங்கங்களில் பணிபுரியும் நூற்பாளர்கள் மற்றும் நெசவாளர்களுக்கு பல்வேறு வகையான உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக அரசு ஒரு கோடி ரூபாய்  மானியம் வழங்கியுள்ளது இந் நல வாரியத்தில்  9 ஆயிரத்து 42 பேர் உறுப்பினர்களாக உள்ளனர். இதுவரை ஆயிரத்து 134 பயனாளிகளுக்கு ரூபாய் 54 இலட்சத்து 52 ஆயிரம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது.

கதர் உற்பத்தி பெருக்கிட நெசவாளர்களுக்கு தறி அச்சு, விழுது, நாடா போன்ற தறி உபகரணங்கள் வழங்கபட்டுள்ளது. இதனால் நெசவாளர்களின் நெசவு நேரம் குறைந்து உற்பத்தி அதிகரித்து நெசவாளர்களின் கூலியும் அதிகரித்துள்ளது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

கதர் கிராம தொழில் வாரியம் தனது உற்பத்தி அலகுகளை அரசின் நிதி உதவியுடன் நவீனப்படுத்தி வருகிறது.
ஊரக பகுதிகளில் உள்ள  30 கிராமிய நூற்பு நிலையங்களுக்கு அடிப்படை வசதிகள்  ரூபாய் 9 லட்சம் செலவில்
செய்து தரப்பட்டுள்ளன.

புதிய அறிவிப்புகள்

கழிவுத்தாள்களில் இருந்து மறு சுழற்சி முறையில் காகிதம் மற்றும் அட்டைகள் தயாரித்திட தமிழ்நாடு கதர் கிராமத் தொழில் வாரியத்தின் கீழ் கடலூர் மாவட்டம் வடலூரில் செயல்பட்டு வரும் சோப்பு அலகு வளாகத்திற்குள் ரூபாய் 90 லட்சம் மதிப்பீட்டில் கைமுறை காகித அலகு நிறுவப்படும்.

தமிழ்நாடு கதர் கிராமத் தொழில் வாரியத்தின் கீழ் வேலூர் மாவட்டம், அரக்கோணத்தில் செயல்படும் தச்சு மற்றும் கொல்லு அலகின் உற்பத்தியை அதிகரித்திட ரூபாய் 25 லட்சம் மதிப்பீட்டில் நவீன இயந்திரங்கள் நிறுவப்படும்.

தமிழ்நாடு கதர் கிராமத் தொழில் வாரியத்தின் கீழ் செயல்படும் அம்பத்தூர் காலணி அலகின் உற்பத்தி திறனை மேம்படுத்தி நல்ல தரமான தோல் பொருட்கள் உற்பத்தி செய்திட நவீன இயந்திரங்கள் ரூபாய் 150 லட்சம் செலவில் நிறுவிட அறிவிக்கப்பட்டது. நவீன இயந்திரங்கள் நிறுவப்பட்டு அலகு நல்ல முறையில் செயல்பட்டு வருவதால், அந்த அலகின் கட்டடங்களை ரூபாய் 15 லட்சம் மதிப்பீட்டில் புதுப்பிக்கப்படும்.

தமிழ்நாடு கதர் கிராமத் தொழில் வாரியத்தின் கீழ் தஞ்சாவூர் மாவட்டம் நாஞ்சிக்கோட்டையில் செயல்படும் தச்சு மற்றும் கொல்லு அலகின் உற்பத்தியை அதிகரித்திட ரூபாய் 10 லட்சம் மதிப்பீட்டில் நவீன இயந்திரங்கள் நிறுவப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Leave a Reply