- சென்னை, செய்திகள், மாநிலச்செய்திகள்

ரூ.12,778 கோடியில் புதிய அனல் மின் திட்டம் ஜெயலலிதா அடிக்கல் நாட்டினார் …

சென்னை, மார்ச் 1-
ராமநாதபுரம் மாவட்டம் உப்பூர் கிராமத்தில் ரூ.12,778 கோடி மதிப்பீட்டில் நிறுவப்படவுள்ள அனல் மின் திட்டத்திற்கு முதல்-அமைச்சர் ஜெயலலிதா, சென்னை தலைமைச் செயலகத்தில் அடிக்கல் நாட்டினார்.
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
அடிக்கல் நாட்டினார்

ராமநாதபுரம் மாவட்டம் உப்பூரில் 995.16 ஏக்கர் நிலப்பரப்பில்   ரூ.12,778 கோடி மதிப்பீட்டில்  நிறுவப்படவுள்ள நிலக்கரியில் இயங்கும் (2X800  மெகாவாட்) மிக உய்ய உப்பூர் அனல் மின் திட்டத்திற்கு முதல்-அமைச்சர் ஜெயலலிதா, சென்னை தலைமைச் செயலகத்தில் அடிக்கல் நாட்டினார்.
உப்பூர் அனல்மின் திட்டமானது 2019-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் நிறைவு பெற்று, நாளொன்றுக்கு 38.4 மில்லியன் யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும்.  இத்திட்டத்தின் மூலம் ஆண்டுக்கு சுமார் 12,000 மில்லியன் யூனிட் மின்சாரம் தமிழகத்திற்கு கூடுதலாக கிடைக்கும்.இந்த அனல் மின்   திட்டத்திற்கான கொதிகலன், சுழலி, மின்னாக்கி தொகுப்பு மற்றும் அதனைச் சார்ந்த பொதுவியல் பணிகளுடன், பொறியியல், கொள்முதல் மற்றும் கட்டுமானப் பணிகளான வடிவமைத்தல், உற்பத்தி, விநியோகம், நிறுவுதல், தேர்வாய்வுக்குப்பின் செயல்படவைத்தல் ஆகிய பணிகளுக்கு ரூ.5,580 கோடிக்கான ஒப்பந்த ஆணையினை பாரத மிகுமின் நிறுவனத்தின் (பெல்) தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் அதுல் சோப்தியிடம் முதல்-அமைச்சர் ஜெயலலிதா வழங்கினார்.

திறந்து வைத்தார்

மேலும், விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை, சென்னை வியாசர்பாடி, கிருஷ்ணகிரி மாவட்டம் குருபரபள்ளி மற்றும் காஞ்சிபுரம் மாவட்டம் குன்னப்பட்டு கிராமம், ஒமேகா தொழிற்பேட்டை ஆகிய இடங்களில் துணை மின் நிலையங்கள், திருவள்ளூர் மாவட்டம் அலமாதி, மதுரை மாவட்டம் நாட்டார்மங்கலம், புதுக்கோட்டை மாவட்டம் பாக்குடி, வேலூர் மாவட்டம் புன்னை, கடலூர் மாவட்டம் அடரி ஆகிய இடங்களில் துணை மின் நிலையங்கள்,
திருப்பூர் மாவட்டம் தேவனூர்புதூர், ஈரோடு  மாவட்டம் வெண்டிபாளையம் ஆகிய இடங்களில்  துணை மின் நிலையங்கள், திருவண்ணாமலை மாவட்டம் அத்திமூர் மற்றும் மாம்பட்டு ஆகிய இடங்களில் துணை மின் நிலையங்கள் என மொத்தம் ரூ.424.04 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள 13 துணை மின்நிலையங்களை முதல்-அமைச்சர் ஜெயலலிதா திறந்து வைத்தார்.

அமைச்சர்

இந்த நிகழ்ச்சியில், மின்சாரம், மதுவிலக்கு மற்றும்  ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் நத்தம் ஆர். விசுவநாதன், தலைமைச் செயலாளர் கு. ஞானதேசிகன், தமிழக அரசு ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணன், எரிசக்தித் துறை (பொறுப்பு) கூடுதல் தலைமைச் செயலாளர் பழனியப்பன், தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் சாய் குமார், பாரத மிகுமின் நிறுவனத்தின் செயல் இயக்குநர் ஜி.கே. ஹெடா மற்றும்  அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply