- அரசியல் செய்திகள்

ரீவைண்ட் அண்ணா கண்ட தேர்தல் களம்!

1957-ல் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலின் போது காஞ்சிபுரம் தொகுதியைச் சேர்ந்த பல கிராமங்களுக்கும் அண்ணா நேரில் சென்று வாக்கு சேகரித்தார்.  ஒரு கிராமத்திற்கு அறிஞர் அண்ணாவும் வேறு சில நண்பர்களும் சென்றனர். அந்த ஊர் மக்களும் அண்ணாவை, மிகுந்த உற்சாகத்தோடும் மகிழ்ச்சியோடும் வரவேற்றனர்.

அண்ணா அங்குக் கூடியிருந்தவர்களைப் பார்த்து, ‘‘உங்கள் ஊர்ப் பாதை புதிதாக இருக்கிறதே, எப்போழுது போடப்பட்டது?” என்று கேட்டார். மிச் சமீப காலத்தில்தான் போடப்பட்டது என்றனர் ஊர் மக்கள். அந்தக் கூட்டத்தில் இருந்து ஒருவர் இந்தப் பாதைக்கு நாங்கள் “அண்ணாதுரை பாதை” என்று பெயர் வைத்திருக்கிறோம் என்றார். ஏன்? என்று ஆவலோடு கேட்டார் அண்ணா.  அதற்கு பதிலளித்த கிராம மக்களில் ஒருவர்,  “நீங்கள் இந்தத் தொகுதியில் போட்டியிடுவதால்தான் இவ்வளவு அவசரமாக காங்கிரஸ் சர்க்கார் இந்த ஊர்ப்பாதையைப் போட்டிருக்கிறார்கள்.   உங்களால் எங்களுக்கு புதிய பாதை கிடைத்திருப்பதால், இதற்கு அண்ணாதுரை பாதை என்ற பெயர் வைத்துள்ளோம்  என்றார். சூழ்ந்து நின்றவர்கள் அனைவரும் அதனைச் சிரிப்புடன் ஆமோதித்தனர்.

இது போல மற்றொரு கிராமத்திற்குச் சென்ற அண்ணா,  அங்கு ஒரு குடிசைக்குப் பக்கத்தில் உட்கார்ந்திருந்தார். அப்போது அங்கு வந்த மூதாட்டி, . நீங்கள் யார்? என்றார். ”எலெக்ஷனுக்கு வந்திருக்கிறோம்” என்று பதிலளித்தார் அண்ணா. சிறிது நேர யோசனைக்குப் பிறகு, “எலெக்டிரிக் லைட்” போட வந்திருக்கிறீர்களா? என்றாள் மூதாட்டி. “இல்லையம்மா! எலெக்ஷன், ஓட்டுப் போடுவது, ஓட்டுக் கேட்க வந்திருக்கிறோம்.,”என்றார் அண்ணா. “அதுதான் ஐந்து வருஷத்து முன்னே வந்து வாங்கிட்டுப் போயிட்டாங்களே!” என்றார், மூதாட்டி.

“மறுபடியும் இப்பொழுது தேர்தல் வந்திருக்கு., நீங்கள் எல்லோரும் ஓட்டு போடணும், அதை உங்களுக்கு யார் பேரில் நம்பிக்கையிருக்கிறதோ, அவர்களுக்குப் போடலாம்”என்றார், அண்ணா. “நீ நிக்கிறியா?” என்று கேட்டார், மூதாட்டி.” ஆமாம்” என்றார், அண்ணா. “சரி ஓட்டைக்கொடு! உனக்கே தந்துடறேன்” என்றாரே மூதாட்டி. உடன் வந்தவர்கள் சிறித்தனர்.  உடனே அண்ணா, “தேர்தல் நாளன்று, வாக்கு சாவடியில்தான் ஓட்டுச் சீட்டை தருவார்கள்., அதில் தான் நீங்கள் ஓட்டு போட வேண்டும்” என்றார். இப்படியெல்லாம் மக்களுக்கு வாக்களிப்பது பற்றியும், தி.மு.க., வின் கொள்கைகளையும் ஊர் ஊராகச் சென்று பரப்பியவர் அறிஞர் அண்ணா.

Leave a Reply