- செய்திகள், விளையாட்டு

ரியோ ஒலிம்பிக் போட்டி 10-க்கும் மேற்பட்ட பதக்கங்களை வெல்வதே இலக்கு மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் தகவல்

புதுடெல்லி, ஏப்.28:-
ரியோ டி ஜெனிரோ ஒலிமபிக் போட்டியில் 10-க்கும் மேற்பட்ட பதக்கங்களை வெல்வதே இந்தியாவின் இலக்கு என்று மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் சர்வானந்தா சோனாவால் தெரிவித்துள்ளார்.

மாநிலங்களவையில் உறுப்பினர் ஒருவரின் கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் அமைச்சர் இதை குறிப்பிட்டுள்ளார்.

ரியோ ரி ஜெனிரோவில் வரும் ஆகஸ்ட் மாதம் ஒலிம்பிக் போட்டி நடக்கிறது. இந்த நிலையில் இது தொடர்பாக பதில் அளித்துள்ள அமைச்சர், கடந்த ஆண்டு விளையாட்டு அமைச்சகம் சார்பில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அனுராக் தாகுர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டார். அந்தக் குழுவினர் பதக்கம் பெற வாய்ப்புள்ள 110 விளையாட்டு வீரர், வீராங்கனைகளை கண்டறிந்துள்ளனர் என்றும் தெரிவித்தார். அவர்களில் இதுவரை 76 பேர் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர் என்றும் இன்னும் பலர் தகுதி பெறுவார்கள் என்றும் தெரிவித்தார்.

இதுவரை இல்லாத அளவுக்கு இந்த ஒலிம்பிக் போட்டியில் அதிக அளவில் வீரர், வீராங்கனைகள் பங்கேற்க உள்ளார்கள் என நம்புவதாக அவர் தெரிவித்தார். 2012-ம் ஆண்டில் லண்டனில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவின் சார்பில் 60 பேர் பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பேசிய அமைச்சர், விளையாட்டு அமைச்சகம், விளையாட்டுத் துறையின் தீவிர நடவடிக்கை காரணமாக ரியோ டி ஜெனிரோ ஒலிம்பிக் போட்டியில் இந்திய வீரர், வீராங்கனைகள் அதிக பதக்கங்களைப் பெற்று இந்திய நாட்டுக்கு மகிழ்ச்சியளிப்பர் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.

இந்திய விளையாட்டு ஆணையத்தில் பயிற்சி பெறுவதற்கான வயது வரம்பு 25-ல் இருந்து 18 ஆக குறைக்கப்பட்டுள்ளது என்று மற்றொரு கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் குறிப்பிட்டார்.

Leave a Reply