- மாவட்டச்செய்திகள்

ராமேசுவரம் எக்ஸ்பிரஸ் ரெயில் சேவை தொடங்கியது பயணிகள் கூட்டம் குறைவு

ராமேசுவரம் எக்ஸ்பிரஸ் ரெயில் சேவை தொடங்கியது. பயணிகள் கூட்டம் குறைவாக இருந்தது.

கொரோனா ஊரடங்கின் காரணமாக கடந்த மார்ச் மாதம் 22-ந் தேதி முதல் நாட்டில் ரெயில் சேவை நிறுத்தப்பட்டன. ஊரடங்கு தளர்வில் படிப்படியாக ரெயில் போக்குவரத்து தொடங்கியது. அந்த வகையில் புதுக்கோட்டை வழியாக இயக்கப்படும் திருச்சி-ராமேசுவரம் பயணிகள் ரெயில் சிறப்பு ரெயிலாக நேற்று முதல் சேவையை தொடங்கியது. இந்த ரெயிலானது எக்ஸ்பிரஸ் ரெயிலாக மாற்றம் செய்யப்பட்டு அமலுக்கு வந்துள்ளது. அதன்படி தற்போதைய நடைமுறைகளின் படி முன்பதிவு டிக்கெட் எடுத்த பயணிகள் மட்டும் இதில் பயணம் செய்ய முடியும்.

புதுக்கோட்டையில் இருந்து ராமேசுவரம், திருச்சிக்கு பயணிகள் யாரும் நேற்று அதிகம் டிக்கெட் முன்பதிவு செய்யவில்லை. இதனால் ரெயிலில் பயணிகள் கூட்டம் குறைவாக இருந்தது. ராமேசுவரத்தில் இருந்து திருச்சிக்கு புறப்பட்ட இந்த எக்ஸ்பிரஸ் ரெயில் புதுக்கோட்டைக்கு நேற்று மாலை 6.40 மணி அளவில் வந்தது. ரெயிலில் இருந்து 3 பயணிகள் மட்டுமே இறங்கினர். மேலும் புதுக்கோட்டையில் இருந்து திருச்சிக்கு யாரும் ரெயிலில் ஏறவில்லை. ரெயிலில் பெரும்பாலான இருக்கைகள் காலியாக கிடந்தன.

டிக்கெட் பரிசோதகர்கள் பணியில் இருந்தனர். டி.1 கோச்சில் மட்டும் பயணிகள் அதிகம் இருந்ததாக அவர்கள் தெரிவித்தனர். மேலும் ரெயிலில் மொத்தம் 30 பயணிகள் பயணம் மேற்கொள்வதாக கூறினர். பாசஞ்சர் ரெயிலாக இயக்கப்பட்ட போது இந்த ரெயிலுக்கு பயணிகள் கூட்டம் அதிகம் அலைமோதும் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது எக்ஸ்பிரசாக மாற்றம் செய்யப்பட்ட பின் பயணிகள் கூட்டம் குறைந்துள்ளது. மேலும் இந்த ரெயிலில் முன்பதிவு டிக்கெட் மட்டுமே இருப்பதால் பயணிகள் இதில் அதிகம் ஆர்வம் காட்டுவதில்லை.

தற்போது தான் சேவை தொடங்கிய நிலையில் படிப்படியாக பயணிகள் கூட்டம் அதிகம் வரலாம் என ரெயில்வே துறையினர் எதிர்பார்க்கினர். இந்த ரெயிலில் பாசஞ்சர் ரெயில் கட்டணத்தை விட தற்போது கட்டணம் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply