- செய்திகள், ஜோதிடம்

ராகு-கேது பெயர்ச்சி

 

அனைத்து ராசிகளுக்குமான பொது ராசிபலன் – பரிகாரம்

08-01-2016 முதல் 27-07-2017 வரை
வாக்கிய பஞ்சாங்கப்பிரகாரம்:
மன்மத வருடம் மார்கழி மாதம் 23-ஆம் தேதி வெள்ளிக்கிழமை பகல்: 12:01 மணிக்கு மேல் ராகு பகவான் கன்னி ராசியிலிருந்து சிம்ம ராசிக்கும், கேது பகவான் மீன ராசியிலிருந்து கும்பராசிக்கும் பெயர்ச்சியாகின்றனர். ஹேவிளம்பி வருடம் ஆடி மாதம் 11-ஆம் தேதி வியாழக்கிழமை பகல்: 12:37 மணி வரை ராகு சிம்மத்திலும் கேது கும்பத்திலும் சஞ்சாரம் செய்ய இருக்கிறார்கள்.
ஆங்கில தேதிப்படி: 08-01-2016 முதல் 27-07-2017 வரை.
திருக்கணித பஞ்சாங்கப்பிரகாரம்:
மன்மத வருடம் தை மாதம் 15-ஆம் தேதி வெள்ளிக்கிழமை இரவு 11:37 மணிக்கு மேல் பெயர்ச்சியாகும் ராகு கேது இருவரும் ஹேவிளம்பி வருடம் ஆவணி மாதம் 1-ஆம் தேதி வியாழக்கிழமை அதிகாலை: 04:45 மணி வரை ராகு சிம்மத்திலும் கேது கும்பத்திலும் சஞ்சாரம் செய்ய இருக்கிறார்கள்.

ஆங்கில தேதிப்படி: 29-01-2016 முதல் 18-08-2017 வரை.
மேஷம்:
மேன்மையான மேஷராசி அன்பர்களே..
வீரத்திற்கு அதிபதியான செவ்வாய் பகவானின் ஆதிக்கத்தில் பிறந்த   மேஷராசிக்காரர்கள் எடுத்த காரியம் எதுவாக இருந்தாலும் அதில் தன் முத்திரையை அழுத்தமாக பதிப்பார்கள். வெற்றி ஒன்றையே குறிக்கோளாக கொண்டு செயல்படுவதால் மற்றவரிடம் இவர்கள் பேசுவதும் பயனுள்ளதாகவே இருக்கும். நம்பிக்கைக்குரிய போர்ப்படைத் தளபதி போன்று எவருக்கும் பக்கபலமாக இருந்து விசுவாசம் காட்டுவார்கள். ராசிக்கு ஐந்தாமிடத்தில் ராகுவும் பத்தாமிடத்தில் கேதுவும் சஞ்சாரம் செய்யவிருக்கும் காலகட்டம் ஜோதிட சாஸ்திரப்படி சாதகமில்லை என்றாலும் ஏற்கனவே சிம்மத்தில் அமர்ந்திருக்கும் குருபகவான் உங்களை சிம்மாசனத்தில் அமரவைத்து அழகு பார்க்கத்தான் போகிறார். குரு பகவானை மிஞ்சி ராகுவும் கேதுவும் உங்களுக்கு கெடுதல் புரிய முடியாது என்பதை புரிந்து கொள்ளுங்கள். பூவோடு சேர்ந்த நாறும் மணக்கும் என்பது போல குருவோடு சேர்ந்த ராகுவும் சுபகிரகமாக மாறி நன்மைகளையே செய்வார். குரு பார்வை பட்டால் அசுப கிரகமும் சுபத்தன்மை பெறும் என்பதால் கேதுவும் நல்லவராகவே இருப்பார். ராகுவும் கேதுவும் உங்கள் ராசிக்கு சாதகமான நட்சத்திரக்கால்களில் பயணங்கள் மேற்கொள்ள இருப்பதால் எதற்கும் அஞ்சாமல் வேலைகளில் கவனம் செலுத்துங்கள். குழந்தையில்லாத தம்பதியருக்கு பிள்ளை பாக்யம் கிடைக்கும். ஆன்மிக தொடர்புடைய பொருட்களை விற்பவர்கள் பெரும் லாபங்களை ஈட்டுவார்கள். தொழில் அதிபர்கள் பழைய கடன்களை வசூலிப்பதில் தீவிரமாவார்கள். பணம் சம்மந்தப்பட்ட விஷயங்களை கவனமாக கையாள வேண்டும்.
பரிகாரம்: செவ்வாய்க்கிழமை தோறும், அருகிலிருக்கும் சிவன் சன்னதியில் வீற்றிருக்கும் முருகனுக்கு  பாலாபிஷேகம் செய்து வழிபடவும்.

ரிஷபம்:
சாதுர்யமிக்க ரிஷபராசி அன்பர்களே..!
மனோபலத்தைக் கொடுப்பவரான சந்திரபகவான் உச்சம்பெறும் ஸ்தானத்தில் பிறந்த ரிஷபராசிக்காரர்களோடு எவரும் மூளை விளையாட்டில் மோதி ஜெயிக்க முடியாது. அனுபவங்கள் உங்களின் திறமைகளை பட்டைதீட்டி இருக்கும். அரசியல் சாணக்கியத்தனம் நிரம்பப் பெற்று இருப்பீர்கள். ராசிக்கு நான்காமிடத்தில் அமரும் ராகுவும் பத்தாமிடத்தில் சஞ்சாரமாகும் கேதுவும் உங்களுக்கு பெரிய நன்மைகளை செய்யப்போவதில்லை என்றாலும் எந்தவித கெடுதலும் செய்யமுடியாது. இருவரும் சராசரியான பலன்களையே கொடுப்பார்கள். உங்கள் ராசிக்கு நான்காமிடத்து அதிபதியான சூரியனின் நட்சத்திரக்காலில் ராகு பயணத்தை துவக்குவதால் சிலருக்கு பூர்வீக இடங்களை நோக்கிய மாறுதலை ஏற்படுத்திக் கொடுப்பார். சொத்துக்களை விற்று விரைவில் காசாக்குவீர்கள். வீட்டைக் காலி பண்ணமுடியாது என மல்லுக்கட்டிக் கொண்டிருக்கும். ஆன்மீக ஸ்தலங்கள் கட்டிட அடிக்கல் நாட்டிவிட்டு பண நெருக்கடியால் நின்றுவிட்ட வேலைகளை மீண்டும் ஆரம்பிக்கும் படியான சூழல்கள் அமையும். மழை வெள்ளத்தால் வீணாகிப் போன பொருட்களை வாங்குமளவிற்கு பொருளாதார நிலையில் உயர்வுகள் வந்துசேரும். மருத்துவத்துறை சம்மந்தப்பட்ட பணியாளர்களுக்கு பணவரவுகள் சாதகமாக இருக்கும். தாயாரின் உடல்நலனில் அக்கறையோடு இருப்பது நல்லது. வெளிநாட்டில் படிக்கும் பிள்ளைகள் திருப்தியாக திரும்பி வந்து புதுவேலைகளை லாபத்துடனே துவக்குவார்கள். வியாபாரிகள் வருமானத்திற்கான புது ரூட்டுகளைப் பிடிப்பார்கள். இன்ஜினியரிங் மாணவர்கள் படிக்கும் போதே கேம்பஸ் இன்டர்வியூவில் பாஸ் ஆகி வேலையில் சேர்வார்கள். புதுமணத் தம்பதிகளுக்கு குழந்தைச் செல்வம் கிடைக்கும்.
பரிகாரம்: வெள்ளிக்கிழமை தோறும், அருகிலிருக்கும் அம்மன் கோவிலில் வீற்றிருக்கும் கர்ப்பகிரக தாயாருக்கு எலுமிச்சை நெய்தீபம் ஏற்றி வழிபடவும்.

மிதுனம்:
மென்மையான மிதுனராசி அன்பர்களே..!
அறிவுக்கு அதிபதியான புதன் கிரகத்தின் ஆதிக்கத்தில் பிறந்த நீங்கள் எவர் சொல்லுக்கும் அடங்கும் தன்மையற்றவர்கள். எடுப்பார் கைப்பிள்ளையாக இருக்க மாட்டார்கள். சுயமாக சிந்தித்து சரியென பட்டால் மட்டுமே களத்தில் இறங்குவார்கள். நல்லவருக்கு நல்லவராக நம்பி வருபவர்களுக்கு தோள்கொடுக்கும் தோழனாக இருப்பார்கள். ராசிக்கு மூன்றாமிடத்தில் ராகுவும் ஒன்பதாமிடத்தில் கேதுவும் உலாவுவது உங்களுக்கு சாதகமான விஷயம்தான் என்றாலும் இளைய சகோதர வழி பணம் கொடுக்கல் வாங்கல் விஷயங்களால் தேவையற்ற பிரச்னைகள் எழ வாய்ப்புள்ளது. எனவே கவனமுடன் இருப்பது நல்லது. உழைப்பிற்கு மீறிய வருமானங்களால் வங்கி சேமிப்புகள் உயரும். தகப்பனாரின் மருத்துவசெலவுகள் மேலோங்கும். சனிபகவான், குருபகவான், மற்றும் ராகு,கேது என அனைத்து கிரகங்களும் சாதகமாக இயங்க இருப்பதால் சற்றே தலைக்கணம் அதிகரிக்க வாய்ப்புள்ளதால் உறவினர்களிடம் கெட்டபெயர் வாங்க நேரிடலாம்.  ஓவர் ஸ்மார்ட் எதிர்கால வாழ்க்கைக்கு ஆகாது என்பதை புரிந்து செயல்படுங்கள். வாங்குங்கள். பெண்களின் புதிய தொழில் முயற்சிகள் வெற்றிகரமாக இருக்கும். வண்டி வாகனங்கள் வாங்கும் முடிவுகள் சாதகமாக இருக்கும். கல்வியில் பிள்ளைகள் வெளுத்துக் கட்டுவார்கள். அரசுப் பணியாளர்கள் எதிர்பார்க்கும் இடங்களுக்கு இடமாறுதல்களும் பதவி உயர்வுகளும் கிடைக்கும். வணிகர்கள் தங்கள் கடைகளின் கிளைகளை விரிவுபடுத்தும் அளவுக்கு வியாபாரமும் வருமானமும் பெருகும். திருமண வயதை கடந்து விட்ட மகளுக்கு நல்லவரன் அமைந்து கெட்டிமேளச் சத்தம் வீட்டில்  கேட்கும்.
பரிகாரம்: அருகிலிருக்கும் பெருமாள் கோவிலில் கர்ப்பகிரகத்தில் வீற்றிருக்கும் நாயகருக்கு துளசிமாலை சாற்றி புதன்கிழமை தோறும் வழிபடவும்.

கடகம்:
கன்னியமிக்க கடகராசி அன்பர்களே..!
நிறைந்த செல்வங்களைக் கொடுக்கக் கூடிய குருபகவான் உச்ச பலம் பெறும் கடகராசியில் பிறந்தவர்கள் கௌரவமும் குடும்ப பாரம்பரியமும் கெடாமல் வாழ்க்கையை அமைத்துக் கொள்பவதில் கெட்டிகாரர்.  சமூகசிந்தனை கொண்டவர்களாக இருந்தாலும் குடும்பத்திற்காக எதையும் தூக்கி எறியும் குணமுடையவர்களாக இருப்பார்கள். மற்றவர்களைக் கவரும் விதமாக பேசி கைத்தட்டல்களைப் பெறுவார்கள். ராசிக்கு இரண்டாமிடத்திற்கு வரும் ராகுவும் எட்டாமிடத்திற்கு வருகிற கேதுவும் ஜோதிடசாஸ்திரப்படி  சாதகமான இடத்திற்கு வரவில்லை என்றுதான் சொல்லவேண்டும். எனவே, திருமண வயதை கடந்துவிட்டவர்கள் சுய ஜாதகங்களை தெளிவாக கணித்து மணமுடிப்பது நல்லது. குருபகவான் சாதகமான இடத்தில் இருக்கும் காலகட்டம் வரை பெரிய பாதிப்புகள் நிகழ வாய்ப்பில்லை. ஏற்கனவே எலியும் பூனையும் போல மோதிக்கொண்டிருக்கும் காதலர்கள் தங்கள் உறவை தக்க வைத்துக்கொள்ள போராட வேண்டியதிருக்கும். தொழிலதிபர்கள் புதிய முதலீடுகள் குறித்து முடிவெடுக்கும் போது சற்று நிதானித்து செயல்படுவது தேவையற்ற இழப்புகள் ஏற்படுவதை தடுக்கும். எப்போதும் வண்டி வாகனங்களில் சுற்றிக்கொண்டிருப்பவர்கள்  கொஞ்சம் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் எஞ்ஜினை வைத்துக்கொள்ளுங்கள். அம்மா, அப்பாவின் ஆலோசனைகள் கோபத்தை ஏற்படுத்தினாலும் காது கொடுத்துக் கேட்பது தேவையில்லாத பிரச்னைகளை உண்டாக்காது. மாணவிகள் தங்கள் திறமைகளை மதிப்பெண்களில் வெளிப்படுத்துவார்கள். வியாபாரிகள் தங்கள் கடையின் புதியகிளைகளை நம்பிக்கைக்குரியவர்களிடம் ஒப்படைப்பது உகந்ததாக இருக்கும். சினிமா, சின்னத்திரை முயற்சியாளர்களுக்கு அனுபவங்கள் சிறந்த கிரியேட்டிவிட்டியை உருவாக்கிக் கொடுக்கும். பத்திரிக்கையளர்களின் உழைப்பு பலரை உச்சத்தில் அமரவைக்கும்.
பரிகாரம்: திங்கள்கிழமை தோறும் அருகிலிருக்கும் சிவன்கோவிலில் வீற்றிருக்கும் அம்மனுக்கு பாலாபிஷேகம் செய்து வழிபடவும்.

சிம்மம்:
வீரமிக்க சிம்மராசி அன்பர்களே..!
ராஜகிரகமான சூரியனின் ஆதிக்கத்தில் பிறந்த நீங்கள் ‘‘நான் சிம்மராசி..!’’- என்று சொல்லிக் கொள்வதிலேயே பெருமைப்படுவீர்கள். அதிகாரப் பதவிகளுக்கு ஆசைப்படுபவர்களாக மற்றவர் உங்களைக் கருதினாலும் நீங்கள் மனதார எளிமையையே விரும்புவீர்கள். சிலர் வாய்  வார்த்தைகளில் வலிமை காட்டினாலும் மனதுக்குள் குழந்தைத்தனத்தோடே இருப்பீர்கள். ஆயிரம் பேர் கூடி நின்றாலும் அதிகாரம் உங்களைத் தேடியே வரும். ராசியின் மீது அமரும் ராகுவும் ஏழாம் வீட்டில் அமரும் கேதுவும் நம்மை பாடாய்படுத்துவார்கள் என்றுதான் சாஸ்திரம் சொல்கிறது. ஏற்கனவே ஜென்மகுருவால் கஷ்டப்படும் நமக்கு இதென்ன மேலும் சோதனை என எண்ணி குழப்பிக்கொள்ள வேண்டாம். அதிலும் அர்த்தாஷ்டமச்சனியும் நடக்கிறது. எனவே எவ்விஷயத்தையும் மதிநுட்பத்துடன் யோசித்து, அணுகிட பழகிக் கொள்ளுங்கள். சுற்றியிருப்பவர்களின் ஆலோசனைகளையும் கருத்துக்களையும் உள்வாங்கிக் கொண்டு சிந்தித்து செயல்படுவது நன்மை பயக்கும். தொழில் தொடங்கும் முடிவில் இருப்பவர்கள் சேமித்த பணத்தை பத்திரமாக வைத்துகொள்வது நல்லது. நிலத்தின் மீதான முதலீடுகள் பெரும்யோகத்தைக் கொடுக்குமென பேசுபவர்களிடம் கவனமாக பழகுங்கள். வருமானத்திற்கான வழிகளை கவனமாக வகுத்துக் கொள்ளுங்கள். மனைவி மக்களின் ஆலோசனைகளை காதுகொடுத்து கேளுங்கள். மதுவின் பிடியிலிருந்து வெளியேறும் முயற்சிகளை துவக்கினால் உடல் ஆரோக்கியத்தில் பாதிப்பு வராமல் காக்கமுடியும். மாணவர்களை விட மாணவிகள் கல்வியில் கவனமாக இருந்து ஜெயிப்பார்கள். திருமணமாகாத வாலிபர்கள் உடன்பணியாற்றும் பெண்களிடம் சகோதர மனப்பான்மையுடன் பேசுவது நல்லது.
பரிகாரம்: ஞாயிற்றுக்கிழமை தோறும் அருகிலிருக்கும் சிவன் சன்னதியில் கர்ப்பகிரக நாயகருக்கு வில்வஇலை மாலை சாற்றி வழிபடவும்.

கன்னி:
கன்னியமிக்க கன்னிராசி அன்பர்களே..!
கலைஞானங்களுக்கு அதிபதியான புதனின் ஆதிக்கத்தில் பிறந்த மிதுனராசிக்காரர்கள் ரொம்ப ரசனையானவர்கள். எச்சூழலிலும் அனுசரித்துபோகும் பழக்கமிருப்பதால் உங்களை தட்பவெப்பப்புழு என்றே சொல்லலாம். ஏழை எளியவர்களுக்கு உதவிடும் இளகிய மனம் இருக்கும்.  கல்வியில் சிறந்து விளங்கி பெயர் சொல்ல வாழ்வார்கள் சிலருக்கு கல்வியில் தடை ஏற்பட்டாலும் படிக்காத மேதைகளாக இருப்பார்கள். ராசிக்கு பண்ணிரெண்டாமிடத்தில் ராகுவும் ஆறாமிடத்தில் கேதுவும் சஞ்சரிப்பதால் வாழ்வில் புதிய மறுமலர்ச்சியை உண்டாக்குவார்கள் என்றே சொல்ல வேண்டும். தொழிலில் புதிதாக எடுக்கும் முயற்சிகளில் மகத்தான சாதனைகளை நிகழ்த்திக் காட்டுவீர்கள். நீண்டநாள் கடன் பிரச்னைகளை குறுகிய காலகட்டத்தில் அடைத்து முடிக்கும் அளவிற்கு பொருளாதாரம் உயரும். தேவையற்ற செலவுகளை குறைத்து சேமிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். விளையாட்டில் ஆர்வம் உள்ள இளைஞர்கள் பெரிய வாய்ப்புக்களை சுலபமாக அடைவார்கள். பத்திரிகையாளர்களும் எழுத்தாளர்களும் தீர்க்கமான அடையாளங்களை பெறுவார்கள். தொழிலதிபர்கள் வெளிநாடுகள் தொடர்புடன் வருமானங்களை பெருக்குவார்கள். கூட்டுத்தொழிலில் வருமானமின்றி தடுமாறிக் கொண்டிருப்பவர்கள் நிலையான மார்க்கெட்டைப் பிடிப்பார்கள். பங்குசந்தை முதலீட்டாளர்களுக்கு திடீர் லாபங்கள் மனதை ஆசுவாசப்படுத்தும். ஏஜன்ஸி டைப் பிசினஸ்மேன்களின் இன்பாக்ஸ் புதிய ஆர்டர்களால் நிரம்பி வழியும். சந்தை வியாபாரிகள் புதிய கஸ்டமர்களால் நிறைய லாபத்தை ஈட்டுவார்கள். குழந்தை வரம் வேண்டி தவம் கிடப்பவர்களுக்கு இறைவனின் அருட்பார்வை படும். அரசுப் பணியாளர்ககளின் குடும்பங்களில் சுப காரியங்கள் நடந்தேறும். தினக்கூலிகள் மேஸ்திரிகளாக உயர்வார்கள்.
பரிகாரம்: புதன்கிழமை தோறும் அருகிலிருக்கும் பெருமாள் கோவிலில் வீற்றிருக்கும் அம்மன்களுக்கு துளசிமாலை சாற்றி வழிபடவும்.

 

துலாம்:
துடிப்புமிக்க துலாம்ராசி அன்பர்களே..!
ஆயுள்காரகனான சனிபகவானுக்கு பிடித்தமான உச்சவீடான துலாம் ராசியில் பிறந்தவர்கள் நீதிமானாக இருப்பார்கள். அடுத்தவர் காசுக்கு ஆசைப்படாத நியாயவான்களாக இருப்பார்கள். வியாபாரத்தில் கொடிகட்டிப் பறக்கும் இவர்கள் உழைப்பால் உயர்ந்த உத்தமர்களாக இருப்பார்கள். தொழிலில் ஏற்படுகிற ஏற்ற இறக்கங்களைக் கண்டு அஞ்சமாட்டார்கள். சில தத்துவங்களை ஏற்றுக்கொண்டு அதன்படியே  வாழ்க்கையை அமைத்துக் கொள்வதால் இல்லறத்தில் அந்யோன்யம் பளிச்சிடும். ராசிக்கு பதினோராமிடத்தில் ராகுவும் ஐந்தாமிடத்தில் கேதுவும் உலாவும் காலகட்டம் குதூகலம் பொங்கும். தொட்டுவிட்டுப் போன வேலைகளில் மீண்டும் கவனத்தை திருப்புவீர்கள். கடுமையாக உழைத்து சேர்த்தவற்றை இழந்தாலும் கவலைப்படாமல் அடுத்த வேலைகளில் கம்பீரமாக ஈடுபட புதியதெம்பு பிறக்கும். சிலர் இதுவரை சேமித்த பொருளாதாரத்தை சரியான கணக்கு வழக்குகளுக்குள் கொண்டு வருவார்கள். அட்வான்ஸ் கொடுத்து முடிக்க முடியாமல் கிடக்கும் இடத்தை குறுகிய நாட்களுக்குள் முடிக்குமளவிற்கு பணம் கைக்கு வந்துசேரும். புதுமணத் தம்பதிகளுக்கு குழந்தைகள் தாமதமாக கிடைத்தாலும் கணவன் மனைவி பாசத்திற்கு குறைவிருக்காது. தங்கநகை வியாபாரிகளும் தொழிலாளர்களும் வாடிக்கையாளர்களால் புதிய நம்பிக்கை பெறுவார்கள். வக்கீல்களின் குடும்பத்தில் மருத்துவ செலவுகள் குறையும். சினிமா நடிகர் நடிகைகள் கடும் முயற்சிக்கு பிறகே வெற்றிகளை எட்டிப்பிடிப்பார்கள். கணிப்பொறி துறையில் வேலைசெய்யும் பெண்களின் குடும்பப் பிரச்னைகள் பேசித் தீர்க்குமளவிற்கு வந்துசேரும். சிற்பவேலைகள் செய்யும் ஸ்தபதிகளுக்கு வெளிநாடுகளில் இருந்து அழைப்பு வரும். பிரிண்டிங் வல்லுனர்களுக்கு கடும் கிராக்கி ஏற்படும்.
பரிகாரம்: வெள்ளிக்கிழமை தோறும் அருகிலிருக்கும் சிவன் கோவிலில் வீற்றிருக்கும் விநாயகருக்கு அருகம்புல் மாலை சாற்றி வழிபடவும்.

விருச்சிகம்:
விவேகம் நிறைந்த விருச்சிகராசி அன்பர்களே..!
உடல் பலத்திற்கு அதிபதியான செவ்வாய் பகவானின் ஆதிக்கத்தை நிரம்பப் பெற்ற விருச்சிகராசிக்காரர்கள் எக்காரியத்தையும் எடுத்தோம் கவிழ்த்தோம் என முடிப்பவர்கள் அல்ல. நின்று நிதானமாக யோசித்து  வெற்றி கொள்ளக்கூடியவர்கள். எதிர்த்து மோதுகிறவர்களின் பலம் பலகீனம் அறிந்து செயல்படக்கூடியவர்கள். எப்போதும் எவ்விஷயமாக இருந்தாலும் அப்டேட்டாக விரல்நுணியில் வைத்திருப்பார்கள். ராசிக்கு பத்தாமிடத்தில் ராகுவும் நான்காமிடத்தில் கேதுவும் உலாவும் காலம் சாதகமாக இல்லையென்றாலும் நிதானித்து செயல்பட்டு தங்கள் சாதனைகளை நிகழ்த்திக்காட்டுவீர்கள். தங்கள் ராசிக்கு தொழில் ஸ்தானிபதியாகிய சூரியனின் நட்சத்திரக்காலில் ராகு தன் பயணத்தை  மேற்கொள்கிறபடியால் வருமானத்திற்கான வழிகளில் சிறிது சறுக்கல்கள் இருந்தாலும் பாதிப்புகள் பெரிய அளவில் இருக்காது. உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ள தாயாரால் மருத்துவ செலவுகள் அதிகமாக இருந்தாலும் அதற்குண்டான பொருளாதாரச் சூழல் சாதகமாக கை கொடுக்கும். பென்ஷன்தாரர்கள் தங்கள் உடல் ஆரோக்கியத்தின் மீது அதிக அக்கறை செலுத்தவேண்டிவரும். சிலர் பூர்வீக இடங்களை விட்டு வெளியூர்களில் வசிக்க நேரிடலாம். தொழில் நிமித்தமான வெளியூர் பயணங்களில் தொழில் அதிபர்கள் ஏற்றங்களை சந்திப்பார்கள். ஆசிரியர்கள் மாணவர்களிடம் தங்கள் பிள்ளைகள் மீது செலுத்தும் பாசத்திற்கு நிகராக அன்பைப் பொழிவார்கள். பொதுப்பணித்துறை அதிகாரிகள் அதிக வரவுகளுக்கு ஆசைப்பட்டு தேவையில்லாத தொந்தரவுகளில் மாட்டிக்கொள்ளாமல் கவனமுடன் இருக்க வேண்டும். அரசியல்வாதிகள் தங்கள் ஆதரவுகளை பெருக்கிக்கொள்ள மக்களுக்கு நிறைய செலவு செய்ய நேரிட்டாலும் செல்வாக்கு குறையாமல் இருக்கும்.
பரிகாரம்: செவ்வாய்கிழமை தோறும் அருகிலிருக்கும் சிவன் கோவிலில் வீற்றிருக்கும் துர்க்கை அம்மனை குங்குமத்தால் அர்ச்சித்து வழிபடவும்.

தனுசு:
தன்மானமிக்க தனுசுராசி அன்பர்களே..!
அனைவருக்கும் ஆதரவளிக்கும் ஆபத்பாந்தவனான குருபகவானின் அருள்கடாட்சம் பெற்ற தனுசுராசிக்காரர்கள் சமூகத்தில் மதிப்பு குறையாத வாழ்க்கையை அமைத்துக் கொள்வார்கள். கீழ்நிலையிலிருந்து கஷ்டப்பட்டு மேலே வந்தவர்களாக இருப்பதால் அனைத்தும் அத்துபடியாக இருக்கும். தன்னைவிட வயதில் மூத்தோர்களுக்கு கூட ஆலோசனைகளை வாரி வழங்கும் அளவுக்கு அனுபவத்தைப் பெற்றிருப்பார்கள். ராசிக்கு ஒன்பதாமிடத்தில் அமரும் ராகுவும் மூன்றாமிடத்தில் அமரும் கேதுவும் வாழ்க்கைக்கு தேவையான வசதிகளை உங்களுக்கு வாரி வழங்கப் போகிறார்கள். இதுவரை இழந்தது பல லட்சமாக இருந்தாலும் இனி நீங்கள் சம்பாதிக்கப் போவது பல கோடிகளாக இருக்கும். ஓடிப்போனவனுக்கு ஒன்பதில் குரு என்பார்கள். ஒன்பதாமிடத்து குரு சம்பாத்தியத்தை பெருக்கிக்கொடுப்பார். ஒன்பதாமிடத்தில் தனித்து அமர்ந்திருக்கும் குருவோடு ராகுவும் சேர்வது நல்ல அமைப்பாகும். ஏனெனில், தனித்த குரு உதவுவதை விட ராகுவோடு அமர்ந்த குரு பகவான்தான் வீட்டுக்கு மகாலட்சுமியையே அழைத்து வருவார் என்று கூட சொல்லலாம். சிலருக்கு, இளைய சகோதர வழியில் தேவையற்ற வில்லங்கங்கள் ஏற்படும் என்பதால் சொத்து விவகாரங்களில் விட்டுக்கொடுத்து போவது நல்லது. கோவில் கட்டுமான பணிகளில் தங்களால் இயன்ற உதவிகளைச் செய்திடுங்கள். தந்தையின் உடல்நிலை சீராக இருக்கும். லாரி வைத்து தொழில்புரிபவர்களுக்கு பண வரத்துகள் நன்றாக இருக்கும். கணவன் மனைவி உறவில் அந்யோன்யம் அதிகமாகும். குழந்தை வேண்டி காத்திருப்பவர்கள் வீட்டில் விரைவில் தொட்டில் கட்ட வேண்டிவரும்.
பரிகாரம்: வியாழக்கிழமை தோறும் அருகிலிருக்கும் சிவன் கோவிலில் வீற்றிருக்கும் தட்சணாமூர்த்திக்கு மஞ்சள் நிற ஆடை அணிவித்து வழிபடவும்.

மகரம்:
மனோபலமிக்க மகரராசி அன்பர்களே..!
நீதிமானான சனிபகவானின் ஆளுமைகளை முழுமையாகப் பெற்றுள்ள மகரராசிக்காரர்கள் தான் பிடித்த முயலுக்கு மூணு காலு என பேசிக்கொண்டே இருப்பார்கள். தனக்கு தெரிந்ததுதான் சரியென்று நம்புவார்கள். ஆனால், மனதில் ஒன்றை வைத்துகொண்டு நாக்கால் இனிக்க இனிக்க பேசும் பழக்கம் இவர்களிடம் இருக்காது. உள்ளதை உள்ளபடி பேசுவதால் சிறந்த தலைமைப்பண்பு உடையவர்களாக இருப்பார்கள். ராசிக்கு இரண்டில் கேதுவும் எட்டில் ராகுவும் உலாவுவது சாதகமானதல்ல என்று ஜோதிட சாஸ்திரங்கள் கூறுகிறது. ஆனால், மற்ற கிரகங்களின் சஞ்சார நிலைகளையும் கணக்கில் எடுத்துக் கொண்டோமானால் பாதிப்புகள் பெரிதாக இருக்க வாய்ப்பில்லை. கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜயோகம் எனவும் ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அதன்படி பார்த்தோமானால் ராசிக்கு அசுபகிரகமான குரு சிம்மத்தில் அமர்ந்திருப்பது, உழைப்பின் மூலம் பெரு வருமானங்களை ஈட்டி சம்பாதிக்கும் யோகமுண்டு. அதேபோல, ராசிக்கு பதினோராமிடத்தில் இருக்கும் சனிபகவானும் உங்களுக்கு நன்மைகளை வாரி வழங்குவார். மொத்தக்கடைகளில் பணிபுரியும் பெண்களின் குடும்ப பிரச்னைகள் முடிவுக்கு வரும். புதுமணத் தம்பதிகள் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்துப் போவது நல்லது. பத்திரிக்கையாளர்கள் தங்கள் திறமைகளை வளர்த்து கொள்ளும் விதமான சம்பவங்கள் நடந்து அனுபவ அறிவைப் பெறுவார்கள். ஆன்மிக ஸ்தலங்களில் பணிபுரியும் பெரியோர்களுக்கு ஞானம் மேலொங்கும். லாரி உரிமையாளர்கள் வண்டி வாகனங்களை கவனமுடன் கையாளுங்கள்.  மோட்டார் வாகனக்கடன் பெறும் முடிவை தள்ளி வைப்பது நல்லது.
பரிகாரம்: ஞாயிற்றுக்கிழமை தோறும் அருகிலிருக்கு சிவன் கோவிலில் வீற்றிருக்கும் சண்டிகேசுவரருக்கு ஆரஞ்சு நிற ஆடை அணிவித்து வழிபடவும்.

கும்பம்:
குதூகலமிக்க கும்பராசி அன்பர்களே..!
மனஉறுதியைக் கொடுக்கும் சனிபகவானின் ஆதிக்கத்தில் பிறந்த கும்பராசிக்காரர்களின் திறமைகளை எவரும் புரிந்து கொள்ளவே முடியாது. தினம் புதியபுதிய வார்த்தைகளை பேசி பிரமிக்க வைப்பார்கள்.  ‘இதெல்லாம் எங்கய்யா படிச்ச’ என்று தகப்பனார் கேட்குமளவிற்கு ஆச்சரியப்படுத்தி விடுவார்கள். எளிமையையும் தன்னடக்கத்தையும் எப்போதும் உடன் வைத்திருப்பார்கள். ராசியில் கேதுவும் ஏழாமிடத்தில் ராகுவும் அமர்ந்து உங்களை பட்டை தீட்டிய தங்க ஆபரணமாக்க போகிறார்கள். பளபள பொருட்கள் எல்லாமே படாதபாடு பட்டுத்தான் அந்த நிலையை அடைந்திருக்கின்றன. அதேபோல வாழ்க்கையில் வெற்றி பெற்றவர்கள் அனைவருமே பல கஷ்டங்களையும் அவமானங்களையும் சந்தித்தவர்கள்தான். எனவே, உங்களுக்கான நெருக்கடிகளை சாதகமாக மாற்ற முயலுங்கள். ராசிக்கு யோகங்களைக் கொடுக்கும் கிரகங்களின் நட்சத்திரக்காலில்தான் ராகுவும் கேதுவும் பயணம் மேற்கொள்கிறார்கள். எனவே, பெரிய பாதிப்புகள் வந்துவிடாது எனவே எதைப்பற்றியும் யோசிக்காமல் உறுதியோடு செயல்படுங்கள், எந்த வேலைகளையும் ஆர்வத்தோடு செய்வதால் உயரதிகாரிகளின் பாராட்டுக்களைப் பெறுவீர்கள். தனியார் கம்பெனிகளில் வேலைசெய்வோர் பிரமோஷன்களால் சந்தோஷம் கொள்வீர்கள். மாணவச்செல்வங்கள் கல்வியில் கெட்டிக்காரத்தனமாக இருப்பார்கள். காதலர்கள் வீட்டில் திருமணம் குறித்து பேசுவதன் மூலம் முடிவுகள் சாதகமாக அமையும்.  திருமண தாமதங்களால் தவித்துக் கொண்டிருப்பவர்கள் தெய்வ வழிபாடுகள் மூலம் வாழ்க்கையை மகிழ்ச்சியாக அமைத்துக் கொள்ள முடியும். சினிமா தயாரிப்பாளர்கள் பணத்தை பாதுகாப்பது மகிழ்ச்சிக்கு பாதுகாப்பானது. நில புரோக்கர்களுக்கு புதியதொழில் தொடர்புகள் கை கொடுக்கும்.
பரிகாரம்: அருகிலிருக்கும் சிவன் கோவிலில் வீற்றிருக்கும் பைரவருக்கு கறுப்பு நிற ஆடை அணிவித்து சனிக்கிழமை தோறும் வழிபடவும்.

மீனம்:
மென்மையான மீனராசி அன்பர்களே..!
அள்ளஅள்ள குறையாத செல்வங்களை வாரி வழங்கும் சுக்ரபகவானின் உச்சவலிமை வெளிப்படும் வீட்டை ராசியாகக்கொண்ட நீங்கள் அடுத்தவருக்கு உதவிடுவதில் நவீன பாரிவள்ளலாகவே விளங்குவீர்கள். மற்றவர்களின் கஷ்டங்களை தனதாக்கிக் கொண்டு அவர்களுக்கு இயன்ற அளவு உதவிகள் செய்திட முயல்வீர்கள். சிக்கனம் சேமிப்பிலும் உங்களை அடித்து கொள்ள ஆளே கிடையாது என்று சொல்லலாம். பாத்திரம் அறிந்து பிச்சையிடும் பக்குவமிக்கவர்கள் நீங்கள். ராசிக்கு  ஆறாமிடத்தில் ராகுவும் பண்னிரெண்டாமிடத்தில் கேதுவும் அமர்ந்து நீண்டநாள் பிரச்னைகளுக்கு முடிவு கட்டுவார்கள். அட்டமத்துச்சனி, கண்டச்சனி என்று கடன்மழையில் பாடாய்பட்டவர்கள் இப்போது ஒரு வருடமாகத்தான் சனியின் பிடியிலிருந்து மீண்டாலும் கடன் தூரல்கள் ஓய்ந்தபாடின்றி தவித்தவர்களுக்கு அனைத்து பிரச்னைகளும் முடிவுக்கு வரும். அதேபோல வெளியிடங்களில் இருந்து பணம் வரவேண்டியவர்களுக்கும் வந்து சேரும். தயாரிப்பாளர்கள் சினிமா தொழிலில் இதுவரை இழந்தவை ரெட்டிப்பாகும்.  வழக்கறிஞர்கள் தங்கள் திறமைகளை வெளிக்கொணரும் விதமான வாய்ப்புகள் அமையும். வம்புவழக்கு என நீதிமன்றங்களுக்கு நடையாய் நடப்பவர்களுக்கு பிரச்னைகள் முடிந்து நிம்மதி பிறக்கும். அரசியல்வாதிகள் தலைமையின் நன்மதிப்பைப் பெற்று புதுப்பதவிகளில் அலங்காரமாக அமர்வார்கள். பேன்ஸி வியாபாரிகள் வருமானங்களால் பளிச்சிடுவார்கள். தென் மாவட்டங்களில் இருந்து வந்து தலைநகரங்களில் வருமானத்திற்காக போராடிக் கொண்டிருக்கும் குடும்பங்களில் ஏற்பட்ட பிரச்னைகள் முடிவுக்கு வரும். அரசுப் பணியாளர்களின் புதுவீடு வாங்கும் முயற்சிகள் சாதகமாக இருக்கும். வண்டிவாகனங்கள் வாங்கும் முடிவிலிருப்பவர்கள் தாராளமாக களத்தில் இறங்கலாம்.
பரிகாரம்: செவ்வாய்கிழமை தோறும் அருகிலிருக்கும் சிவன் கோவிலில் வீற்றிருக்கும் சண்டிகேசுவரிக்கு செவ்வாடை அணிவித்து வழிபட்டு வரவும்.

Leave a Reply