- சினிமா, செய்திகள்

ரஜினி படம் வெளிவர உதவிய கமல்

 

விக்ரம் பிரபு நடிப்பில் டைரக்டர் ஜி.என்.ஆர். குமாரவேலன் இயக்கி வரும் வாகா படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடந்தது.  விழாவில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட டைரக்டர் மகேந்திரன் நன்றியின் வெளிப்பாடாக திகழ்ந்தார். அவர் பேசியதாவது. “இந்த மேடையில் நான் நிற்கக் காரணமே கமல் தான் அவர் மகா கலைஞர். மற்றவர்களுக்கு ஒன்று என்றால் ஒடோடி வருபவர். ரஜினியை நான் இயக்கிய முள்ளும் மலரும் படத்தின் ஒரேயொரு காட்சியை படமாக்கினால் படம் முடிந்து விடும். ஆனால் அந்தக் காட்சியை எடுக்க தயாரிப்பாளர் முன்வரவில்லை. அதுவரை தயாரான படத்தின் டபுள் பாசிட்டிவ் பார்த்த தயாரிப்பாளர், `இனி என்னால் படத்துக்கு சல்லிக்காசு தர முடியாது' என்று கூறி விட்டார். நான் இடிந்து போனன்.

அபபோதெல்லாம் நாங்கள் கமல்ஹாசனின் ஆழ்வார்பேட்டை வீட்டில் ஒன்று கூடுவோம். சினிமா பற்றி பேசிக்கொண்டிருப்போம். அப்போது கமலிடம்  பேச்சுவாக்கில் ஒரேயொரு நாள் படப்பிடிப்பு நடக்காததால் முள்ளும் மலரும் படம் வராமல் இருப்பதை சொன்னேன். அப்போதும் கூட அவர் உதவ வேண்டும் என்ற நோக்கத்தில் சொல்லவில்லை. நட்பு முறையில் மட்டுமே சொன்னேன். ஆனால் கமல் உடனே எனக்காக தயாரிப்பாளரை போய் பார்த்தார். `ஒருநாள் எடுக்க வேண்டிய படப்பிடிப்புக்கு மட்டும் ஏற்பாடு செய்யுங்கள்' என்று சொல்ல, அவரோ `இனி அந்தப் படத்துக்கு சல்லிக்காசு செலவழிப்பதாக இல்லை' என்று முடிவாக கூறி விட, அப்போதும் கமல் விட்டாரில்லை. `அப்படியானால் அந்த ஒரு நாள் படப்பிடிப்பை என் செலவில் நடத்தி முடிக்கட்டுமா?' என்று கேட்க, தயாரிப்பாளரோ `அது உன் பாடுப்பா' என்று சொல்லி விட்டார். மறுநாளே கமல் அந்தப் படத்தில் வரும் `செந்தாழம்பூவில் வந்தாடும் தென்றல்' பாடலின் `லீடு'க்கான காட்சிகளை ஒரே நாளில் தனது செலவில் படம் பிடித்துக் கொடுத்தார். அதன்பிறகு படம் ரிலீசாகி அதற்குக் கிடைத்த வரவேற்பை நீங்கள் அறிவீர்கள். இத்தனைக்கும் நான் இயக்கும் படம் என்பதற்காக உதவ முன்வந்த கமல், படத்தின் கதை என்ன என்பது பற்றிக் கூட கேட்கவில்லை. என் மீதான அவரின் அந்த நம்பிக்கை தான் இன்று இந்த இடத்தில் என்னை நிறுத்தியிருக்கிறது.''

நடிகர் கமல்ஹாசன் விழாவில் பேசும்போது, “சிவாஜி குடும்பத்தின் மூத்த மகனாக இந்த விழாவுக்கு வந்திருக்கிறேன். நடிகர் திலகம் என்று போற்றப்பட்ட அவரது மகன்களின் அடக்கம் என்னை ஆச்சரியப்படுத்துகிறது. பிரபுவைப் பார்த்தால் நடிகர் திலகத்தின் வாரிசு என்ற சுவடே இல்லாமல் இருப்பார். அவர் மகன் விக்ரமும் அப்படி அவையடக்கமாக இருக்கிறார். இப்படிப்பட்ட குடும்பத்தின் பண்பையும் அவையடக்கத்தையும் நான் என் மகள் ஸ்ருதியிடம் சொல்ல இருக்கிறேன். இது என் குடும்ப விழா'' என்றார்.

விழாவில் `வாகா' படத்தின் ஆடியோவை நடிகர் கமல்ஹாசன் வெளியிட டைரக்டர் மகேந்திரன் ெபற்றுக் கொண்டார்.

Leave a Reply