- செய்திகள், மாநிலச்செய்திகள்

யோகா, ஆயுர்வேதத்தை ஊக்குவிக்க உலக சுகாதார அமைப்புடன் ஒப்பந்தம்

 

புதுடெல்லி, மே 16-

பாரம்பரிய மருத்துவ முறைகளான யோகா, ஆயுர்வேதம், யுனானி மற்றும் பஞ்சகர்மாவை உலக அளவில்  ஊக்குவிக்க, மத்திய ஆயுஷ் அமைச்சகம், உலக சுகாதார அமைப்பு (W.H.O.) ஆகியவற்றுக்கு இடையே ஒப்பந்தம் கையொப்பம் ஆகி உள்ளது.

ஜெனிவாவில் உள்ள உலக சுகாதார அமைப்பின் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடந்த நிகழ்ச்சியில், மத்திய ஆயுஷ் அமைச்சகத்தின் செயலாளர் அஜித் எம். ஷரன் மற்றும் டபிள்யு. எச்.ஓ.அமைப்பின் இணை இயக்குநர் மரியே கெய்னி முன்னிலையில் ஒப்பந்தம் கையொப்பமானது.

இது குறித்து மத்திய ஆயுஷ் அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில் கூறி இருப்பதாவது:

மத்திய ஆயுஷ் அமைச்சகம் மற்றும் உலக சுகாதார அமைப்பு ஆகியவை இணைந்து திட்ட ஒத்துழைப்பு ஒப்பந்தத்தில் கையொப்பம் இட்டுள்ளன. இதன்படி, பாரம்பரிய மருத்துவத்தை தரமான, பாதுகாப்பாக மற்றும் சிறந்த முறையில் ஊக்குவிக்க 2016-2020-ம் ஆண்டு வரை ஒத்துழைப்புடன் செயல்படுவது என்று ஒப்பந்தம் செய்யப்பட்டது.

இதன்மூலம் இந்தியாவின் பாரம்பரிய மருத்துவ முறைகள் சர்வதேச அளவில் ஊக்குவிக்கப்படும்.

Leave a Reply