- உலகச்செய்திகள், செய்திகள், வணிகம்

யுவான் மதிப்பு சரிவு, மத்திய கிழக்கு நாடுகளில் பதற்றம் மீண்டும் வில்லனாக மாறிய சீனா

புதுடெல்லி, ஜன.5:-
நம் நாட்டு பங்குச் சந்தைகளுக்கு மீண்டும் ஒரு கசப்பான அனுபவத்தை சீனா நேற்று கொடுத்தது. சீனாவின் தொழிற் துறை உற்பத்தி சரிவு, யுவான் மதிப்பு வீழ்ச்சி, மத்திய கிழக்கு நாடுகளில் பதற்றம் போன்றவற்றால் நேற்று நம் நாட்டு பங்குச் சந்தைகளில் வர்த்தகம் அதாள பாதாளத்தில் வீழ்ந்தது. மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 537 புள்ளிகளை இழந்தது.
பழைய வரலாறு
கடந்த 2014 செப்டம்பர் 29-ந் தேதி நம் நாட்டு பங்குச் சந்தைகளுக்கு கருப்புப் தினமாக அமைந்தது. சீன நிலவரங்கள் தான் அதற்கு காரணம். சீனாவின் மைய வங்கி யுவானின் பணமதிப்பை குறைத்ததால்  சர்வதேச பங்குச் சந்தைகளில் பலத்த அடி விழுந்தது. அதன் தாக்கம் நம் நாட்டு  பங்குச் சந்தைகளிலும் எதிரொலித்தது. அன்று மட்டும் சென்செக்ஸ் 1,624  புள்ளிகளை இழந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த ஆண்டில் பங்கு வர்த்தகம் புதிய உச்சத்தை தொடும் என்று நிபுணர்கள் ஆருடம் கூறினர். அதற்கு ஏற்றார்போல் நம் நாட்டு பங்குச் சந்தைகளில் கடந்த வெள்ளிக்கிழமையன்று வர்த்தகம் சிறப்பாக இருந்தது. முதலீட்டாளர்களிடமும் நம்பிக்கை ஏற்பட்டது இந்த ஆண்டில் பங்கு வர்த்தகம் கை கொடுக்கும் என்று. ஆனால் அந்த நம்பிக்கையை தவிடு பொடியாக்கும் வகையில் அமைந்தது நேற்றைய பங்கு வர்த்தகம். நம் நாட்டு பங்குச் சந்தைகளுக்கு மீண்டும் நேற்று வில்லனானது சீனா.
சீனாவின் பங்குச் சந்தைகளில் இந்த ஆண்டின் முதல் வர்த்தக நேற்று தொடங்கியது. வர்த்தகம் தொடக்கத்திலேயே அந்நாட்டு பங்குச் சந்தை குறியீட்டு எண்கள் 5 சதவீதம் சரிந்தது. இதனையடுத்து அங்கு நாடு முழுவதும் பங்கு வர்த்தகம் சிறிது நேரம் நிறுத்தப்பட்டது. பின்பு வர்த்தகம் தொடங்கிய போது குறியீட்டு எண்களின் சரிவு 7 சதவீதத்தை எட்டியதை அடுத்து நேற்று முழுவதும் பங்கு வர்த்தகம் நிறுத்தப்பட்டது.
சீன பங்குச் சந்தைகளை பதம் பார்த்தவை
தொழிற் துறை உற்பத்தி
யுவான் மதிப்பு வீழ்ச்சி
பங்கு விற்பனைக்கான தடை விலகுவது
யுவான் குறித்த மதிப்பீடுகள்
தொழிற் துறை உற்பத்தி
சீனாவின் தொழிற் துறை கடந்த டிசம்பர் மாதத்தில் 25 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடும் பின்னடைவை சந்தித்தது. இது சீனாவின் பொருளாதார வளர்ச்சி மந்தநிலையை உறுதிப்படுத்துவது போல் அமைந்தது.
யுவான் மதிப்பு வீழ்ச்சி
சீன மைய வங்கி யுவானின் பரிந்துரை விலையை நான்கரை ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குறைத்தது. கடந்த 2015-ம் ஆண்டில் யுவானின் மதிப்பு 5 சதவீதம் வீழ்ந்தது. இந்த நிலையில் சீன மைய வங்கியின் இந்த நடவடிக்கையை மேலும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.
பங்கு விற்பனைக்கான தடை நீங்குவது
கடந்த கோடை காலத்தில் சீன பங்குச் சந்தைகளில் பெரும் சரிவை தடுக்கும் நோக்கில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் முக்கிய பங்குதாரர்கள் 6 மாதத்துக்கு பங்குகளை விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டது. இந்த தடை வரும் 8-ந் தேதி முடிவடைகிறது. அதன் பிறகு பங்கு விற்பனை பெரிய அளவில் நடைபெறும் என்ற எதிர்பார்ப்பில் முதலீட்டாளர்கள் நேற்று பங்குகளை அதிக அளவில் விற்பனை செய்தனர். இதுவும் பங்கு வர்த்தகத்தை பாதியில் நிறுத்த காரணமாக அமைந்தது.
யுவான் குறித்த மதிப்பீடுகள்
இந்த ஆண்டிலும் யுவான் மதிப்பு வீழ்ச்சி காணும். 4 முதல் 5 சதவீதம் வரை யுவான் மதிப்பு சரியும் என்று சர்வதேச நிபுணர்கள் மதிப்பீடு செய்துள்ளனர். இதுவும் அந்நாட்டு பங்கு வர்த்தகத்துக்கு எதிராக அமைந்தது.
சர்வதேச பங்குச் சந்தைகளில் சீன நிலவரம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. ஐரோப்பிய, ஆசிய பங்குச் சந்தைகள் ஆட்டம் கண்டன. இதன் தாக்கம் இந்திய பங்குச் சந்தைகளிலும் எதிரொலித்தது.
பெட்ரோலிய கச்சா எண்ணெய் விலை திடீர் உயர்வு
சவுதி அரேபியாவில் ஷியா முஸ்ஸிம் பிரிவு தலைவரின் தலை துண்டிக்கப்பட்டு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஈரானில் உள்ள சவுதி தூதரகம் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. இது அந்த 2 நாடுகளுக்கு இடையே பெரும் பதற்றமான சூழ்நிலையை உருவாக்கி விட்டது. இதனால் நேற்று சர்வதேச சந்தையில் பெட்ரோலிய கச்சா எண்ணெய் விலை 2 சதவீதம் அதிகரித்தது. பெட்ரோலிய கச்சா எண்ணெய் விலை திடீர் உயர்வும் நம் நாட்டு பங்கு வர்த்தகத்தை பதம் பார்த்து விட்டது.
உள்நாட்டு நிலவரங்கள்
சர்வதேச நிலவரங்களுடன் போட்டியிடுவது போல் உள்நாட்டு நிலவரங்களும் பங்குச் சந்தைகளுக்கு ஆப்பு வைத்தன.
உற்பத்தி வளர்ச்சி சுருங்கியது
உற்பத்தி வளர்ச்சி கடந்த 2 ஆண்டுகளில் முதல் முறையாக கடந்த டிசம்பர் மாதத்தில் குறைந்தது. புதிய ஆர்டர்கள் குறைந்தது, மழை வெள்ளத்தால் தயாரிப்பு பணிகள் பாதிப்பு போன்றவையே இதற்கு காரணம்.
ரூபாய் மதிப்பு வீழ்ச்சி
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு சரிந்ததும் பங்கு வர்த்தகத்தின் பின்னடைவுக்கு வழி வகுத்தது.
மும்பை பங்குச் சந்தையில் எரிசக்தி, தொலைத்தொடர்பு, மருந்து, வங்கி, வாகனம், நுகர்வோர் சாதனம், உலோகம், எண்ணெய் மற்றும் எரிவாயு, மின்சாரம், ரியல் எஸ்டேட் உள்பட அனைத்து துறைகளின் குறியீட்டு எண்களும் இறங்கின.
சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவன பங்குகளில் விப்ரோ, இந்துஸ்தான் யூனிலீவர், ஏசியன் பெயிண்ட்ஸ் ஆகிய 3 பங்குகளின் விலை மட்டும் அதிகரித்தன. டாட்டா மோட்டார்ஸ், பார்தி ஏர்டெல், அதானி போர்ட்ஸ், பி.எச்.இ.எல்., எச்.டீ.எப்.சி., ஸ்டேட் வங்கி, கெயில், லுப்பின் உள்பட 27 நிறுவன பங்குகளின் விலை சரிந்தன.
மும்பை பங்குச் சந்தையில் வர்த்தகத்தின் நிறைவில் சென்செக்ஸ் 537.55 புள்ளிகள் சரிந்து 25,623.35 புள்ளிகளில் முடிவுற்றது. வர்த்தகத்தின் இடையே அதிக அளவாக 26,116.52 புள்ளிகளுக்கும், குறைந்த அளவாக 25,596.57 புள்ளிகளுக்கும் சென்றது.
தேசிய பங்குச் சந்தையில் வர்த்தகத்தின் முடிவில் நிப்டி 171.90 புள்ளிகள் வீழ்ந்து 7,791.30 புள்ளிகளில் நிலை கொண்டது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக 7,937.55 புள்ளிகளுக்கும், குறைந்தபட்சமாக 7,781.10 புள்ளிகளுக்கும் சென்றது.

Leave a Reply