- செய்திகள்

யானை தாக்கி விவசாயி சாவு சிறுமுகை அருகே பரிதாபம்…

மேட்டுப்பாளையம், ஆக. 29- சிறுமுகை அருகே யானை தாக்கி விவசாயி பரிதாபமாக உயிரிழந்தார்.

விவசாயி

கோவையை அடுத்த மேட்டுப்பாளையம் சிறுமுகை அருகே உள்ள சித்தேபாளையம் பகுதியை சேர்ந்தவர் கணேசமூர்த்தி (வயது 48). விவசாயி. இவரது மனைவி ஏற்கனவே இறந்து விட்டார். இவருக்கு சியாமளா (22) , நந்தினி (20) ஆகிய 2 மகள்கள் உள்ளனர். சியாமளாவுக்கு திருமணமாகி விட்டது. நந்தினி கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். கணேசமூர்த்தி தனது தோட்டத்தில் மசால் புல் மற்றும் மிளகாய் செடி பயிரிட்டு இருந்தார்.

காட்டு யானை

இந்த நிலையில் நேற்றுமுன்தினம் இரவு 9 மணியளவில் பெத்திகோட்டை வனப் பகுதியில் இருந்து ஒரு காட்டு யானை வந்தது. பின்னர் யானை கணேசமூர்த்தி தோட்டத்தில் மசால் புற்களை தின்றது.
இதனால் சத்தம் கேட்டு கணேசமூர்த்தி சென்று பார்த்தார். அப்போது யானையை பார்த்ததும் அவர் டார்ச் லைட் அடித்து அதை விரட்ட முயன்றார்.

தாக்கி சாவு
இதில் ஆவேசமான அந்த யானை திடீரென அவரை விரட்டியது. இதனால் கணேசமூர்த்தி யானையிடம் இருந்து தப்பிக்க தலை தெறிக்க ஓடினார். இதில் திடீரென அவர் நிலைதடுமாறி கீழே விழுந்தார்.
அப்போது அருகில் வந்த யானை அவரை தாக்கி தூக்கி வீசியது. இதில் கணேசமூர்த்தி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

விரட்டியடிப்பு
இதுபற்றி தகவல் கிடைத்தும் சிறுமுகை வனத்துறை அலுவலர் மனோகரன் மற்றும் வனத்துறையினர் விரைந்து சென்றனர். அப்பகுதியில் முகாமிட்டு நின்ற யானையை வனப் பகுதிக்குள் விரட்டியடித்தனர். பின்னர் கணேசமூர்த்தியின் உடல் பிரேத பரிசோதனைக்காக மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.

Leave a Reply