- செய்திகள், விளையாட்டு

மே.இ. தீவுகளை சாய்த்தது ஆப்கானிஸ்தான்

 

நாக்பூர், மார்ச் 28:-

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி மேற்கிந்தியத் தீவுகள் அணியை சாய்த்தது.

மகராஷ்டிர மாநிலம் நாக்பூரில் நேற்று நடைபெற்ற போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் மிகப் பெரிய அணியான மேற்கிந்தியத் தீவுகள் அணியை வீழ்த்தியது.
முன்னதாக டாஸ் வென்ற மேற்கிந்தியத் தீவுகள் அணி பந்து வீச்சைத் தேர்ந்தெடுத்தது. இதையடுத்து களம் கண்ட ஆப்கானிஸ்தான் அணி 7 விக்கெட் இழப்புக்கு 20 ஓவர்களில் 123 ரன்கள் எடுத்தது.
அதையடுத்து களம் கண்ட மேற்கிந்தியத் தீவுகள் அணியை ஆப்கானிஸ்தான் அணி 117 ரன்களிலேயே ஆட்டமிழக்கச் செய்து இந்தப் போட்டியில் தனது முதல் வெற்றியைப் பெற்றுள்ளது.

ஆப்கானிஸ்தான் அணியில் துவக்க ஆட்டக்காரர்களாக முகமது ஷாஜத்தும் உஸ்மான் கனியும் களம் இறங்கினர். ஆனால் 6 பந்துகளை சந்தித்த கனி 8 நிமிடங்கள் களத்தில் நின்று ஒரே ஒரு பவுண்டரியை மட்டும் அடித்துவிட்டு பெவிலியன் திரும்பிவிட்டார். பின்னர் ஷாஜத்தும் அடுத்து ஆட்டமிழக்க பின்னர் வந்தவர்களில் நஜிபுல்லா ஜத்ரான் மட்டும் ஆட்டமிழக்காமல் 48 ரன்கள் எடுத்தார். இவர் 45 நிமிடங்கள் களத்தில் நின்று 40 பந்துகளைச் சந்தித்தார். இவர் அடித்த இந்த ரன்களில் 4 பவுண்டரிகளும் ஒரு சிக்ஸரும் அடங்கும்.

மேற்கிந்தியத் தீவுகள் அணியில் பட்ரீ 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதையடுத்து 124 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு களம் இறங்கிய மேற்கிந்தியத் தீவுகள் அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.
மேற்கிந்தியத் தீவுகள் அணியில் பிரவோ அதிகபட்சமாக 28 ரன்கள் எடுத்தார். ஆப்கானிஸ்தானின்  முகமது நபி, ரஷித் கான் தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
போட்டியின் ஆட்ட நாயகனாக நஜிபுல்லா ஜத்ரான் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்த தோல்வியால் மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எந்த பாதிப்பும் இல்லை என்றாலும் ஆப்கானிஸ்தான் அணியைப் பொருத்தவரை தனது பிரிவில் முன்னிலையில் இருக்கும் ஒரு அணியை வீழ்த்திய மகிழ்ச்சி நிச்சயம் இருக்கும்.

Leave a Reply