- செய்திகள், தேசியச்செய்திகள்

மேற்கு வங்காளத்தில் 10 முறை தொடர்ந்து எம்.எல்.ஏ.வாக இருந்தவர் 91 வயது காங்கிரஸ் வேட்பாளர் ‘சாச்சா’ சோகன் பால்

கரக்பூர், மார்ச் 30-

தொடர்ச்சியாக 10 முறை எம்.எல்.ஏ.வாக தேர்ந்து எடுக்கப்பட்ட 91 வயது ‘சாச்சா’ சோகன்பால், மேற்கு வங்காளத்தின் கரக்பூர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக மீண்டும் களம் இறங்கி இருக்கிறார்.

மேற்கு வங்காள மாநிலத்தில் ஏப்ரல் 4-ந்தேதி தொடங்கி, 6 கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது.

கரக்பூரின் ‘சாச்சா’

மேற்கு வங்காளத்தில் ஐ.ஐ.டி. நகரம் என்று அழைக்கப்படும் கரக்பூர் சட்டமன்ற தொகுதியில் 91 வயதான கியான் சிங் சோகன்பால் ,என்பவர் காங்கிரஸ் வேட்பாளராக நிறுத்தப்பட்டு இருக்கிறார்.

தொடர்ந்து 10 தேர்தல்களில் வெற்றி பெற்று அந்த தொகுதியின் எம்.எல்.ஏ.வாக இருந்துவரும் சோகன்பாலை, ‘சாச்சா’ பால் என்று மக்கள் அன்புடன் அழைத்து வருகிறார்கள்.

அனைவரையும் தெரியும்

தொகுதி மக்கள் ஒவ்வொருவரையும் தனிப்பட்ட முறையில் தனக்குத் தெரியும் என்கிறார், சோகன் பால். இந்த தொகுதியில் கணிசமாக உள்ள முஸ்லிம் மற்றும் கேரள வாக்காளர்கள் இவருடைய வாக்கு வங்கிக்கு அடிப்படையாக உள்ளனர்.

கட்சி வேறுபாடுகளை மறந்து மாநிலத்தின் அனைத்துக்கட்சி தலைவர்களின் நன்மதிப்பைப் பெற்றவர், இவர். சித்தார்த்த சங்கர் ரே தலைமையிலான மாநில அமைச்சரவையில் போக்குவரத்துத் துறை அமைச்சராகவும் பால் பதவி வகித்து இருக்கிறார்.

மும்முனைப் போட்டி

இந்த முறை கரக்பூரில் மும்முனைப்போட்டி நிலவுகிறது. காங்கிரஸ் – இடது சாரி கூட்டணி வேட்பாளரான சாச்சா பாலை எதிர்த்து திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளராக ராம்பிரசாத்தும், பா.ஜனதா வேட்பாளராக மாவட்ட தலைவர் திலிப் கோஷ்சும் களத்தில் உள்ளனர்.

பா.ஜனதா வேட்பாளர் திலிப் கோஷ் கூறும்போது, ‘‘நான் இந்த மாவட்டத்தின் மைந்தன். காங்கிரஸ் ஆட்சியில் வளர்ச்சியடையாத கரக்பூரில் மாற்றத்தை கொண்டு வர முயற்சிக்கிறோம்’’ என்றார். திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் ஒருவர் கூறும்போது,‘‘அரசியலில் உணர்வுகளுக்கு இடமில்லை’’ என்றார்.

புனிதமற்ற கூட்டணி

‘‘காங்கிரசுக்கும் இடதுசாரிகளுக்கும் இடையேயான புனிதமற்ற  கூட்டணியை கரக்பூர் மக்கள் தோற்கடிப்பார்கள். மார்க்சிஸ்ட் தொண்டர்களால் அடிக்கடி தாக்குதலுக்கு உள்ளான காங்கிரஸ் தொண்டர்கள் கூட்டணிக்கு வாக்களிக்க மாட்டார்கள்’’ என்றும் அவர் கூறினார்.

மறைந்த முன்னாள் பிரதமர்கள் பண்டித நேரு, இந்திராகாந்தி, ராஜீவ் காந்தி ஆகியோர் உரையாற்றிய மேடைகளில் பங்கேற்று, தற்போது உள்ள ஒருசில காங்கிரஸ் தலைவர்களில் சோகன் பாலும் ஒருவர்.

ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்திலேயே அரசியலுக்கு வந்துவிட்ட இவர், கடந்த 1969-ம் ஆண்டு முதல் கரக்பூர் தொகுதியில் ெவற்றி பெற்று வருகிறார். (கடந்த 1962-ம் ஆண்டில் போட்டியிட்ட முதல் தேர்தலில் மட்டும் அவர் தோல்வி அடைந்தார்.)

நம்பிக்கை

இந்த தேர்தலிலும் தான் வெற்றி பெறுவது உறுதி என்ற நம்பிக்கையில் சோகன் பால் இருக்கிறார். ‘‘என் வாழ்நாள் முழுவதும் கரக்பூர் மக்களுடன்தான் இருந்து வருகிறேன். கரக்பூர்தான் எனது வாழ்க்கை; எனது குடும்பம்..எல்லாமே’’ என்று அவர் கூறினார்.

கரக்பூரில் அரசு பொது மருத்துவமனை அமைத்தது, பல்வேறு வழித்தடங்களில் கொல்கத்தாவுக்கு பஸ்களை இயக்கியது உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சிப்பணிகள் இவரது முயற்சியின் பேரில் நடைபெற்றுள்ளன.

கடந்த முறை காங்கிரஸ்-திரிணாமுல் கூட்டணி வேட்பாளராக போட்டியிட்ட சாச்சா பால், 55 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகளை பெற்ற வெற்றி பெற்றார். அவருக்கு அடுத்த இடத்தில் இருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு வேட்பாளர் 31 சதவீத வாக்குகள் மட்டுமே பெற்று இருந்தார்.

Leave a Reply