- செய்திகள், விளையாட்டு

மேரி கோம் தங்கம் வென்றார்…

ஷில்லாங், பிப்.17:-

தெற்காசிய விளையாட்டின் குத்துச் சண்டைப் போட்டியில் இந்திய வீராங்கனைகள் மேரி கோம், பூஜா ராணி, சரிதா தேவி ஆகிய மூன்று பேரும் தங்கம் வென்றனர்.

தெற்காசிய விளையாட்டின் குத்துச் சண்டைப் போட்டி நேற்று நடைபெற்றது. இதில் இந்திய வீராங்கனைகள் மூன்று பிரிவிலும் தங்கம் வென்றனர்.

லண்டன் ஒலிம்பிக் போட்டியில் வெண்கலம் வென்ற இந்திய வீராங்கனை மேரி கோம் 51 கிலோ எடைப் பிரிவில் இலங்கை வீராங்கனை அனுஷாவை டெக்னிக்கல் நாக்-அவுட் முறையில் எளிதில் வென்றார். 90 விநாடிகளுக்கு குறைவான நேரத்திலேயே மேரி கோம் சாம்பியன் தங்கம் வென்றார்.

மேரி கோமின் தாக்குதலால் சம நிலை இழந்த அனுஷாவுக்கு வலது முட்டியில் காயம் ஏற்பட்டது. இதனால் அவர் சிசிச்சை எடுத்துக் கொண்டு மீண்டும் போட்டியில் ஈடுபட வேண்டியிருந்தது. இந்தக் காயம் காரணமாக அனுஷா குணமடைய 2 முதல் 3 மாதங்கள் ஆகும் எனத் தெரியவந்துள்ளது.

5 முறை உலக சாம்பியன் பட்டம் வென்ற கோமை எதிர்த்துப் போட்டியிட்ட அனுஷா 2003-ம் ஆண்டு நடைபெற்ற ஆசிய சாம்பியன் போட்டியில் தங்கம் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக தொழில்நுட்பக் கோளாறு காரணமாக போட்டி 40 நிமிடங்கள் தாமதமாக தொடங்கியது.

தன்னை எதிர்த்து யார் போட்டியிட்டாலும் அது மகிழ்ச்சிதான் என்று தெரிவித்த மேரி கோம் தொடர்ந்து பயிற்சி எடுத்து வருவதாகவும் தன்னுடைய இந்த வெற்றிக்கு காரணமான முழு அணியினருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் குறிப்பிட்டார்.

75 கிலோ எடைப் பிரிவில் பூஜா ராணி தங்கம் வென்றார். மற்றொரு இந்திய வீராங்கனை சரிதா தேவி கடுமையான போராட்டத்துக்குப் பின் தங்கம் வென்றார். இந்த வெற்றியை அடுத்து இந்திய மகளிர் அணியினர் குத்துச் சண்டைப் போட்டிக்கான 10 தங்கங்களையும் வென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply