- செய்திகள்

மேட்டூர் மருத்துவனையில் கண்சிகிச்சை அளித்தபோது பாதிக்கப்பட்ட 23 பேருக்கும் கண்பார்வை கிடைக்க நடவடிக்கை …

சென்னை, ஜூலை.28-
மேட்டூர் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டபோது பாதிக்கப்பட்ட 23 பேருக்கும் கண்பார்வை கிடைக்க நடவடிக்கை அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக தி.மு.க. உறுப்பினருக்கு அமைச்சர் விஜயபாஸ்கர் பதில் அளித்தார்.
கண் சிகிச்சை
சட்டசபை நேற்று காலை 10 மணிக்கு தொடங்கியதும் ராஜேந்திரன் (தி.மு.க) பேசும்போது, ‘மேட்டூரில் உள்ள அரசு மருத்துவமனையில் கண்புரை சிகிச்சை செய்த 23 பேருக்கு கண் பார்வை பறிபோய் உள்ளது. தற்போது இதில் அரசு எடுத்து வரும் நடவடிக்கை என்ன?’ என்றார்.
இதற்கு அமைச்சர் விஜயபாஸ்கர் பதில் அளித்து பேசியதாவது:-
5.5 லட்சம் பேருக்கு
ஒவ்வோரு ஆண்டும் 5.5 லட்சம் நபர்களுக்கு கண்புரை அறுவை சிகிச்சை செய்யப்பட்டு அவர்கள் நலமோடு மருத்துவமனையிலிருந்து திரும்பிக் கொண்டிருக்கிறார்கள். குறிப்பாக மேட்டூரிலே, தொடர்ந்து 10 ஆண்டுகளாக வருடத்திற்கு 1,000 பேருக்கு கண்புரை அறுவை சிகிச்சை செய்யப்பட்டு அந்த நோயாளிகளெல்லாம் நலமோடு இருக்கிறார்கள்.
நோய்தொற்று
கடந்த மாதம் 14, 15 மற்றும் 16.06.2016 ஆகிய மூன்று நாட்களில் மாவட்ட மருத்துவமனைகளில் கண் புரை அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்களுக்கு நோய் தொற்று ஏற்பட்டுள்ளது என்ற செய்தியை அறிந்த உடனே, மாவட்ட தலைமை மருத்துவமனையின் மூலமாக நோயாளிகளெல்லாம் மேட்டூர் அரசு மருத்துவமனைக்கு வரவழைக்கப்பட்டு, உடனடியாக அவர்களது நோய் தொற்றைக் கண்டுபிடிக்கப்பட்டது.
மேல்சிகிச்சைக்காக…
இதையடுத்து அனைத்து நோயாளிகளும் மேல் சிகிச்சைக்காக அருகில் இருக்கக்கூடிய அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, கோயம்புத்தூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, சேலம் அகர்வால் மருத்துவமனை மற்றும் அரவிந்த் கண் மருத்துவமனையில் உயர் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டு தமிழக அரசு சார்பிலே அனைத்து உயர் சிகிச்சைகளும் வழங்கப்பட்டன.
2 பேருக்கு பார்வை திரும்பியது
உயர் சிகிச்சைக்குப் பின்னர் அவர்களில் 23 நோயளிகளில் 2 நோயளிகளுக்கு கண் பார்வை முழுவதும் திரும்பியுள்ளது.  மீதமுள்ள நோயாளிகளில் 17 நோயாளிகளுக்கு கண் தொற்று முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. 4 நோயாளிகளுக்கு நோய் தொற்றுக்காக உயர்சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தாயுள்ளத்தோடு
அவர்களெல்லாம் ஏழை எளிய குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்ற அடிப்படையிலே முதல்-அமைச்சர் ஜெயலலிதா, தாயுள்ளத்தோடு உனடனடியாக ஒவ்வொரு குடும்பத்திற்கும் 3 லட்சம் ரூபாய் நிவாரண நிதியாக அறிவித்தார்.  இன்றைய நாள் வரை அனைத்து நோயாளிகளுடைய அனைத்து சிகிச்சைகளும், தங்குமிடம், உணவு, செலவுகள் போன்ற அனைத்தையும் அரசு ஏற்றுக் கொண்டிருக்கிறது.
3 மாதத்தில்
கண் தொற்று ஏற்பட்ட நோயாளிகளுக்கு "கேட்ரோபிளாசி", போன்ற சிறப்பு சிகிச்சை அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது.  தொடர்ந்து அவர்கள் சிகிச்சையிலே இருக்கிறார்கள்.  கண் பார்வை தெரிய 3 மாத காலமாகும் என்று கண் சிறப்பு மருத்துவர்கள் நிபுணர்கள் தெரிவித்திருக்கிறார்கள். ஆகவே இவர்கள் தொடர் சிகிச்சையிலே இருக்கிறார்கள்.  அரசு அனைத்து நடவடிக்கையும் எடுத்துக் கொண்டிருக்கிறது.
இவ்வாறு அமைச்சர் விஜயபாஸ்கர் பதில் அளித்தார்.
ரூ.1 கோடி இழப்பீடு
தொடர்ந்து ராஜேந்திரன் (தி.மு.க) பேசும்போது, ‘பாதிக்கப்பட்டவர்களுக்கு முதல்-அமைச்சர் இழப்பீடு வழங்க உள்ளதாக கூறுகிறீர்கள் ஆனால் 1 மாத காலத்திற்கு பிறகுதான் உதவித் தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தொகை பாதிக்கபட்டோருக்கு இன்னும் போய் சேரவில்லை. மேட்டூர் மருத்துவமனையில் உள்ள அறுவை சிகிச்சை அரங்கு சரியில்லை என்கிறார்கள். எனவே கண்பார்வை பறிபோனவர்களுக்கு ரூ.1 கோடி இழப்பீடு வழங்கவேண்டும்’ என்றார்.
துறை ரீதியான விசாரணை
இதற்கு பதில் அளித்த விஜயபாஸ்கர், ‘என்ன காரணத்தினால் நோய்த்தொற்று ஏற்பட்டது என்பதை கண்டறிய துறை ரீதியான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
மேட்டூரில் மட்டும் நிறுத்தம்
தொடர்ந்து பேசிய எதிர்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், `மேட்டூர் சம்பவத்துக்கு பிறகு தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பொது மருத்துவமனைகளிலும் கண்புரை அறுவை சிகிச்சை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வந்துள்ளது. மேட்டூர் அறுவை சிகிச்சை அரங்கில் உள்ள ஏர்கண்டி‌ஷனர் பழுதாகி அதன் காரணமாக நோய்த்தொற்று ஏற்பட்டதாக எங்களுக்கு தகவல் கிடைத்தது. இது அரசின் கவனத்துக்கு வந்துள்ளதா?’ என்றார்.
இதற்கு பதில் அளித்த அமைச்சர் விஜயபாஸ்கர், ‘அந்த தகவல் தவறு. கண்புரை அறுவை சிகிச்சையை மேட்டூரில் மட்டும் நிறுத்தி வைத்துள்ளோம். மற்ற மாவட்டங்களில் கண் அறுவை சிகிச்சை நடக்கிறது’ என்றார்.
திருவள்ளூரில்…?
தொடர்ந்து பேசிய எதிர்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், ‘திருவள்ளூர் மாவட்ட அரசு பொது மருத்துவமனையில் கண்புரை அறுவை சிகிச்சை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக அந்த தொகுதி எம்.எல்.ஏவும் தெரிவித்துள்ளார்’ என்றார்.
இதற்கு பதில் அளித்த அமைச்சர் விஜய பாஸ்கர், ‘அவ்வாறு இருந்தால் அதை சரி செய்து அறுவை சிகிச்சை தொடங்கப்படும்’ என்று தெரிவித்தார்.

Leave a Reply