- செய்திகள்

மேட்டூர் அணை நீர்மட்டம் உயருகிறது அணைக்கு 9621 கன அடி தண்ணீர் வருகிறது…

மேட்டூர், ஆக.25-

மேட்டூர் அணைக்கு நேற்று நீர்வரத்து வினாடிக்கு 9621 கன அடியாக இருந்தது. இதனால் அணையின் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து வருகிறது.

கர்நாடகத்தில் மழை

கர்நாடக மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை கடந்த ஏப்ரல் மாதம் இறுதியில் தொடங்கி அவ்வப்போது தீவிரம் அடைந்தும், குறைந்தும் பெய்து வருகிறது. இதன் காரணமாக அந்த மாநிலத்தில் உள்ள கபினி, கிருஷ்ணராஜசாகர் உள்ளிட்ட முக்கிய அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தும், குறைந்தும் வந்தது.

இந்தநிலையில் அந்த அணைகளில் நீர் இருப்பு அதன் கொள்ளளவில் 79 சதவீதத்தை எட்டி உள்ளது. இதன் காரணமாக அந்த அணைகளுக்கு வரும் தண்ணீரின் அளவை பொறுத்து காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.

இந்த தண்ணீர் தமிழக- கர்நாடக எல்லைப்பகுதியான பிலிகுண்டுலுவை கடந்து ஒகேனக்கல் வழியாக மேட்டூர் அணையை வந்தடைகிறது. காவிரி நடுவர்மன்றத்தின் இறுதித் தீர்ப்பின்படி கர்நாடக அரசு தமிழகத்திற்கு அளிக்க வேண்டிய தண்ணீரை இதுவரை முழுமையாக அளிக்கவில்லை. இந்த தண்ணீரை பெற தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

நீர்மட்டம் உயர்வு

இந்த நிலையில் கடந்த வாரம் கர்நாடகத்தில் மீண்டும் மழை தீவிரம் அடைந்து உள்ளதால், அங்குள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளில் இருந்து அதிகபட்சமாக வினாடிக்கு 10 ஆயிரம் கன அடி வரை தண்ணீர் திறந்து விடப்பட்டது. இந்த தண்ணீர் மேட்டூர் அணையை வந்தடைந்ததின் காரணமாக அணைக்கு நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து வருகிறது.

கடந்த வாரத்தில் அணைக்கு வினாடிக்கு 4 ஆயிரம் கன அடி வீதம் வந்து கொண்டிருந்த தண்ணீர், ஒருசில நாட்களில் வினாடிக்கு 5 ஆயிரம் கன அடியாக அதிகரித்தது. இதைத்தொடர்ந்து நீர்மட்டம் 68.11 அடியானது. நேற்று அணைக்கு வினாடிக்கு 9621 கன அடி தண்ணீர் வந்தது.

இதற்கிடையில் அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 500 கன அடி வீதம் மட்டுமே தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. எனவே, நீர் திறப்பைவிட தண்ணீர் வரத்து அதிகரித்து உள்ளதால் மேட்டூர் அணை நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து வருகிறது.

Leave a Reply