- செய்திகள், மாநிலச்செய்திகள்

மூணாறு நிலச்சரிவில் உயிரிழந்த குடும்பத்திற்கு தலா ரூ.3 லட்சம் இழப்பீடு

மூணாறு நிலச்சரிவில் உயிரிழந்த தமிழர்களின் குடும்பங்களுக்கு தலா மூன்று லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்றும், பலத்த காயம் அடைந்தவர்களுக்கு தலா 1 லட்சம் வழங்கப்படும் என்றும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.மூணாறு நிலச்சரிவு கேரளாவில் உள்ள மூணாறில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு ஏற்பட்ட நிலச்சரிவினால் 80க்கும் மேற்பட்டோர் மண்ணில் உயிரோடு புதைந்தனர். இதுவரை 61 நபர்கள் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். மேலும் பலரின் உடலை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலச்சரிவில் உயிரிழந்த அனைவரும் தமிழர்கள்.

அவர்களுக்கு ஏற்கனவே கேரள அரசு 5 லட்சம் இழப்பீடு வழங்கும் என்று அறிவித்திருந்தது. இந்த நிலையில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-கேரள முதல்வருக்கு வேண்டுகோள்கேரளா, இடுக்கி, மூணாறு பகுதியில் சமீபத்தில் பெய்த பலத்த மழை காரணமாக கடந்த 6-ந் தேதி ராஜமலா பெட்டிமுடி டிவிசன், நயமக்காடு தேயிலை தோட்டப் பகுதியில் இருந்த தொழிலாளர்கள் குடியிருப்புகளில் நிலச்சரிவு ஏற்பட்டு, அதில் தமிழ்நாட்டை பூர்விகமாக கொண்ட தேயிலை தோட்ட தொழிலாளர்கள் பலர் சிக்கி உயிரிழந்துள்ளனர் என்ற செய்தி அறிந்து நான் மிகுந்த வேதனை அடைந்தேன்.

உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொண்டு, நிலச்சரிவில் சிக்கியுள்ளவர்களை பத்திரமாக மீட்டெடுத்து, பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான அனைத்து மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டும் என கேரள முதலமைச்சரை தொலைபேசி வாயிலாக கேட்டுக் கொண்டேன்.

தமிழக அரசின் குழுஇந்த நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த தேயிலை தோட்ட தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் பூர்வீகமாக கொண்டு பல ஆண்டுகளாக அங்கே தங்கி பணிபுரிந்து வருகிறவர்கள் என்ற தகவல் கிடைக்கப்பெற்றவுடன், உடனடியாக தலைமைச் செயலாளரை தொடர்பு கொண்டு, நிலச்சரிவில் சிக்கிய தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களின் விவரங்கள் குறித்து முழுத் தகவல் பெறுமாறும், அவர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளை செய்வதற்கான நடவடிக்கைகளை உடனடியாக எடுக்குமாறும் நான் உத்தரவிட்டேன்.

எனது உத்தரவின் பேரில், தேனியில் இருந்து மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் ஒரு குழு கடந்த 7-ந் தேதி அன்றே நிலச்சரிவு ஏற்பட்ட இடத்திற்கு விரைந்து தேசிய மீட்புப் பணி குழுவினருடன் இணைந்து மீட்புப் பணிகளை ஒருங்கிணைத்து வருகின்றனர்.மூன்று லட்சம் இழப்பீடு இடிபாடுகளில் சிக்கிய 12 தொழிலாளர்கள் பத்திரமாக மீட்கப்பட்டு, மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

நிலச்சரிவில் சிக்கி காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வரும் அனைவரும் விரைவில் பூரண குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என்று இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்.இந்த துயரச் சம்பவத்தில் தமிழ்நாட்டில் உள்ள உயிரிழந்தவர் குடும்பத்தின் நேரடி வாரிசுதாரர்களுக்கு இறந்த நபர் ஒருவருக்கு தலா மூன்று லட்சம் ரூபாயும், பலத்த காயமடைந்தவர்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளேன்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply