- செய்திகள், மாநிலச்செய்திகள்

மும்பை குண்டு வெடிப்பு வழக்கு 3 பேருக்கு ஆயுள் தண்டனை; ஒருவருக்கு 10 ஆண்டு சிறை

மும்பை, ஏப்.7:-

மும்பை குண்டு வெடிப்பு வழக்கில் 3 பேருக்கு ஆயுள் தண்டனையும், ஒருவருக்கு 10 ஆண்டு சிறைத் தண்டனையும் விதித்து சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

13 பேர் பலி

மும்பை மத்திய ரெயில் நிலையத்தில் உள்ள மெக்டொனால்டு ரெஸ்டாரென்ட்டில் கடந்த 2002-ம் ஆண்டு டிசம்பர் 6-ந் தேதி நடைபெற்ற குண்டு வெடிப்பு சம்பவத்தில் ஏராளமானோர் காயம் அடைந்தனர். அதேபோன்று, 2003-ம் ஆண்டு ஜனவரி 27-ந் தேதி வில்லேபார்லே (கிழக்கு) பகுதியில் உள்ள ஒரு மார்க்கெட்டில் நடந்த குண்டு வெடிப்பில் ஒருவர் பலியானார். அதனைத் தொடர்ந்து, 2003-ம் ஆண்டு மார்ச் 13-ந் தேதி நடைபெற்ற முலுந்த் ரெயில் குண்டு வெடிப்பு சம்பவத்தில் 12 பேர் பலியானார்கள்.

இந்த சம்பவங்கள் தொடர்பாக முக்கிய குற்றவாளியான சாகிப் நஜான், முசாம்மில் அன்சாரி, பர்கான் கோட், வாகித் அன்சாரி, அதீப் முல்லா, ஹசிப் முல்லா, குலாம் கோடால், முகமது கமீல், நூர் மாலிக், அன்வர் அலி கான் உள்பட 15 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
10 பேர் குற்றவாளிகள்

இந்த வழக்கின் விசாரணை மும்பையில் உள்ள பொடா சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. குற்றவாளிகள் 15 பேர் மீதும், மேற்கண்ட சம்பவங்கள் தொடர்பாக ஒருங்கிணைந்த குற்றப்பத்திரிகையை போலீசார் தாக்கல் செய்தனர். வழக்கு விசாரணையின்போதே, குற்றம் சாட்டப்பட்டவர்களில் 2 பேர் மரணம் அடைந்து விட்டனர். எனவே, மற்றவர்களுக்கு எதிராக மட்டும் விசாரணை நடைபெற்று நடந்து வந்தது.

அவர்களில் 10 பேரை குற்றவாளிகள் என்று கடந்த மாதம் 29-ந் தேதி நீதிபதி பி.ஆர்.தேஷ்முக் அறிவித்தார். அதனைத் தொடர்ந்து அவர்கள் 10 பேருக்கும் தண்டனை வழங்குவது தொடர்பான வாதம் நடைபெற்றது.
சாகும் வரை ஆயுள் தண்டனை

அப்போது, சம்பவம் நடைபெற்ற அனைத்து பகுதிகளிலும் வெடிகுண்டுகளை பொருத்திய குற்றத்துக்காக, முசாம்மில் அன்சாரிக்கு மட்டும் தூக்கு தண்டனை வழங்குமாறு சிறப்பு அரசுத் தரப்பு குற்றவியல் வழக்கறிஞர் ரோகிணி சாலியன் கேட்டுக் கொண்டார். சாகிப் நஜான், குலாம் கோடால், பர்கான் கோட், வாகித் அன்சாரி ஆகியோருக்கு ஆயுள் தண்டனை விதிக்குமாறும் அவர் கோரிக்கை வைத்தார்.

இந்த சூழ்நிலையில், நேற்று குற்றவாளிகள் 10 பேருக்கும் தண்டனை விவரம் அறிவிக்கப்பட்டது. அப்போது, முசாம்மில் அன்சாரிக்கு சாகும் வரை ஆயுள் தண்டனையும், பர்கான் கோட், வாகித் அன்சாரி ஆகியோருக்கு ஆயுள் தண்டனையும் விதித்து நீதிபதி தீர்ப்பு அளித்தார்.

அதேநேரம் முக்கிய குற்றவாளியான சாகிப் நஜானுக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், மற்ற 6 பேருக்கு 2 முதல் 10 ஆண்டுகள் வரையிலான சிறைத் தண்டனையும் வழங்கப்பட்டது. இவர்களில் 6 ேபர் இன்னமும் தலைமறைவாகவே உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

—————-

Leave a Reply