- செய்திகள், விளையாட்டு

மும்பையை வீழ்த்தி ஹாட்ரிக் வெற்றியைப் பெறுமா தில்லி?

 

புதுடெல்லி, ஏப்.23:-

ஐபிஎல் கிரிக்கெட்டில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி ஹாட்ரிக் வெற்றியைப் பெறும் முனைப்பில் டெல்லி டேர்டெவில்ஸ் அணி இன்று களம் இறங்குகிறது.

மும்பை இந்தியன்ஸ்-டெல்லி டேர்டெவில்ஸ் அணிகளுக்கு இடையே டெல்லியில் உள்ள பெரோஷா கோட்லா மைதானத்தில் இன்று பிற்பகல் 4 மணிக்கு இந்தப் போட்டி நடக்கிறது.

முன்னதாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியிடம் 9 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவிய டெல்லி அணி அடுத்து தனது அதிரடி ஆட்டம் மூலம் கிங்ஸ் லெவன் பஞ்சாப், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை வீழ்த்தியது.

இந்த நிலையில் டெல்லி அணி புள்ளிப் பட்டியலில் 4 புள்ளிகளுடன் 3-வது இடத்தில் உள்ளது. அதாவது 3 போட்டிகளில் விளையாடி  இரண்டில் வெற்றி பெற்றுள்ளது. அதே சமயம் மும்பை அணி 2 புள்ளிகளுடன் 5-ம் இடத்தில் உள்ளது. அந்த அணி 5 போட்டிகளில் விளையாடி 2 வெற்றி 3 தோல்விகளைக் கண்டுள்ளது. மும்பை அணி கிங்ஸ் லெவன் பஞ்சாப், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கு இடையிலான போட்டிகளில் வெற்றி கண்டுள்ளது.

அதே சமயம் ரைசிங் புனே சூப்பர் ஜெயின்ட்ஸ், குஜராத் லயன்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையிலான போட்டிகளில் தோல்வி கண்டுள்ளது.

டெல்லி அணியைப் பொருத்தவரை கொல்கத்தா அணிக்கு எதிரான முதல் ஆட்டத்தில் வெறும் 98 ரன்களை மட்டுமே எடுத்தது. கொல்கத்தா அணி ஒரே விக்கெட்டை மட்டும் இழந்து வெற்றி பெற்றது.

ஆனால் இரண்டாவது ஆட்டத்தில் பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் இரண்டே விக்கெட்டுகளை மட்டும் இழந்து தனது இலக்கான 112 ரன்களை எடுத்துவிட்டது. அந்த ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க வீரர் டிகாக் ஆட்டமிழக்காமல் 59 ரன்கள் எடுத்தார்.

கடைசியாக நடைபெற்ற பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் இந்த ஐபிஎல் போட்டியின் முதல் சதத்தை அடித்து அணியை வெற்றிப் பாதைக்கு இட்டுச் சென்றார் டிகாக். இந்த ரன்களை 61 பந்துகளில் அடித்தார். ஆக டெல்லி அணிக்கு டி காக்கின் வலுவான ஆட்டம் நிச்சயம் கைகொடுக்கும்.

அத்தோடு மட்டும் அல்ல கருண் நாயரும் ஆட்டமிழக்காமல் ஆடி 42 பந்துகளில் 54 ரன்களை எடுத்து சிறப்பாக விளையாடியுள்ளார்.

மேலும் டுமினி, கார்லோஸ் பிராத்வெயிட், பவன் நெஹி ஆகியோரும் டெல்லி அணியில் இடம் பெற்றுள்ளனர். பிராத்வெயிட் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் பென் ஸ்டோக்ஸ் பந்து வீச்சில் தொடர்ந்து 4 சிக்ஸர்களை அடித்து அணிக்கு சாம்பியன் பட்டத்தைப் பெற்றுத் தந்தவர். ஆக அவரது ஆட்டமும் டெல்லி அணிக்கு கூடுதல் பலமாக அமையும். கேப்டன் ஜாகீர் கான், மோரிஸ், ஷமி ஆகியோரின் பந்து வீச்சும் கைகொடுக்குமானால் நடப்புச் சாம்பியனை எளிதல் வீழ்த்த முடியும்.
மும்பை இந்தியன்ஸ் அணியைப் பொருத்தவரை துவக்கத்தில் சற்று தடுமாறினாலும் தற்போது பேட்டிங்கில் மெல்ல மெல்ல வலுப்பெற்று வருகின்றது. கேப்டன் ரோஹித் சர்மா, கர்னால் பாண்ட்யா, ஹர்திக் பாண்யாவின் ஆட்டங்களும் அந்த அணிக்கு கை கொடுக்கும் என எதிர்பார்க்கலாம். மலிங்கா இல்லாத நிலையில் நியூசிலாந்து வீரர்கள் டிம் சௌதீ, மெக்லகன் பந்து வீச்சை நம்பியுள்ள மும்பை அணி டெல்லியை வீழ்த்தி புள்ளிப் பட்டியலில் முன்னேறும் வாய்ப்பும் உள்ளது.

Leave a Reply