- செய்திகள், விளையாட்டு

மும்பையை பழி தீர்க்குமா கொல்கத்தா?

 

மும்பை, ஏப்.28:-

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் இன்று மோதுகின்றன. இந்தப் போட்டியில் ஏற்கெனவே மும்பையிடம் தோற்றுள்ள கொல்கத்தா அதற்கு பழி வாங்கும் முனைப்புடன் களம் காணும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மும்பை வாங்ஹடே ஸ்டேடியத்தில் நடைபெற இந்தப் போட்டியில் தற்போது புள்ளிப் பட்டியலில் முதல் இடத்தில் உள்ள கொல்கத்தா அணி நடப்புச் சாம்பியனான மும்பை அணியை எதிர்கொள்கிறது.

இந்தப் போட்டியைப் பொருத்த வரை கொல்கத்தா அணி 5 போட்டிகளில் விளையாடி நான்கு போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. முன்னதாக கொல்கத்தாவின் ஈடன் கார்டனில் நடைபெற்ற மும்பை அணிக்கு எதிரான போட்டியில்தான் கொல்கத்தா அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை அணியிடம் தோல்வியுற்றுள்ளது. அதையடுத்து தொடர்ந்து 4 போட்டிகளிலும் வெற்றி கண்டுள்ளது. தங்களது சொந்த மண்ணில் தோல்வியைத் தழுவிய கொல்கத்தா அணி மும்பை அணியின் சொந்த மண்ணில் அவர்களை வீழ்த்தி புள்ளிப் பட்டியலில் தொடர்ந்து முன்னிலை வகிக்கும் முனைப்பில் களம் இறங்கும்.

ஐபிஎல் போட்டியைப் பொருத்தவரை இரு அணிகளுமே கடந்த 4 ஆண்டுகளில் மாறி மாறி சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. கொல்கத்தா அணியின் துவக்க ஆட்டக்காரரும் கேப்டனுமான கௌதம் காம்பீர் இதுவரை 237 ரன்களை அடித்து நன்றாகவே விளையாடி வருகிறார். மும்பை அணியைப் பொருத்த வரை 7 போட்டிகளில் விளையாடி 4-ல் வெற்றி பெற்று 3-ல் தோல்வி கண்டுள்ளது.

அந்த அணியில் சர்மா, அம்பதி ராயுடு இருவரும் நன்றாகவே ஆடிவருகின்றனர்.

ஆக மும்பை அணி சொந்த மண்ணில் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கத்திலும் கொல்கத்தா அணி அவர்கள் சொந்த மண்ணில் மும்பையை வீழ்த்த வேண்டும் என்ற நோக்கத்திலும் களம் இறங்கும் என்பதால் போட்டி விறுவிறுப்பான ஒன்றாக அமையும்.

Leave a Reply