- உலகச்செய்திகள், செய்திகள், விளையாட்டு

மும்பையில் இன்று 2-வது அரையிறுதி ஆட்டம் ராஜ்ஜியம் செய்யப்போவது கோலியா- கெயிலா?

மும்பை, மார்ச் 31:-

மும்பை வான்ஹடே மைதானத்தில்  இன்று நடக்கும் டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் 2-வது அரையிறுதி ஆட்டத்தில் சவாலாக திகழும் மேற்கிந்தியத்தீவுகள் அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழையும் முனைப்புடன்  தோனி தலைமையிலான இந்திய அணி களம் இறங்குகிறது.

இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக திகழ்ந்து வரும் கோலி அவரின் அதிரடி பேட்டிங், பொறுப்பான ஆட்டம் மேலோங்கி இருக்குமா? அல்லது, கெயிலின் சரவெடி, விளாசல் அந்த அணிக்கு உதவுமா ? என்பது பெரும் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

சூப்பர் 10 சுற்றில் இரு அணிகளும் தலா ஒரு தோல்வியைச் சந்தித்து அரையிறுதிவரை முன்னேறி உள்ளன. 2007-ம் ஆண்டின் சாம்பியனான இந்தியாவும், 2012-ம் ஆண்டு மகுடம் சூடிய மேற்கிந்தியத்தீவுகள் அணியும், இன்றைய ஆட்டத்தில் உள்ள அழுத்தங்களை கடந்து  இரு அணி வீரர்களும் எவ்வாறு விளையாடுவார்கள் என்பதை பார்க்க அரங்கத்தில் ரசிகர்கள் குவியப் போகிறார்கள்.  டி20 போட்டித் தொடரை பொருத்தமட்டில் முந்தைய வரலாறு மேற்கிந்தியத்தீவுகள் அணிக்கே சாதகமாக இருக்கிறது.

ஜொலிப்பு அவசியம்

இந்திய அணி வலிமையான பேட்டிங் வரிசையைக் கொண்டு இருந்தபோதிலும், கோலி மட்டுமே நிலையான பேட்டிங்கை வெளிப்படுத்தி வருகிறார். அதற்கு அடுத்து, கேப்டன் தோனி நம்பிக்கை அளிக்கிறார். தொடக்க ஆட்டக்காரர்கள் சிகார் தவான், ரோகித் சர்மா, சுரேஷ் ரெய்னா ஆகியோர் கடந்த 4 போட்டிகளில் சராசரியாக 10 ரன்கள் மட்டுமே சேர்த்து ஏமாற்றம் அளித்துள்ளனர்.

யுவராஜ் நீக்கம்

இந்த போட்டியில் இவர்கள் பேட்டிங்கில் ஜொலிக்க வேண்டியது அவசியமாகிறது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் கனுக்கால் காயத்தால் அவதிப்பட்டு வரும் யுவராஜ் சிங் உலகக்கோப்பைத் தொடரில் இருந்து நீக்கப்பட்டுள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது இந்திய அணிக்கு பின்னடைவாக இருந்தபோதிலும், அவரின் இடத்தை நிரப்ப ரகானே, அல்லது மணிஷ் பாண்டே களமிறங்கலாம்.

சுழற்பந்து

ஹர்திக் பான்டயா, நெஹ்ரா, பும்ரா ஆகியோர் கட்டுக்கோப்பாக பந்துவீசுகிறார்கள். ஆனால், சுழற்பந்தில் அஸ்வின், ரவிந்திர ஜடேஜா, யுவராஜ் சிங் ஆகியோரின் பந்துவீச்சு கடந்த போட்டிகளில் முக்கிய திருப்பமாக அமைந்தது. குறிப்பாக அஸ்வின் சுழல் இன்று கெயிலுக்கு கடும் சவாலாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சிம்மன்ஸ் வருகை

மேற்கிந்தியத்தீவுகள் அணியைப் பொருத்தவரை, கெயிலின் அதிரடி பேட்டிங் அந்த அணிக்கு முக்கியத் துருப்புச் சீட்டாகும். காயத்தால் பிளட்சருக்கு பதிலாக இன்று சிம்மன்ஸ் களமிறங்குகிறார். ஐ.பி.எல். போட்டியில் மும்பையில் இந்தியன்ஸ் அணியில் இடம்பெற்றிருந்த சிம்மன்சுக்கு வான்ஹடே மைதானத்தின் தன்மை நன்கு தெரியும் என்பதால், பந்துவீச்சிலும், பேட்டிங்கிலும் இந்தியாவுக்கு நெருக்கடி அளிப்பார்.

குறிப்பாக மார்லன் சாமுவேல்ஸ், டேவ்னே பிராவோ, சாமே ஆகியோரின் பேட்டிங் இந்திய அணியை எந்நேரமும் சாய்க்கும் திறன் கொண்டது. அதேபோல, பத்ரி, பிராவோ, ஆன்ட்ரூ ரூஸெல் ஆகியோரின் பந்து வீச்சு கடந்த போட்டியில் சிறப்பாக இருந்ததால், இன்று இவர்கள் ஜொலிப்பார்கள் என்று நம்பலாம்.

இன்றைய போட்டி அடுத்த சாம்பியன் யார் என்பதை தீர்மானிக்கும்  முன்னோட்டம் என்பதால் போட்டியின் முடிவு ரசிகர்கள் அனைவரையும் இருக்கையின் நுனியில் அமரவைக்கும் என்பதில் ஐயமில்லை.

பாக்ஸ் மேட்டர்…..

வீரர்கள் விவரம்

இந்திய அணி

எம்.எஸ். தோனி(கேப்டன்), சிகர் தவான், ரோகித் சர்மா, விராத் கோலி, சுரேஷ் ரெய்னா, யுவராஜ் சிங், ஹர்திக் பான்ட்யா, ரவிந்திர ஜடேஜா, அஸ்வின், ஜஸ்பிரித் பும்ரா, நெஹ்ரா, ஹர்பஜன் சிங், பவான் நெகி, அஜின்கயா ரகானே, முகமது சமி.

மே.இ.தீவுகள் அணி

டேரன் சாமே(கேப்டன்), சாமுவேல் பத்ரி, சுலைமான் பென், கார்லோஸ் பிராத் வெய்ட், டேவ்னே பிராவோ, ஜான்சன் சார்லஸ், லென்டல் சிம்மன்ஸ், கிறிஸ் கெயில், ஜேசன் ஹோல்டர், எவின் லிவிஸ், ஆஸ்லே நர்ஸ், தினேஷ் ராம்தின், ஆன்ட்ரே ரூஷெல், மார்லன் சாமுவேல்ஸ், ஜெரோம் டெய்லர்.

மைதானம் எப்படி ?

மும்பை வான்ஹடே மைதானத்தில் இதுவரை இந்த உலகக்கோப்பை போட்டியில் நடந்த 3 போட்டிகளில் 2 ஆட்டங்களில் சேஸிங் செய்த அணியே வென்றுள்ளன.  இந்த மைதானம் பேட்டிங்குக்கும், சுழற்பந்துவீச்சுக்கும் சாதகமாகவே அமைக்கப்பட்டுள்ளது என்பது தெளிவாகிறது. அதிலும் குறிப்பாக இன்றைய போட்டியில் ரசிகர்களுக்கு விருந்தளிக்க வேண்டும் என்பதற்காக மெதுவான ஆடுகளமாக மாற்றப்பட்டுள்ளதால் பேட்ஸ்மன்களின் ராஜ்ஜியமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பாக்ஸ்….

இரவு 7 மணிக்கு போட்டி தொடங்குகிறது. ஸ்டார் ஸ்போர்ஸ்ட், டிடி சேனலில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

Leave a Reply