- செய்திகள், மாநிலச்செய்திகள்

மும்பையில் இந்திய கடல்சார் உச்சி மாநாடு தொடக்கம் துறைமுக வளர்ச்சிக்கு ரூ.1 லட்சம் கோடி முதலீடு

மும்பை, ஏப்.14:-

மும்பையில் இந்திய கடல்சார் உச்சி மாநாட்டை தொடங்கி வைத்து பேசுகையில், நாட்டின் துறைமுக வளர்ச்சிக்கு ரூ.1 லட்சம் கோடி முதலீட்டை ஈர்க்க திட்டமிட்டு உள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

முதலாவது உச்சி மாநாடு

மும்பையில் நேற்று முதலாவது இந்திய கடல்சார் உச்சிமாநாடு தொடங்கியது. அதனை பிரதமர் ேமாடி தொடங்கி வைத்து உரையாற்றினார்.

அப்போது அவர் கூறுகையில், துறைமுக வளர்ச்சிக்காக ரூ.1 லட்சம் கோடி முதலீட்டை திரட்டுவதற்கு இந்தியா விரும்புவதாகவும், அதற்கான முதலீடுகளை மேற்கொள்வதற்கு சர்வதேச சமுதாயத்தை வரவேற்பதாகவும் தெரிவித்தார். மேலும், ‘‘வளர்ச்சிக்கான  என்ஜின் ஆக நாட்டின் 7,500 கி.மீ. நீளம் உள்ள கடற்கரை உருவாக்கப்படும்’’ என்றும் பிரதமர் மோடி கூறினார்.
இதுதொடர்பாக மேலும் அவர் கூறியதாவது:-

5 புதிய துறைமுகங்கள்
வருகிற 2025-ம் ஆண்டுக்குள் இந்திய துறைமுகங்களின் திறனை 140 கோடி டன்னில் இருந்து 300 கோடி டன்களாக அதிகரிப்பதே  நோக்கம். அத்தகைய வளர்ச்சியை அடைவதற்கு ரூ.1 லட்சம் கோடி முதலீட்டை திரட்டுவதற்கு விரும்புகிறோம்.

இந்தியா ஒரு புகழ் பெற்ற கடல்சார் வரலாற்றைக் கொண்டுள்ளது. வேகமாக வளர்ந்து வரும் இந்திய பொருளாதாரத்தின் ஏற்றுமதி இறக்குமதி வர்த்தகத்தில் அதிகரிக்கும் தேவைகளை சமாளிப்பதற்காக 5 புதிய துறைமுகங்களை அமைக்கும் திட்டம் உள்ளது.

மிகவும் மலிவானது
கடல்சார் துறையில் முதலீட்டுக்கு வாய்ப்புடன் கூடியதாக 250 திட்டங்களை கப்பல் துறை அமைச்சகம் பட்டியலிட்டு உள்ளது. அதில் 100-க்கும் மேற்பட்ட திட்டங்கள் அரசின் கனவு திட்டமான சாகர்மாலா திட்டத்தின்கீழ் அடையாளம் காணப்பட்டு உள்ளன.

சர்வதேச வர்த்தகத்தில் கடல்சார் துறைதான் மிகவும் மலிவான மற்றும் தூய்மையான வர்த்தக போக்குவரத்து துறை ஆகும். இந்த துறையில் எந்தவொரு நாடும் தனியாக இருந்து விரும்பிய வளர்ச்சியை அடைய முடியாது. இந்த துறையின் திறனை உணர்ந்து கொள்வதற்காகவும், சவால்களை வெற்றிகொள்வதற்காகவும்  நாடுகள் ஒன்றிணைய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் மராட்டிய மாநில கவர்னர் கே.வித்யாசாகர் ராவ், முதல்-அமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ், குஜராத் முதல்-அமைச்சர் ஆனந்திபென் படேல். தென் கொரியாவின் கடல் மற்றும் மீன் வளத்துறை அமைச்சர் கிம் யங் சக் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியின்போது, நாட்டின் துறைமுக வளர்ச்சிக்கான தேசிய தொலை நோக்குத் திட்டமான சாகர்மாலா என்ற புத்தகம் வெளியிடப்பட்டது.

Leave a Reply