முப்பிணி தீர்க்கும் வெற்றிலை..!

கிராமங்களில் சிலருக்கு சண்டை வரும்போது, “நான் உனக்கு வெற்றிலை, பாக்கு வைத்து அழைத்தேனா” என்று குறிப்பிட்டு பேசுவதை நாம் கேட்டிருப்போம். அதேபோல கிராமப்புறங்களில் ஒருவர் திருமணம் போன்ற நல் நிகழ்வுகளுக்கு ஊர் முழுக்க அத்தனை வீட்டிற்கும் வெற்றிலை, பாக்கு வைத்தே தீர வேண்டும். இது கிராமப்புறங்களில் ஊர் கட்டுப்பாடாகவே இன்றும் இருக்கிறது.

வெற்றிலை என்றால் வெற்றி+இலை என்று பொருள். இதன் விளக்கம், வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு தடவி உணவுக்குப்பின் உண்டால் வாத, பித்த, சிலேத்துமங்களின் (திட, திரவ, நீராவியின்) ஏற்றத்தாழ்வை சமப்படுத்தி உடலில் இவைகளால் ஏற்படும் நோயை நீக்கி உடல் ஆரோக்கியத்தை உண்டாக்குவது, நோயை நீக்கி உடல்நல வெற்றியை உண்டாக்குவது என்று பொருள்.

வெற்றிலையின் வேறு பல பெயர்கள்

வெற்றிலையை தாம்பூலம், தாம்பூல வள்ளி, திரையல், மெல்லிலை, வெள்ளிலை, மெல்லடகு என்றும் ஆங்கிலத்தில் பெட்டல் லீப்,  தெலுங்கில் தாம்பலபாக்கு, மலையாளத்தில் வெட்டிலா, கன்னடத்தில் வில்லியடீலி, சமஸ்கிருதத்தில் நாகவல்லி, இந்தியில் பான் உருதில் தாம்பூலி என்றும் அழைக்கப்படுகிறது.

மலேசியாவில் தோன்றிய வெற்றிலை தாவர இனம் இந்தியா, இந்தோனேஷியா நாடுகளில் வளர்க்கப்படுகிறது. தமிழகத்தில் காவிரி நதிக்கரை ஓரப் பகுதிகளில், தஞ்சை, கும்பகோணம், தேனி, கரூர், திருச்சி மாவட்டங்களில் வெற்றிலை பணப்பயிராக வளர்க்கப்படுகிறது.

வெற்றிலை இந்தியாவின் வெப்ப பாகத்திலும் சதுப்புள்ள இடங்களிலும் பயிர் செய்யப்படுவது, மரங்கள் மீது ஏற்றி விடும் கொடி இனத்தைச் சார்ந்தது. இந்த வெற்றிலையானது இலைக்காகவே பயிர் செய்யப்படுகிறது. இந்த இலையானது நிறத்திற்காக ஓர் இனமும், பணத்திற்காக ஓர் இனமும், கார்ப்புச் சுவைக்காக ஓர் இனமும் ஆக மூன்று வகையாக பயிர் செய்யப்படுகிறது.

வெற்றிலை வகையும்

இந்த மூன்று இனத்தையும் தனித்தனியே பார்க்கும்போது இதைத் தெளிவாகத் தெரிந்து கொள்ளலாம். மிகுந்த தளிர் நிறமும், மிகுந்த மணமும், காரமும், இளம்பச்சை நிறமுள்ள தளிர் இல்லாத நிறமும் உள்ள வெற்றிலைக்கு வெள்ளை வெற்றிலை என்று பெயர். கறுமை நிறமும், மிகுந்த காரமும் உடைய வெற்றிலைக்கு கறுப்பு வெற்றிலை அல்லது கம்மாறு வெற்றிலை என்று பெயர்.

மூன்றாவதாக கற்பூர மணமும், காரமும் உள்ள வெற்றிலை மிகவும் பெரியதாகவும், தாமரை இலை போன்று பெரியதாக இருப்பதும், நல்ல நிறத்தோடும் இருப்பது கற்பூர வெற்றிலை என்று பெயர்.  இந்த மூன்று விதமான வெற்றிலைகளும் சுவையில் விறுவிறுப்பு பொருந்திய கார்ப்புத் தன்மை உடையதாகும்.  இது வெப்பத்தை உண்டாக்கி உஷ்ணத்தைத் தரக்கூடியது.

மைசூர் வெற்றிலையில் பெருமளவு பான் பீடா தயாரிக்க பயன்படுத்தப்படுகிறது.  சுவைமிக்க இந்த வெற்றிலையை அரசின் பாதுகாப்போடு வளர்க்கப்பட்டு வருகிறது.

பிணி தீர்க்கும் மருந்தாகும் வெற்றிலை..

உதறல் வாதம் என்று கூறக்கூடிய வாய் பேசும்போது உதறி பேசும் வாயுவை அகற்றி உடம்பில் துவர்ப்பை பெருக்கி காமத்தை பெருக்கக் கூடியதும், பசித்தீயை உண்டாக்குவதும், பெண்களுக்கு பாலை பெருக்கக்கூடியதும், உமிழ்நீரை அதிகமாக சுரக்கச் செய்வதும் இதன் பண்புகள் இம்மூன்று வெற்றிலையிலும் ஒரே தன்மை அடங்கி உள்ளதாகும்.

வெற்றிலையை இடித்து சாறு பிழிந்து அரை அவுன்ஸ் அளவு காலையில் சாப்பிட்டபிறகு குடித்தால் வாத, பித்த, கபம் ஆகிய ஐயம், சைத்தியம், காணாக்கடி என்னும் முப்பிணியும் தீரும்.

கம்மாறு வெற்றிலைச் சாறு தினம் காலை உணவிற்கு பிறகு அரை அவுன்ஸ் வீதம் மூன்று நாள் சாப்பிட்டால் வாத, பித்த, கபத்தால் ஏற்படும் ஏற்றத்தாழ்வை குறைக்கும்.  உடலில் நீர் ஏற்றம், தலையில் நீர் ஏற்றம், தலைபாரம், உணவு செரியாமை, மந்தம், குரல் கம்மல், வயிற்று வலி, வயிற்று உப்புசம் ஆகியவை நீங்கும்.

தாம்பூலம் உண்ணும் முறை

வெற்றிலையை உண்ணும் போது இதன் காம்பையும் நுனியையும் வெற்றிலையின் பின்புறத்தில் உள்ள நரம்பையும் நீக்கியே உண்ணவேண்டும். அப்படி நீக்கி உண்பதால்தான் பலன் உண்டு. அவ்வாறன்றி காம்பு நீக்காமல், நுனிநீக்காமல், நரம்பு நீக்காமல் உண்பது துர்குணமாகும். இப்படி உண்பதால் வெற்றிலையின் மருத்துவகுணம் கிடைக்காமல் போகும்.

அதுமட்டுமல்லாமல், வெற்றிலையை மென்று உண்டபிறகு பாக்கு வெற்றிலைகளை உண்ண வேண்டும். இப்படி உண்பதால் துவர்த்தல், சொக்குதல், மூர்ச்சையாதல், பிசு பிசுப்புத்தன்மை முதலியன ஏற்படாமல் இருக்கும். தவறி பாக்கை முதலில் உண்டால் உடலில் துன்பம் நேரிடுவதோடு வயிற்றில் புண், கபம் கட்டுதல், சொக்குதல் போன்றவை உண்டாகும்.

அப்படி அல்லாமல், வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு இவைகளை ஒன்றாக மெல்லும்போது அதில் நின்று ஊறிய முதல் நீர் நஞ்சாகவும், இரண்டாவது நீர் மிகு பைத்தியம் தருபவையாகவும், மூன்றாவது நீர் அமிர்தமாகும், நான்காவது நீர் அதி இனிப்பாகவும், ஐந்து மற்றும் ஆறாவது நீர் பித்தத்தோடும், அக்கினி மந்தம், பாண்டு நோய் ஆகியவற்றை உண்டாக்கும் என்பதால் தான் வெற்றிலை பாக்கை உண்ணும் பொழுது முதல் மற்றும் இரண்டாவது நீர் துப்பிவிட வேண்டும். மூன்றாவது மற்றும் நான்காவது நீர் விழுங்கிவிட வேண்டும். ஐந்தாவது நீர் சுரக்கும் முன்பு வெற்றிலை பாக்கை துப்பிவிடவேண்டும் இதுவே தாம்பூலம்  உண்ணும் முறையாகும்.

வெற்றிலை பாக்கு உண்ணும் கால வேற்றுமைகள்:

காலையில் பாக்கு அதிகமாகவும், வெற்றிலை, சுண்ணாம்பு குறைவாகவும் மென்றால் மலக்குற்றம் நீங்கி இரண்டு முதல் நான்கு முறை பேதியாகும். எனவே, மந்தம், மலசிக்கல் உள்ளவர்கள் காலையில் பாக்கை அதிகமாகவும், வெற்றிலை சுண்ணாம்பு குறைவாகவும் உண்ண வேண்டும்.

மதியம் சுண்ணாம்பு சிறிது அதிகமாகவும், வெற்றிலை பாக்கு குறைவாகவும் மென்றால் நல்ல பசித்தீ உண்டாகும். பசி இல்லாதவர்கள் மதிய உணவிற்கு பின்பு இவ்விதமாக உண்டால் ஆரோக்கியமான பசி உண்டாகும். மாலையில் வெற்றிலை அதிகமாகவும், பாக்கு, சுண்ணாம்பு குறைவாகவும், மெல்வதால் வாயிலுள்ள இரணங்கள் குணமாகும்.

வயிற்று இரணத்தால் வாயில் வீசும் துர்வாடை நீங்கி நல்ல மணம் வீசும். இப்படி நோய்க்கேற்றவாறு வெற்றிலை பாக்கை கூட்டி குறைக்கும்போது பல்வேறுபட்ட நோய்கள் நீங்கும். இதேபோல் வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு ஆகிய மூன்றின் அளவுகளைக் கூட குறைய செய்து நேரம், காலம் ஆகியவற்றை கணித்து கொடுத்தோமானால் பல நோய்களை குணமாக்கலாம்.

வெற்றிலை… சுக்கு… லவங்கம்…

வெற்றிலை பாக்கு சுண்ணாம்போடு காய்ச்சுக்கட்டி என்கிற துவர்ப்பு பாக்கும், சுக்கு கால் பாக்களவும், ஒரு லவங்கபூவும் சேர்த்து உண்டால் ஆடுகின்ற பற்கள் இறுகி கெட்டியாகும். வயிற்றில் உள்ள புழுக்கள் சாகும்.  மனத்தில் களிப்பு (மன ஆரோக்கியம்) உண்டாகும்.  அக்கினி மந்தம், நாசி ரோகம், சுவாச காசம், வயிற்றைப்பற்றிய துர்குணங்கள் நீங்கி உடல் ஆரோக்கியமும், உடல் ஒளியும், அறிவுக் கூர்மையும், கண்ணுக்கு குளிர்ச்சியும் உண்டாகும்.

 

இரண்டு வெற்றிலையும் ஒரு அரிசி எடை சாம்பிராணி பதங்கமும் சேர்த்து மென்று சுவைக்கும்படி செய்தால் குரல் கம்மல், தொண்டை அடைப்பு, தொண்டையைப்பற்றிய நோய்கள் நீங்கும்.

வெற்றிலையை இளம் சூட்டில் வதக்கி சாறு எடுத்து அச்சாற்றை மூக்கில் இரண்டு துளி விட தலைநோய், தலைபாரம், தலையில் நீர்தேக்கம் ஆகியவை நீங்கும். காதில் இரண்டு துளிகள் சாறுவிட காது குத்தல், காது இரைச்சல், காது மந்தம் ஆகியவை நீங்கும்.

வெற்றிலைக் கொடி வேர்… மிளகு… கோரோசனை அரிசி…

வெற்றிலைக் கொடியின் வேரும், இரண்டு மிளகும் சேர்த்து சாப்பிட்டால் கருத்தடை உண்டாகும். இதை ஆண்கள் உண்டால் விந்துவில் உயிரணு இருக்காது. இது ஆண்களின் கருத்தடை மருந்தாகும்.

வெற்றிலை வேரை வாயில் அடக்கி பாடகர்கள் அப்பியாசம் (பயிற்சி) செய்தால் தொண்டை ஒலி பெறுவதோடு தொண்டை வளம் பெருகும்.

இரண்டு வெற்றிலையுடன் கோரோசனை அரிசி எடை சேர்த்து உண்டால் காமப்பெருக்கை உண்டாக்கும். கலவியில் இச்சை உண்டாகும். சிறுவர்களுக்கு மலக்குற்றம் நீங்கும். அதோடு இருமல், மூச்சுத்திணறல், கோழைக்கட்டு ஆகியவை நீங்குவதோடு இதை பெண்கள் உண்டால் ஆண்கள் மீது பற்றும், ஆண்கள் பெண்கள் மீது பற்றும் உண்டாகும்.

இரத்த விருத்திக்கும் உடல் ஆரோக்கியத்துக்கும்…

இரண்டு வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு, ஜாதிக்காய் ஒரு அரிசி எடை, ஜாப்பத்திரி ஒரு அரிசி எடை, கஸ்தூரி ஒரு கடுகு அளவு, ஏலக்காய் ஒன்று, லவங்கம் ஒன்று, பாதாம் அரைப்பருப்பு, முந்திரி அரைப்பருப்பு, திராட்சை நான்கு, குல்கந்து கால் டீஸ்பூன் ஆகியவை சேர்த்து இரவு உணவுக்குப் பிறகு உண்டால் ஆண், பெண் இருபாலாருக்கும் இரத்த விருத்தியும், உடல் ஆரோக்கியமும், மன ஆரோக்கியத்தையும் உண்டாக்கி உடலுறவில் விசேஷ பலன் தருவதோடு உடல் வலி, உடலுறவால் ஏற்படும் உபாதைகள் நீங்கும்.

வெற்றிலையில் 84% நீர்ச்சத்தும், 3.1% புரதச்சத்தும், 0.8% கொழுப்புச்சத்து மற்றும் கால்சியம், வைட்டமின்-சி, கலோரி சத்துகளும் இருக்கின்றன. சமீபத்திய ஆராய்ச்சி ஒன்றில் வெற்றிலையில் வீரியமிக்க நோய் எதிர்ப்புத் திறன் கொண்டதாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

வெற்றிலையின் மகத்துவத்தைப் பற்றி அகத்தியர் குறிப்பிடுவது,

“ஐயம் அறுங்கான் அதன் சார கொண்டாக்காற்

பையிச் சயித்தியம்போம் பைக் கொடியே”

இவ்வாறு பாடல் ஒன்றில் கபத்தால் ஏற்படும் நோய்களை வெற்றிலை முழுவதுமாக போக்கிவிடும் எனக் குறிப்பிடுகிறது.

 

 

 

– Dr. D.பாஸ்கரன், BSMS.,

தொடர்புக்கு: drbaskaran57@gmail.com
One thought on “முப்பிணி தீர்க்கும் வெற்றிலை..!

  1. Ilakkuvanar Thiruvalluvan

    மரு.பாசுகரன் வெற்றிலையின் மருத்துவப் பயன்களைச் சிறப்பாக எழுதியுள்ளார். எனினும் எனத் தவறாகக் குறிப்பிட்டுள்ளார். வெற்றி+இலை என்றால் வெற்றியிலை என்றுதான் வரும். இலை தவிர, பூ, காய், கனி எதுவும் இல்லாத வெற்று இலை என்பதால் வெற்றிலை என அறிவியல் முறையில் பழந்தமிழர்கள் பெயரிட்டுள்ளனர். இதனைத் தவறாகக குறிப்பிடுவதால் பிற செய்திகள் மீதும் படிப்போர்க்கு ஐயம் வரும். எனவே, இணையப் பதிப்பிலிருந்து இந்த வரியை எடுக்க அன்புடன் வேண்டுகின்றேன்.
    அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன், எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! தமிழே விழி! தமிழா விழி!

    Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *