- செய்திகள், மாவட்டச்செய்திகள்

முன்னணி பொதுத்துறை நிறுவனமாக என்.எல்.சி திகழும் மத்திய நிலக்கரி துறை அமைச்சக செயலர் நம்பிக்கை

காட்டுமன்னார்கோவில், ஜன.2: புத்தாண்டில் முன்னணி பொதுத்துறை நிறுவனமாக என்.எல்.சி
திகழும் என்று மத்திய நிலக்கரித்துறை அமைச்சக செயலர் நம்பிக்கை தெரிவித்தார்.

கட்டுமான பணி

நெய்வேலி என்.எல்.சி நிறுவனத்தை மத்திய நிலக்கரி துறை அமைச்சக செயலர் அனில் ஸ்வரூப் பார்வையிட்டார். நெய்வேலியில் புதிதாக ஆயிரம் மெகாவாட் திறனுடைய புதிய அனல்மின் நிலைய கட்டுமான பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. இதை மத்திய நிலக்கரி துறை செயலர் அனில் ஸ்வரூப் நேற்று ஆய்வு செய்தார். தொடர்ந்து என்.எல்.சி சுரங்கம் மற்றும் அனல்மின்நிலையங்களை பார்வையிட்டார். பளு தூக்கும் இயந்திரத்தின் இயக்கத்தையும் துவக்கிவைத்தார்.

நவீன தொழில்நுட்பம்

பின்னர் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:
என்.எல்.சி.யில் ஆயிரம் மெகாவாட் திறனுடன் அமைக்கப்பட உள்ள புதிய அனல்மின் நிலையம்  முதலாவது அனல் மின்நிலையத்திற்கு மாற்றாக அமைக்கப்படுகிறது. சுற்றுசூழலுக்கு முக்கியத்துவம் கொடுத்து நவீன தொழில்நுட்பங்களை புகுத்தி இது அமைக்கப்படுகிறது. கடந்த 2014- 2015 ம் நிதி ஆண்டை பொறுத்தவரை நிலக்கரி துறையில் நெருக்கடியான சூழலை எதிர்கொள்ள வேண்டியிருந்தது.

முன்னணி நிறுவனம்

எதிர் வரும் ஆண்டு நிலக்கரி துறைக்கு பிரகாசமான ஆண்டாக அமையும் என நம்புகிறேன். என்.எல்.சி நிறுவனத்தின் செயல்பாடுகளை ஆய்வு செய்ததில் இந்திய பொதுத்துறை நிறுவனங்களில் என்.எல்.சி முன்னனி நிறுவனமாக திகழும். இவ்வாறு அவர் கூறினார்.
தொழிற்சங்கத்தினருடன் சந்திப்பு

மேலும் தொழிற்சங்கங்களை சேர்ந்த தலைவர்கள் பல்வேறு சங்கங்களின் பிரதிநிதிகள் ஆகியோரை அவர் சந்தித்தார். அப்போது என்.எல்.சி தலைவர் சரத்குமார் ஆச்சார்யா, நிதிதுறை இயக்குனர் ராகேஷ் குமார், சுரங்கத்துறை இயக்குனர் சுபீர்தாஸ், மின்துறை இயக்குனர் தங்கபாண்டியன், திட்ட மற்றும் செயலாக்கத்துறை இயக்குனர் செல்வகுமார், மனிதவளத்துறை இயக்குனர் முத்து ஆகியோர் பங்கேற்றனர்.

Leave a Reply