- செய்திகள்

முதல்-அமைச்சர் ஜெயலலிதா எடுத்த தொடர் நடவடிக்கையால் சுற்றுலாத் துறையில் தமிழ்நாடு முதலிடம் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் தகவல்…

சென்னை, ஆக.25-
முதல்-அமைச்சர் ஜெயலலிதா எடுத்த தொடர் நடவடிக்கையால் சுற்றுலாதுறையில் இந்தியாவில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளதாக அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் தெரிவித்தார்.

சட்டசபையில் சுற்றுலாதுறை மானியக்கோரிக்கை விவாதத்துக்கு  அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் பதில் அளித்து பேசியதாவது:-

தமிழகம் முதலிடம்

சுற்றுலா துறைக்கு முதல்-அமைச்சர் எடுத்துவரும் பல்வேறு தொடர் நடவடிக்கையால் 2014-ம் ஆண்டில் தமிழ்நாட்டிற்கு 32 கோடியே 75 லட்சத்து 55 ஆயிரத்து 233 உள்நாட்டுச் சுற்றுலாப் பயணிகளும், 46 லட்சத்து 57 ஆயிரத்து 630 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும் வருகை புரிந்துள்ளனர்.  இதனால் தமிழ்நாடு, இந்தியாவிலேயே சுற்றுலாப் பயணிகளின் வருகையில் முதலிடம் பெற்றுள்ளது.

அதேபோன்று, 33 கோடியே 34 லட்சத்து 59 ஆயிரத்து 47 உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளும், 46 லட்சத்து 84 ஆயிரத்து  707 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும் வருகை புரிந்து தொடர்ந்து  2015 -ம் ஆண்டிலும் சுற்றுலாப் பயணிகள் வருகையில் இந்தியாவிலேயே தமிழ்நாடு முதலிடம்  பெற்றுள்ளது.

முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் லட்சியக் கனவினை நிறைவேற்றும் வகையில் பொருளாதாரத்தின் அனைத்து முக்கிய பிரிவுகளையும் உள்ளடக்கிய, மாநிலத்தின் அமைதி, வளம், வளர்ச்சிகான திட்ட ஆவணமான "தமிழ்நாடு-தொலைநோக்குப் பார்வை – 2023" தீட்டப்பட்டுள்ளது.  வளர்ச்சி ஊக்குவித்தலை கருத்தில் கொண்டு, திறமையுள்ள போட்டியை சந்தைப்படுத்தியதன் மூலம் முதலீட்டுக்கு உகந்த  இடமாக, முதலீட்டாளர்களிடையே தமிழகம் முன்னிலை பெற்று திகழ்கின்றது.  பொருளாதாரத்தின் பின்னடைவுகளை களைந்து,  எப்போதும்  தங்கு தடையில்லாத வளர்ச்சிக்கான சூழலை வழங்கும் மாநிலமாக தமிழ்நாடு விளங்குகிறது.

கடற்கரை சுற்றுலா

எனவே, வாய்த்திருக்கின்ற சூழலைப் பயன்படுத்தி  உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பதற்கு தமிழக சுற்றுலாத்துறை  பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தமிழகத்தின் சுற்றுலா வளத்தை எடுத்தியம்ப, சந்தைப்படுத்துதல், விளம்பர பிரச்சாரங்கள் மற்றும் கண்காட்சிகள்  தேசிய மற்றும் சர்வதேச அளவில் நடத்தப்படுகின்றன. பன்முக சுற்றுலாத் தலங்கள், சிறப்பான சட்டம் ஒழுங்கு, சுற்றுலாத் தலங்களுக்கு நேரடி இணைப்புகள், ஆடம்பர  மற்றும் நடுத்தர வகை பயணத்திற்கான சுற்றுலா வசதிகள், சுற்றுலா நேசம் ஆகியன காட்சிப்படுத்தப்படுகின்றன.

உயர்ந்த சுற்றுலா கோட்பாடுகளை உள்ளடக்கிய தொலைநோக்குப் பார்வை  கொண்ட சுற்றுலாச் சுற்றுக்களை உருவாக்கவும், போட்டி மனப்பான்மை மற்றும்  நிலைத்தன்மையை சுற்றுலாத் தொழில் புரிவோரின்  துணையோடு ஒருங்கிணைத்து,  சுற்றுலா அனுபவங்களை வளப்படுத்தவும், வேலை வாய்ப்புகளை  அதிகரிக்கவும்  இந்திய சுற்றுலா அமைச்சகம் "சுவதேஷ் தர்ஷன்" என்ற கடற்கரை சுற்றுலாத் தலங்களை மேம்படுத்தும் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

சுற்றுலா பொருட்காட்சி

தமிழ்நாட்டிற்கு வருகை புரியும் அனைத்து சுற்றுலாப் பயணிகள் மற்றும் வாங்குவோர்,  விற்போர் சந்திப்பில் கவனம் செலுத்தி, வெளிநாட்டை சேர்ந்த வாங்குவோரும், உள்நாட்டை சேர்ந்த விற்போரும் நேரடி தொடர்பு கொள்ள வாய்ப்பு ஏற்படுத்தவும், கொள்கை வகுப்போர், முதலீட்டாளர்கள், ஊடகங்கள் சார்ந்தோரிடையே தமிழ்நாட்டின் சுற்றுலா வளத்தை காட்சிப்படுத்தவும், பிற மாநிலங்களாலும் புகழ்பெற்ற நிறுவனங்களாலும் நடத்தப்படும் சுற்றுலா சந்தைகள் மற்றும் சுற்றுலா பொருட்காட்சிகளில் தமிழ்நாடு சுற்றுலாத்துறை பங்கேற்று வருகிறது.

2015-2016-ம் ஆண்டில் ஆசிய வளர்ச்சி வங்கியின்  நிதியுதவியுடன், ரூபாய் 255 லட்சம் செலவில், மாமல்லபுரம், கடற்கரை ஓய்வு வளாகத்தை தரம் உயர்த்தும் பணியும்,  ரூபாய் 325 லட்சம் மற்றும் ரூ.145 லட்சம் செலவில் முட்டுக்காடு மற்றும் முதலியார்குப்பத்தில் படகு குழாம்களின் தரத்தை உயர்த்தும் பணியும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

கல்லெல்லாம் சிலைகள் வடிக்கப்பட்டு காண்போர் உள்ளங்களை எல்லாம் கவரும் வகையில் இருக்கும் பல்லவர் காலத்து கலைக்கோயிலாம் மாமல்லபுரத்திற்கு வருகை தரும் பல்வேறு மொழிப் பேசும் சுற்றுலாப் பயணிகள் அறிந்து கொள்ளும் வகையில்  மாமல்லபுரம் குறித்து எட்டு மொழிகளில் ‘அலைபேசி செயலிகள்’ உருவாக்கப்பட இருக்கின்றது.

இவ்வாறு அமைச்சர் பேசினார்.

Leave a Reply