- செய்திகள்

முதல்-அமைச்சர் ஜெயலலிதா எடுத்த உறுதியான நடவடிக்கையால் மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் இல்லை சட்டசபையில் அமைச்சர் ஜெயக்குமார் பேச்சு…

சென்னை, ஆக. 9-
முதல்-அமைச்சர் ஜெயலலிதா எடுத்த உறுதியான நடவடிக்கையால் மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் இல்லை என்று சட்டசபையில் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
சட்டசபையில் மீன்வளத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்கு அமைச்சர் ஜெயக்குமார் பதில் அளித்து பேசியதாவது:-
2481 மீனவர்கள் விடுவிப்பு
மீனவர்கள் கடலுக்குள் விசைப் படகுகளோடு பயணிக்கிறபோது, சில நேரங்களில் இலங்கை கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்டு வாடுகின்ற நேரங்களில் அவர்களது இடர்ப்பாட்டைப் போக்கிட, வாதம் தொடுத்து, அழுத்தம் கொடுத்து மீனவர்களை மீட்டெடுத்து அவர்களின் குடும்பத்தாரின் கண்களில் ஆனந்தக் கண்ணீரை வரச்செய்கின்றவர் முதல்-அமைச்சர் ஜெயலலிதா. 2011-ம் ஆண்டு மே மாதம் முதல், முதல்-அமைச்சரின்  அயராத சீரிய முயற்சியால் இலங்கையில் சிறை பிடிக்கப்பட்ட 2481 மீனவர்களும், 357 படகுகளும் விடுவிக்கப்பட்டன.
பாக் வளைகுடா பகுதியில் நமது மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருக்கும் போது இயற்கைச் சீற்றத்தினாலோ அல்லது எந்திரக் கோளாறினாலோ இலங்கைக் கடற்பகுதிக்குள் இழுத்துச் செல்லப்பட நேர்ந்தது. சில நேரங்களில் துப்பாக்கிச் சூட்டிற்கும் ஆளாக நேர்ந்தது. இவ்வாறான நிகழ்வுகளில் இறந்த மீனவர்களுக்கு இரங்கல் தெரிவித்தும் அவர்களின் குடும்பங்களுக்குப் பேராதரவுக்கரம்நீட்டித் தாயுள்ளத்தோடு 3 லட்சம் ரூபாயும், உயிர் நீத்த மீனவர் குடும்பத்தில் வருமானம் ஈட்டக் கூடிய ஒரே நபராக இருந்தால் 5 லட்சம் ரூபாயும் வழங்கப்பட்டு வருகிறது.
துப்பாக்கி சூடு நிகழாமல்
மேலும், முதல்-அமைச்சர் உறுதியான நடவடக்கைகளை மேற்கொண்டதன் பயனாக 2011-2012-ம் ஆண்டு முதல் இன்று வரை நமது மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் நிகழாமல் கடலோரக் காவல் தெய்வமாக நின்று காத்துக் கொண்டிருக்கும் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவை மீனவ மக்கள் வருண தெய்வமாக எண்ணி வணங்கி வழிபடுகிறார்கள்.
கச்சத்தீவு மீதான இந்தியாவின் உரிமையை மீண்டும் நிலைநாட்டி, கச்சத்தீவு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் பல நூற்றாண்டுகளாக தமிழக மீனவர்கள் மீன்பிடித்து வந்த பாரம்பரியமான மீன்பிடி உரிமைகளை மீட்டெடுக்க முதல்-அமைச்சர் ஜெயலலிதா மேற்கொண்டு வரும் இடையறா நடவடிக்கைகள் மூலம், மீனவப் பெருங்குடி மக்களின் குலதெய்வமாய் முதல்-அமைச்சர் ஜெயலலிதா திகழ்கிறார்.
தேர்தல் அறிக்கையில் தெரிவித்தது போல், நடப்பு ஆண்டுமுதல் மீன்பிடித் தடைக்காலத்தில் வழங்கப்படும் இந்த நிவாரணத் தொகையை 5000 ரூபாயாக உயர்த்திவழங்கிட முதலவர் உத்தரவிட்டுள்ளார். தமிழக மீனவர்களிடம் இந்த திட்டம் மிகுந்த வரவேற்பை ஏற்படுத்தியிருக்கிறது.
துறைமுகங்கள்
படகுகளைச் சார்ந்தே மீனவர்களின் வாழ்வாதாரம் அமைகிறது. அலைகளின் கொந்தளிப்பிலும் சூறைக்காற்றிலும் படகுகள் சேதமடைகிற ஒரு இக்கட்டான நிலை மீனவர்களுக்கு இருந்தது. இச்சிக்கலிலிருந்து அவர்களைக் காப்பதற்காக மீனவர்கள் தத்தம் படகுகளை நிறுத்தி வைப்பதற்காக மிகச் சிறந்த உட்கட்டமைப்பு வசதிகளுடன் கூடிய மீன்பிடித் துறைமுகங்களை அமைத்துத்தர அரசு உறுதிகொண்டிருக்கிறது. மீனவர்கள் பிடித்து வரும் மீன்களின் இறக்குமதி ஏற்றுமதி வசதிக்காக நவீன இறங்கு தளங்களுடன் இந்தத் துறைமுகங்கள் அமைக்கப்படும்.
இதனால் பிடித்துவரப்படும் மீன்கள் சுகாதாரமாகக் கையாளப்படும். நல்ல விலைபெற்று நம் நாட்டின் ஏற்றுமதி வருவாய் உயரும். இதனை கருத்தில் கொண்டு  1105 கோடி ரூபாயை கடந்த 5 ஆண்டுகளில் மீன்வள உள்கட்டமைப்பிற்கு என்று ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அமைச்சர் ஜெயக்குமார் பேசினார்.

Leave a Reply