- உலகச்செய்திகள், செய்திகள்

முதல்முறையாக சீக்கியர்களை குறிவைத்து ஐ.எஸ். தாக்குதல் ஜெர்மனியில் நடந்த குருத்வாரா வெடிகுண்டுவீச்சு

பெர்லின், ஏப். 23:-

ஜெர்மனியில் கடந்த வாரம் சீக்கிய குருத்வாராவில் வெடிகுண்டு வீசப்பட்டது, ஐ.எஸ். தீவிரவாதிகளின் செயல் என்று அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

சீக்கியர்களையும் அவர்களின் வழிபாட்டு தலங்களையும் குறிவைத்து ஐ.எஸ். தீவிரவாதிகள் முதல்முறையாக இந்த தாக்குதலை நடத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜெர்மனியின் எஸ்ஸன் நகரில் உள்ள சீக்கிய குருத்வாராவில் கடந்த சனிக்கிழமை ஒரு திருமண நிகழ்ச்சி நடந்தது.  அப்போது குருத்வாரா வாயிலில் திடீரென வெடிகுண்டு வெடித்தது. இதில் மதகுரு உள்ளிட்ட 3 பேர் காயமடைந்தனர்.

இது குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வந்த நிலையில், இது தொடர்பாக 2 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இது குறித்து வடக்கு ரைன் வெஸ்ட்பாலியா உள்துறை அமைச்சர் ரால்ப் ஜேக்கர் நிருபர்களிடம் கூறுகையில், “ எஸ்ஸன் நகர குருத்வாராவில் நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக இரு இளைஞர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.  இரு இளைஞர்களும் ஐ.எஸ். ஆதரவாளர்கள் என்பதால், தீவிர விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளோம்.

மேலும், இந்த இரு இளைஞர்களோடு தொடர்பு கொண்டிருக்கும் மற்றவர்கள் குறித்தும் விசாரித்து வருகிறோம். ஜெர்மன் நாட்டில் முதல் முறையாக சீக்கியர்கள் மீது ஐ.எஸ். தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியிருக்கிறார்கள் '' என்று தெரிவித்தார்.

இதற்கிடையே ஜெர்மனியின் ஏ.ஆர்.டி சேனல் வெளியிட்ட செய்தியில், குருதுவாரா தாக்குதலில் கைது செய்யப்பட்ட இரு இளைஞர்களில் ஒருவர் பெயர் யூசுப். இவர் ஐ.எஸ். ஆதரவாளர் என்பதால் இவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், இந்த இளைஞர் தின்சிலேகன் எனும் நகரில் உள்ள ஒரு இஸ்லாமியப் படையுடன் தொடர்பு வைத்துள்ளார்.

தாக்குதல் நடத்தப்பட்ட குருத்வாராவில் இருந்து எடுக்கப்பட்ட கண்காணிப்பு கேமிராக்களை ஆய்வுசெய்து இந்த இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் குருத்வாரா வாயில் பகுதியில் வெடிகுண்டுகளை மறைத்து வைத்து வெடிக்கவைத்து இருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply