- உலகச்செய்திகள், செய்திகள், விளையாட்டு

முதலிடம் பிடித்தார் கோலி; இந்தியாவுக்கும் தொடர்ந்து முதலிடம் 20 ஓவர் கிரிக்கெட் உலக தரவரிசை

புதுடெல்லி, மார்ச் 30:-

20 ஓவர் உலக கிரிக்கெட்டின் சர்வதேச தரவரிசையில் இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி முதலிடத்தைப் பிடித்துள்ளார்.

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் 20 ஓவர் தரவரிசை வெளியிடப்பட்டுள்ளது. அதில் இந்தியாவின் நடைபெற்று வரும் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் அதிரடியாக ஆடிவரும் கோலி முதலிடத்தைப் பிடித்துள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

20 ஓவர் உலக கோப்பையில் 4 ஆட்டங்களிலும் மொத்தம் 184 ரன்கள் குவித்த கோலி, முன்னதாக முதலிடத்தில் இருந்த ஆரோன் பின்ஞ்-ஐ பின்னுக்குத் தள்ளி முதலிடம் பிடித்துள்ளார். கோலி 871 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார். இவரைவிட 68 புள்ளிகள் பின் தங்கி பின்ஞ் 803 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தில் உள்ளார். மூன்றாம் இடத்தில் நியூசிலாந்து வீரர் மார்டின் குப்தில் இடம் பிடித்துள்ளார்.

பந்து வீச்சாளர்கள் வரிசையில் மேற்கிந்தியத் தீவுகள் வீரர் சாமுவேல் பட்ரீ முதலிடத்தைப் பிடித்துள்ளார். இந்திய வீரர் அஸ்வினை பின்னுக்குத் தள்ளிவிட்டு பட்ரீ அந்த இடத்துக்குச் சென்றுள்ளார்.

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் பட்ரீ 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஆனால் அஸ்வின் 4 விக்கெட்டுகளை மட்டுமே வீழ்த்தினார். இதையடுத்து அஸ்வின் 3-வது இடத்துக்கு சரிந்துவிட்டார்.
20 ஓவர் கிரிக்கெட் தரவரிசையில் முதல் 5 இடத்தில் உள்ள 4 அணிகள் தற்போது நடைபெற்று வரும் 20 ஓவர் உலக கோப்பை அரை இறுதிப் போட்டியில் மோத உள்ளன. 4-வது இடத்தில் உள்ள தென் ஆப்பிரிக்கா போட்டியைவிட்டு வெளியேற்றப்பட்டுள்ளது.
இதனிடையே அணியின் தரவரிசை ஒவ்வொரு ஆட்டத்துக்குப் பின்னும் மாறும் நிலையில் வீரர்களுக்கான தரவரிசை 20 ஓவர் உலக கோப்பையின் இறுதிப் போட்டிக்குப் பின்னரே மாறும் என்பது குறிப்பிடத்தக்து.

Leave a Reply