- செய்திகள், மாவட்டச்செய்திகள்

முதலமைச்சர் ஆசை கிடையாது! அன்புமணி ராமதாஸ் பேச்சு…

சிதம்பரம், ஏப். 28- 7 ஆண்டுகளாக நிழல் பட்ஜெட் வெளியிட்டு வரும் பா.ம.க. மட்டுமே இந்தியாவிலேயே வித்தியாசமான கட்சி என்று அக்கட்சியின் முதலமைச்சர் வேட்பாளர் அன்புமணி ராமதாஸ் கூறினார்.

சிதம்பரத்தில், 41 பா.ம.க. வேட்பாளர்கள் அறிமுகக்கூட்டம் காடுவெட்டி குரு தலைமையில் நடைபெற்றது. பா.ம.க. முதலமைச்சர் வேட்பாளர் அன்புமணி ராமதாஸ் வேட்பாளர்களை அறிமுகப்படுத்தி சிறப்புரையாற்றினார்.

‘‘நான் முதலமைச்சராக வரவேண்டும் என்ற ஆசை கிடையாது. 35 வயதில் நான் பதவியைப் பார்த்தவன். பல வெளிநாடுகளுக்கு சென்று வந்தவன். அங்குள்ள நல்ல திட்டங்களைப் பார்த்து அதேபோல தமிழகத்திற்கு செய்ய வேண்டும் என்று நினைக்கிறேன். மக்கள் மனதில் ஒரு மாற்றம் வந்துவிட்டது. முதலமைச்சர் என்று பணியாற்றாமல் ஒரு ஊழியனாகப் பணியாற்றுவேன்.

லட்சக்கணக்கான மாணவர்கள், இளைஞர்கள் முடிவு செய்துவிட்டார்கள். அன்புமணி ராமதாஸ் தான் முதலமைச்சர் என்று. சினிமா நடிகர்களுக்கு கோயில் கட்டும் ஒரே மாநிலம் தமிழ்நாடுதான். தமிழ்நாட்டை மீட்டுக் கொடுக்க ஒரு மாற்றம் தேவை. அது யார் கொடுப்பது. நீங்கள்தான் முடிவு எடுக்க வேண்டும். திராவிடக் கட்சிகள் தொடர்ந்து ஆட்சி செய்தால் யாராலும் தமிழகத்தைக் காப்பாற்ற முடியாது.

தமிழகத்தில் யார், யாரோ புரட்சி என்று பேசுகிறார்கள். ஆனால், உண்மையான புரட்சி எது என்பது மக்கள் முடிவு செய்வார்கள். புரட்சி என்பது உங்கள் வாழ்க்கையை உயர்த்துவதுதான் புரட்சி. நல்ல கல்வி தருவதுதான் புரட்சி. நல்ல விவசாயம் தருவதுதான் புரட்சி. தற்போது தமிழ்நாட்டில் கடன்தான் ஏறி உள்ளது. எந்த தைரியத்தில் இவர்கள் எல்லாம் தேர்தலில் போட்டியிடுகிறார்கள் என்று தெரியவில்லை.

இந்தியாவில் வித்தியாசமான கட்சி என்றால் அது பா.ம.க. மட்டும்தான். 2001 முதல் நிழல் பட்ஜெட் போட்டு வருகிறோம். 7 ஆண்டுகள் நிழல் வேளாண் பட்ஜெட் போட்டு வந்துள்ளோம். எங்களின் தேர்தல் அறிவிப்பின்படி நான் ஜெயித்தால் 2 ஆண்டுகளில் நிறைவேற்றுவேன். இல்லை என்றால் என் பதவியை ராஜினாமா செய்வேன்.
3 தலைமுறையை கருணாநிதி மதுவால் நாசப்படுத்தி விட்டார். மதுவை திணித்த கருணாநிதி மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்.’’ என்று பேசினார் அன்புமணி ராமதாஸ்.

Leave a Reply