- செய்திகள், விளையாட்டு

மீண்டெழுமா நடப்புச் சாம்பியன்?

 

மும்பை, ஏப்.20:-
ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் நடப்புச் சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணியும் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் இன்று மோதுகின்றன.

ஐபிஎல் கிரிக்கெட்டை பொருத்தவரை 2008-ம் ஆண்டிலிருந்து இதுவரை இரு அணிகளும் 17 முறை மோதியுள்ளன. அதில் மும்பை அணி 9 முறை வெற்றி கண்டுள்ளது. அதே சமயம் இந்த ஐபிஎல் போட்டியில் இதுவரை 4 போட்டிகளில் விளையாடி 3 போட்டிகளில் மட்டுமே வெற்றி கண்டுள்ளது. அதுவும் கடைசி இரண்டு போட்டிகளில் தோல்வி கண்டுள்ளது. பெங்களூரு அணியைப் பொருத்தவரை 2 போட்டிகளில் விளையாடி ஒன்றில் வெற்றியும் ஒன்றில் தோல்வியும் கண்டுள்ளது.

பெங்களூரு அணியில் ஆஸ்திரேலியாவின் வேகப் பந்து வீச்சாளர் மிச்சேல் ஸ்டார்க்  காயம் காரணமாக அணியில் இல்லாதது அணிக்கு பலவீனம்தான். அதே போல் 20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் காயம் அடைந்த மேற்கிந்தியத் தீவுகள் வீரர் பட்ரீயும் இன்னும் காயத்தில் இருந்து குணமடையாததால் இதுவரை பெங்களூரு அணிக்காக ஐபிஎல் போட்டியில் பங்கேற்கவில்லை. அதுவும் கூட பெங்களூரு அணிக்கு சற்று பலவீனம் அளிக்கக் கூடியதுதான். அதே சமயம் பேட்டிங்கைப் பொருத்தவரை விராட் கோலி, டி வில்லியர்ஸ், ஷேன் வாட்சன் ஆகிய திறமை வாய்ந்தவர்கள் களத்தில் உள்ளனர். கெயிலைப் பொருத்தவரை இரண்டு போட்டிகளிலும் பிரகாசிக்கவில்லை. ஆனால் அவர் எப்படியும் சதம் அடித்துவிடுவார் என்று கோலி நம்பிக்கையோடு உள்ளார்.

பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி அணியின் வீரர் டிகாக் சதம் அடித்துள்ளார். அதுவும் இந்தப் போட்டியில் அடிக்கப்பட்டுள்ள முதல் சதம் ஆகும். ஆக பெங்களூரு அணி தனது பந்து வீச்சை மேம்படுத்திக் கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

மும்பை அணி தனது சொந்த மண்ணில் இந்த ஐபிஎல் போட்டியில் புதிதாக களம் இறங்கியுள்ள புனே, குஜராத் ஆகிய இரண்டு அணிகளிடமும் தோல்வி கண்டுள்ளது. ஆக இந்தப் போட்டியில் சொந்த மண்ணில் எப்படியாவது வெற்றி பெற்றாக வேண்டிய நிலையில் உள்ளது அது. இதற்குப் பின் மும்பை அணிக்கு சொந்த மண்ணில் ஒரே ஒரு போட்டிதான் பாக்கி உள்ளது. மற்ற போட்டிகள் நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து ஜெயப்பூரில் நடக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆக இரண்டு அணிகளும் வெற்றிக்கான முனைப்பில் களம் இறங்க உள்ள நிலையில் போட்டி விறுவிறுப்பாக இருக்கும் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை.

Leave a Reply