- செய்திகள்

மீண்டும் பூமிக்கு திரும்பி வரும் இஸ்ரோவின் ராக்கெட் என்ஜின் சோதனை வெற்றி ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி பாராட்டு…

சென்னை, ஆக.29-

விண்ணின் காற்று மண்டலத்தில் இருக்கும் ஆக்சிஜனை உறிஞ்சி திரவ ஹைட்ரஜன் ஆற்றலின் மூலம் பறந்து, மீண்டும் பூமிக்கு வந்துசேரும் புதிய ’ஸ்கிராம்ஜெட்’ ரக ராக்கெட் என்ஜின் பரிசோதனை நேற்று வெற்றிகரமாக நடந்தது. இதற்கு இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி பாராட்டு தெரிவித்துள்ளார்.

ஸ்கிராம்ஜெட் ராக்கெட்

’ஸ்கிராம்ஜெட்’ என பெயரிடப்பட்டுள்ள இந்த ராக்கெட் என்ஜினை ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் இருந்து நேற்று காலை 6 மணிக்கு இஸ்ரோ விஞ்ஞானிகள் வெற்றிகரமாக பரிசோதித்தனர். 3 ஆயிரம் கிலோ எடையுடன் கொண்ட இந்த ராக்கெட் என்ஜினில் 5 வினாடிகளில் திரவ ஹைட்ரஜனும், ஆக்சிஜனும் எரியூட்டப்பட்டு நடத்தப்பட்ட இந்த பரிசோதனை வெற்றிகரமாக நடைபெற்றதாக இஸ்ரோ தலைவர் கிரண் குமார் தெரிவித்துள்ளார்.

விண்ணில் பறந்தது

விண்ணை நோக்கிச் சென்ற சுமார் 300 வினாடி பயணத்துக்கு பின்னர், ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து சுமார் 320 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள வங்காள விரிகுடா கடல் பகுதியில் இந்த ’ஸ்கிராம்ஜெட்’ ராக்கெட் விழுந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

வழக்கமாக ராக்கெட்கள் பறப்பதற்கு தேவையான ஹைட்ரஜன் வாயுவை எரியூட்டுவதற்காக  ராக்கெட்டின் பக்கவாட்டில் உள்ள டாங்கிகளில் ஆக்சிஜன் அடைத்து வைத்து அனுப்பப்படும். செலுத்திய பின்னர் மீண்டும் பூமிக்கு திரும்பிவரும் வகையில் ’ஸ்கிராம்ஜெட்’ ரக ராக்கெட் என்ஜினில் பயன்படுத்தப்பட்டுள்ள புதிய தொழில் நுட்பத்தின்படி, வளிமண்டலத்தில் இருக்கும் ஆக்சிஜன் மூலம் இத்தகைய ராக்கெட் என்ஜின்கள் பறக்கும் என்பதால், ராக்கெட்டில் ஆக்சிஜனை அடைத்து அனுப்பும் எடைக்கு பதிலாக கூடுதலாக விண்கலங்களை பொருத்தி அனுப்ப முடியும்.
3-வது நாடு
இதன்மூலம் விண்கலங்களை ஏவும் செலவு பத்து மடங்கு குறையும் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போதைய நிலவரப்படி, ஒருகிலோ எடை கொண்ட பொருளை விண்ணில் செலுத்த 20 ஆயிரம் டாலர்கள் வரை செலவாகிவரும் நிலையில், நேற்றைய பரிசோதனை இஸ்ரோவின் சாதனை வரலாற்றில் ஒரு புதிய திருப்புமுனையாக பார்க்கப்படுகிறது.
இதுபோன்ற நவீன தொழில்நுட்பத்தில் அமெரிக்கா, பிரிட்டன் ஆகிய நாடுகள் மட்டுமே வெற்றி பெற்றுள்ள நிலையில் இந்த சாதனையை நிகழ்த்திய மூன்றாவது நாடு என்ற பெருமையை இந்த சோதனையின் மூலம் இந்தியா எய்தியுள்ளது.
ஜனாதிபதி பாராட்டு
இந்த சாதனையை புரிந்த இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி பாராட்டு தெரிவித்துள்ளார். எதிர்கால தொழில்நுட்ப முன்னேற்றத்தின் மூலம் வியத்தகு பரிசோதனையை வெற்றிகரமாக நிறைவேற்றியுள்ள இஸ்ரோ விஞ்ஞானிகளை பாராட்டுகிறேன் என தனது டுவிட்டரில் அவர் கூறியுள்ளார்.

Leave a Reply