- சினிமா, செய்திகள், விமர்சனம்

மாலை நேரத்து மயக்கம்

டைரக்டர் செல்வராகவனின் எழுத்தில் அவர் மனைவி கீதாஞ்சலி இயக்கிய புது வகை மயக்கம்.
தந்தை அரவணைப்பில் கட்டுப் பெட்டியாக வளர்ந்த நாயகனையும், `கண்டதே காட்சி கொண்டதே கோலம்' என இஷ்டத்துக்கு பாய் பிரண்ட், பகட்டு வாழ்க்கை என சுற்றித் திரிந்த நாயகியையும் காலம் திருமண பந்தத்தில் இணைத்து வைக்கிறது. `முதல் இரவு இல்லாத' அந்த முதல் இரவே அவர்களுக்குள் பிரச்சினையை தொடங்கி வைக்கிறது. 2 வருடம் நீடிக்கும் இந்த போராட்டத்தில் நாயகன் மதுபோதையில் ஒருநாள் அத்து மீற, கட்டாய முதல் இரவு நிகழ்ந்து விடுகிறது. இதனால் கோபமாகும் நாயகி  கோர்ட்டை நாடி டைவர்ஸ் வாங்குகிறாள். திருமணத்துக்கு முன்பு தன்னை அனுபவிக்கத் துடித்த முன்னாள் பாய்பிரண்டை இவளாகவே லாட்ஜூக்கு அழைக்கிறாள். அவர்கள் சந்தித்துக் கொள்ளும் அந்த நேரத்தில் கணவனின் கண்ணியமான அன்பை நேரில் கண்டுணருகிறாள். அதனால் பாய்பிரண்டை சாக்குப்போக்கு சொல்லி அனுப்பி விடும் அவள், மறுபடி கணவனிடம் இணைந்தாளா என்பது கிளுகிளு கிளைமாக்ஸ்.

செலவராகவன் படம் என்றால் இப்படித்தான் இருக்கும் என்ற நம்பிக்கையை இந்தப் படத்திலும் அப்படியே கொடுத்திருக்கிறார், இயக்கிய கீதாஞ்சலி, கணவரின் எண்ணங்களை அப்படியே பதிவு செய்ததால் இவருக்கென்று எந்த தனி அடையாளமும் இல்லாமல் போய் விடுகிறது. நாயகன் நாயகியாக பாலகிருஷ்ணகோலா-வாமிகா கேரக்டர் உணர்ந்து நடித்திருக்கிறார்கள். அறிமுக நாயகி அழகாகவும் இருப்பது பிளஸ்.

நாயகனின் அப்பாவாக அழகம்பெருமாள் யதார்த்தம். நாயகியின் அம்மாவாக கல்யாணி நடராஜன் மகளிடம் `என்ன… வேற மாதிரி செக்ஸ் வேணும்னு கேட்டானா?' என்று கேட்கிற இடத்தில் பலருக்கும் குமட்டும். அம்ரிஷ் இசையில் `காதல் தேன் சுவையா பாட்டு' இதயத்தில் இறங்குகிறது.

`ஒரு பையனை மேய்க்கிறதுக்கு கரெக்டா ஒரு பொண்ணு அமையணும்.அது தான் கல்யாண வாழ்க்கை' என்ற தத்துவம் வரை ஓ.கே. அதற்காக தாலி கட்டிய அந்த அப்பாவிப் பையனை அந்தப் பாடா படுத்துவீர்கள் என்று கேட்கத் தோன்றுகிறது. ஒருவேளை இதுதான் செல்வராகவன் ஸ்டைல் என்பவர்களுக்கு நம்மிடம் பதில் இல்லை.

கலாசார கலாட்டா.

Leave a Reply