- செய்திகள், மாநிலச்செய்திகள்

மாலேகான் குண்டு வெடிப்பு வழக்கு ‘உச்ச நீதிமன்ற கண்காணிப்பில் விசாரணை நடைபெற வேண்டும்’ காங்கிரஸ் வலியுறுத்தல்

புதுடெல்லி, மே 16:- மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் இருந்து சாத்வி பிரயாக் விடுவிக்கப்பட்ட நிலையில், வழக்கு விசாரணையை உச்சநீதிமன்றம் கண்காணிக்க வேண்டும் என காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.

என்.ஐ.ஏ. விசாரணை
மகாராஷ்டிர மாநிலம் நாசிக் மாவட்டத்தில் உள்ள மாலேகானில் கடந்த 2008 செப்டம்பரில் வெடிகுண்டுகள் வெடித்தன. இதில் 7 பேர் உயிரிழந்தனர். இது தொடர்பாக மகாராஷ்டிர தீவிரவாத எதிர்ப்பு போலீசார் விசாரித்து வந்தனர். வழக்கில் 2 தலைமறைவு குற்றவாளிகள் உள்பட மொத்தம் 16 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. குற்றப்பத்திரிகையை கடந்த 2009 மற்றும் 2011 -ம் ஆண்டுகளில் போலீசார் தாக்கல் செய்தனர். இதற்கிடையே, வழக்கானது மகாராஷ்டிர தீவிரவாத எதிர்ப்பு போலீசாரிடம் இருந்து தேசிய புலனாய்வு அமைப்புக்கு (என்.ஐ.ஏ.) மாறியது.

சாத்வி விடுவிப்பு

இந்நிலையில், குற்றப்பத்திரிக்கையை கடந்த வெள்ளியன்று தாக்கல் செய்த அதிகாரிகள், முக்கிய குற்றவாளியாக கருதப்பட்டு வந்த சாத்வி பிரக்யா, லோகேஷ் சர்மா உள்பட 5 பேரின் பெயரை குற்றச்சாட்டுகளில் இருந்து விடுவித்தனர். மேலும், மகாராஷ்ராவின் திட்டமிட்ட குற்றங்கள் தடுப்பு சட்ட (மகோகா) பிரிவகளின் கீழான குற்றச்சாட்டுகளில் இருந்தும் அவர்களது பெயர் விடுவிக்கப்பட்டது.
இதற்கு நாடு முழுவதும் பல்வேறு எதிர்க்கட்சிகளும், அமைப்புகளும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. இந்நிலையில் உச்ச நீதிமன்றத்தின் கண்காணிப்பின் கீழ், தேசிய புலனாய்வு அமைப்பின் விசாரணை நடத்தப்பட வேண்டும் என காங்கிரஸ் கட்சி வலியுறுத்தி உள்ளது.

என்.ஐ.ஏ. – `நமோ ஏஜென்சி'

இதுகுறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் ஆனந்த் சர்மா கூறியதாவது:- ‘நேஷனல் இன்வெஸ்டிகேஷன் ஏஜென்சி’ என்கிற என்.ஐ.ஏ. விசாரணை அமைப்பு ‘நமோ (நரேந்திர மோடி) இன்வெஸ்டிகேஷன் ஏஜென்சி’ யாக மாறிவிட்டது.

ஹேமந்த் கர்கரே தலைமையிலான மும்பை தீவிரவாத எதிர்ப்பு போலீசார், இந்த வழக்கில் அயராது பாடுபட்டு பல உண்மைகளை கண்டுபிடித்தார்கள். அவை அனைத்தையும், பாழ்படுத்தும் நோக்கத்தோடு என்.ஐ.ஏ.வின் குற்றப்பத்திரிகை அமைந்துள்ளது. மகாராஷ்ராவின் திட்டமிட்ட குற்றங்கள் தடுப்பு சட்டத்தில் இருந்து சிலர் விடுவிக்கப்பட்டுள்ளனர். அப்படியென்றால், மும்பை தீவிரவாத எதிர்ப்பு போலீசார் பதிவு செய்த அனைத்து ஆவணங்களும் ஏற்றுக்கொள்ளப்படவில்லை என்றுதான் அர்த்தம்.

பிரதமர் அலுவலகம்

இந்த வழக்கு விசாரணையில் பிரதமர் அலுவலகம் நேரடியாக தலையிட்டு இருக்கிறது. அது நிரூபணமாக்கப்பட்டுள்ளது. குற்றம் சாட்டப்பட்டுள்ள கர்னல் பி.எஸ். புரோகித் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலுக்கு கடந்த ஜனவரி 6,8 ஆகிய தேதிகளில் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதம் உள்துறை அமைச்சகத்துக்கு ஜனவரி 9-ந்ேததி கிடைத்தது. அதன்பின்னர், உள்துறை அமைச்சகம் தனது வேலையை தொடங்கியது. இதைப் போன்று, வேகமாக அனுப்பப்பட்ட எந்தவொரு கோப்பையும் நான் இதுவரைக்கும் பார்த்தது இல்லை. இந்த விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். தான் பிரதமராக பதவியேற்றபோது, எந்தவொரு குறிப்பிட்ட கட்சிக்கோ, சித்தாந்தத்துக்கோ ஆதரவாக செயல்பட மாட்டேன் என்று அவர் உறுதி மொழி ஏற்றார். அதனை மீறி அவர் நடந்து விட்டார்.

கண்காணிப்பு

இந்த வழக்கு விசாரணையை உச்ச நீதிமன்றம் கண்காணிக்க வேண்டும். வழக்கு, விசாரணை, வாக்குமூலம், குற்றப்பத்திரிகை என அனைத்து விதமான ஆவணங்களையும் உச்ச நீதிமன்றம் தன்வசப் படுத்த வேண்டும். இந்த வழக்கில் ஏற்பட்டுள்ள திடீர் மாற்றங்கள், முன்னேற்றங்கள் அனைத்தும் நாட்டின் ஒருமைப்பாடு மற்றும் தீவிரவாதத்துக்கு எதிராக நாடு மேற்கொண்டிருக்கும் போர் ஆகியவற்றின் மீது கேள்வியை ஏற்படுத்துகிறது. எந்தவகையில் வந்தாலும் நாங்கள் தீவிரவாதத்தை எதிர்க்கிறோம். என்.ஐ.ஏ. எடுத்துள்ள நடவடிக்கைக்கு ஆதரவாக இருப்பதன் மூலம், கர்கரே செய்த தியாகத்துக்கு எதிர்மறையாக அரசு உள்ளதுபோல் தோன்றுகிறது.

அரசு வழக்கறிஞர்கள்

ஒரு குறிப்பிட்ட சித்தாந்தத்தை பின்பற்றுபவர்களை, ஒரு குறிப்பிட்ட தரப்பினரை தொடர்நது காப்பாற்றும் நடவடிக்கையில் மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது. சுதந்திரமாக இயங்க வேண்டிய விசாரணை அமைப்புகள், நீதித்துறை உள்ளிட்டவற்றில் மத்திய அரசு தலையிடுகிறது.

இந்த வழக்கில் அதிக தீவிரம் காட்ட வேண்டாம் என்று, முன்னாள் அரசு தரப்பு வழக்கறிஞர் ரோகினி சாலியன், என்.ஐ.ஏ. அதிகாரிகளால் வற்புறுத்தப்பட்டுள்ளார். அதன்பின்னர், மத்திய அரசால் சாலியன் நீக்கப்பட்டார். அவருக்கு நடந்ததை போன்றுதான் தற்போதைய அரசு தரப்பு வழக்கறிஞர் அவினாஷ் ரசலுக்கும் நடந்து வருகிறது. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது குறித்து அவருக்கு ஒரு வார்த்தை கூட தெரிவிக்கப்படவில்லை.  இவ்வாறு அவர் தெரிவித்தார்.

கடிதங்கள் எத்தனை?
காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் ஆர்.பி.என். சிங் கூறும்போது, வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் லெப்டினன்ட் கர்னல் புரோகித், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், தோவல் இந்த விவகாரத்தில் தலையிடுமாறு கோரிக்கை வைத்துள்ளார் புரோகித். இது மிகவும் முக்கியமான ஒரு பிரச்சினை. இதுபோன்ற எத்தனை கடிதங்கள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலுக்கு அனுப்பப்பட்டுள்ளன என்பதையும், அதன்பேரில் நடடிவக்கை எடுக்குமாறு உள்துறை அமைச்சகத்துக்கு பரிந்துரைக்கப்பட்ட கடிதங்களையும் தெரிந்து கொள்ள நான் விரும்புகிறேன். காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசுதான் என்.ஐ.ஏ. விசாரணையை அமைத்தது. விசாரணையில் தலையிடாததையும் காங்கிரஸ் உறுதி செய்தது. முதன் முறையாக நாட்டின் இதயத்தையும் ஆன்மாவையும் காயப்படுத்திய தீவிரவாத சதிகள் விஷயத்தில் மத்திய அரசு தில்லு முல்லு செய்வதையும், நாட்டுக்காக உயிரைக் கொடுத்தவர்கள் தவறாக சித்தரிக்கப்படுவதையும், இந்த நாட்டை சிதைக்க முயன்றவர்களை நல்லவர்களாக காட்ட முயற்சிகள் நடப்பதையும் நாம் கண்கூடாக காண்கிறோம். இவ்வாறு அவர் குற்றம்சாட்்டினார்.

Leave a Reply