BREAKING NEWS

மாற்றம் தரும் மருட்சி !

இலண்டன் மாநகரில்  ஈழத் தமிழ் இளைஞனை விரும்பிய வெள்ளைப் பெண், உங்கள் பெயர் என்ன புதுமையாக இருக்கிறது.  திலீபன் – வீரசிங்கம் என்று பெயர் வைத்திருக்கிறீர்களே. எங்கள் நாட்டில் பெயர்களெல்லாமே ஆயிரம் ஆண்டுகாலப் பழைமையுடையவை. ஜேம்ஸ், வில்லியம்ஸ், ஜான், பீட்டர், தாமஸ், மேத்யூ என்ற பெயர்கள் எல்லாமே விவிலியத்தில் இடம் பெற்றவை என்ற உரையாடலை நான் படித்திருக்கிறேன்.

பொதுவாகப் பெயரிடுவது என்றால் குடும்பத்தினர் பெயரை, வழிபடும் குலதெய்வத்தின் பெயரைப் பிள்ளைகளுக்கு இடுவது வழக்கம்.  அப்படித்தான் மரபும் இருந்தது.  தாத்தாவின் பெயர்தான் பெயரனுக்கு வரும் .அதனால்தான் பெயரன் என்ற சொல் வந்தது. 1940 களில் தமிழுணர்ச்சி பேரலையாக வீசியது .தனித்தமிழ் இயக்கம் தோன்றியது.

சுவாமி வேதாசலம் – மறைமலையடிகள் ஆகவும், நாராயணசாமி-நெடுஞ்செழியன் ஆகவும், இராமையா – அன்பழகனாகவும், சோமசுந்தரம் – மதியழகனாகவும், கோதண்டபாணி – வில்லாளன் ஆகவும், தண்டபாணி இளம்வழுதி ஆகவும், சாத்தையா – தமிழ்க்குடிமகனாகவும் பழைய தமிழ் வேந்தர்களின் பெயர்கள் நினைவு கூரப்பட்டன.

அறிஞர்களின் கையில் குழந்தைகளைத் தந்து தமிழ்ப் பெயர்களை இடுங்கள் என்று மக்கள் விரும்பிக் கேட்டனர்.  அல்லி, ஆதிரை, முல்லை, முறுவல், புன்னகை, குறிஞ்சி, குமணன், நலங்கிள்ளி, நம்பி, சீராளன், சேரன், இளங்கோ என்ற பெயர்கள் எங்கும் ஒலித்தன. பெயரைக் கேட்ட போதே, நீ என்ன திராவிடக் கட்சியா! உன் தந்தை என்ன தமிழாசிரியரா என்று அப்போதே சிலர் கேட்டனர்.

கோவேந்தனுக்கும் –  குமணனுக்கும் – வளவனுக்கும் பிறந்த பிள்ளைகள் கூடத் தமக்கு விளங்காத பெயர்களையே  தம் பிள்ளைகளுக்குச் சூட்டியுள்ளனர். ‘‘என் வீட்டில் என்னோடு ஏறத்தாழ உடன் பிறந்தவர்களும் மாமன் மைத்துனர்களும் தமக்கை தங்கைகளும் இளமதி, வானவன், மெய்கண்டான், கதிரவன், தேன்மொழி, திலகவதி, மணிமேகலை, தமிழரசி, மலர்க்கொடி, அதியமான் என்ற பெயர்களோடு இருந்தாலும் அவர்கள் பிள்ளைகள் அனைவருக்கும் பின்தலைமுறையில் தமிழ்ப் பெயர்களே இல்லை.’’ என்று கூறக் கேட்டிருக்கிறோம். இப்படியெல்லாம் ஏற்படுகிற மாற்றம், அது நம் மொழிப்பற்றின் மீதான ஏமாற்றமாகப்படுகிறதல்லவா..?

அகல்யா, சந்தியா, வினிதா, மந்த்ரா, தீபா, சுவாதி, நரேஷ், சுரேஷ், வினோத், கமல், ராஜேஷ் என்று பெயர்கள் அமைந்துவிட்டன. திரைப்படங்களில் நடித்த நடிகர்கள், நடிகைகள் பெயர்கள் வீட்டில் பெருகிவிட்டன.  பாரதிராஜா பெயர் சூட்டிய நடிகையர் பலரை நாடறியும்.  ஒரு சிலர் சடகோபன் என்ற பெயரை, சட என்றும், நச்சினார்க்கினியன் – கினியன் என்றும் மாற்றிக்கொள்கிறார்கள்.  அதேநேரம், மூன்றெழுத்தில் ஈரெழுத்தில் பெயர் உள்ளவர்களெல்லாம் இன்னும் சுருக்க முடியாது என்ற நிதர்சனம் உணர்ந்து மாற்றம் வேண்டாம் என ஆற்றுப்பட்டுவிடுகிறார்கள். அறிஞர் மு.வ.பிள்ளைகளுக்குப் பெயர் சூட்டும் போது மூன்றெழுத்தில் முடியவேண்டும் என்றாராம்.  அதனால் அரசு, நம்பி, பாரி என்று அவர்தம் மக்கள் பெயர்கள் அமைந்தன.

தமிழில் பெயர் வைக்க வேண்டும் என்ற ஆர்வம் இப்போது இல்லை.  தமிழ்ப்பற்று என்பது வேண்டாத பேச்சு என்று நினைத்து விட்டனர்.

ஆஸ்திரிலேயாவில் பழம் பெயர்களும் – மரபுப் பெயர்களும் இப்போது தொலைந்துவிட்டன என்ற ஒரு  கட்டுரை அண்மையில் ஆஸ்திரிலேயாவில் வெளியாகியிருப்பது நமக்கு மருட்சி தருகிறது.

2020-ம் ஆண்டில்,  ஜான், மேரி போன்ற பெயர்களை மறந்துவிட்டார்கள். நீங்கள் இதுவரை கேட்டிராத பெயர்களையே பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்குத்  தெரிவு செய்தனர்.

இருபது ஆண்டுகளுக்கு முன்னர், ஜேக்கப் மற்றும் எமிலி ஆகிய பெயர்களே குழந்தைகளுக்கான புகழ்பெற்ற பெயர்களாக விளங்கின. 2020-ம் ஆண்டில், பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு மிகவும் தனித்தன்மை வாய்ந்த பெயர்களையே சூட்ட விரும்புகின்றனர்.

2020-ம் ஆண்டில் அதிகளவில் விரும்பப்படும் எனக் கருதப்படுகிற குழந்தைகளின் பெயர்ப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. கடந்த பத்து ஆண்டுகளில்கூட  அவற்றுள் சில பெயர்கள் இடம்பெறவில்லை. தங்கள் பிள்ளைகள் தனித்துத் தெரிய வேண்டும் என்பதற்காகப் புதிய பெயர்களை அவர்கள் புனைகிறார்கள்.

அடுத்த ஆண்டு, ஆண் மற்றும் பெண் குழந்தைகளுக்கு அதிகளவில் சூட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிற பெயர் பட்டியலை ’நேம்பெர்ரி’ (Nameberry) எனும் வலைத்தளம் வெளியிட்டுள்ளதென ’தி சன்’ (The sun) இதழ் தெரிவித்துள்ளது.

விடுதலைப்போர் இயக்கத்தில் பங்கு கொண்ட காந்தி, நேரு, நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், ஜெகஜீவன், பாரதி என்று பெயர் இட்டவர்களும் இப்போது அருகிவிட்டனர். ஏன் உனக்கிந்த பெயர் வந்தது என்று தெரிந்து கொள் – தெரிந்த பிறகு எழுதிப்பழகு –  பின்பு பிழையில்லாமல் ஒலிக்கக்  கற்றுக்கொள் என்பது தான் பள்ளியில் முதல் பாடமாக இருந்த காலம் உண்டு.

பழந்தமிழ் மக்களுக்குச் சூட்டப்பட்ட பெயர்களும், ஊர்ப்பெயர்களும் காரணம் பற்றியே அமைந்துள்ளன. இது உலகெங்கும் இவ்வாறே உள்ளன.  இப்பெயர்களையெல்லாம் பார்த்தால் அக்கால மக்களின் கலை வளமும் உளநலமும் புலனாகும். தாம் பெற்ற பிள்ளைகளுக்குப் பெயர் சூட்டி மகிழ்வதையே ஒரு விழாவாகக் கொண்டாடினர்.

தந்தையின் பெயரையே மைந்தனும் தன் பெயராகக் கொண்டு விளங்கும் மரபும் இப்பெயரீட்டுப் பெருமையை உணர்த்தும்.  மக்கட்குப் பெயரிடும் முறையில் இரண்டு முறைகள் பொதுவாய் உள்ளன.  அவற்றின் மரபை இடுகுறி, காரணம் என்பர். தொல்காப்பியர் பெயரிடும் வழக்கம்  இம் முறைப்பட்டது என எடுத்துக்காட்ட வில்லையாயினும், வழக்கிலிருந்த பெயர்களைக் கொண்டு நிலம், குடிமை, குழு, வினை, உடைமை, பண்பு, முறைநிலை, திணைநிலை, ஆடியல்பு, எண் வகை ஆகிய இயல்புகளால் அவை பிறந்தமையைக் காட்டுவார்.

தெய்வங்களின் பெயராலும், மன்னர் பெயராலும் மக்கட்குப் பெயர்கள் வழங்கின. பெற்றோர் சூட்டியவை இயற்பெயரென்றும், வேறு சிறப்புத் தகுதிகளால் பெற்றவை சிறப்புப் பெயரென்றும், சிறப்புப் பெயரை முன்னரும், இயற்பெயரைப் பின்னரும் குறிப்பதைக் காணலாம்.

பேராசிரியர் திரு. எஸ்.வையாபுரிப்பிள்ளை, புலவர்களின் பெயர் வகையை உறுப்பால், ஊரால், ஊரொடு தொடர்ந்ததால், சமயத்தால், தெய்வத்தால், தொடரால், தொழிலால், நூலால், பாடலால், பெற்றோரோடு தொடர்ந்த பெயரால், மரபால், வழக்க ஒழுக்கத்தால், பெயர் பெற்றோர் என்று பிரித்துக் காட்டியுள்ளார். அழிசி, ஆதன், ஆந்தை, எயினன், கடுவன், கண்ணன், கந்தரத்தன், கந்தன், கீரன், குமரன், கூத்தன், கொற்றன், கோவன், கௌசிகன், சாத்தன், சேந்தன், தத்தன், தேவன், நப்பசலை, நாகன், பதுமன், புல்லன், பூதன், போத்தன், மருதன், மள்ளன், வெளியன், வேட்டன் எனப்பல பெயரைத் தொகுத்துக் காட்டி இவர் பெயர் குடிப்பெயரோ, பிற காரணங்கள் பற்றியனவோ என்று ஐயுற்று இவ்வகைகளையும் தனியே குறித்தார்.

உறுப்புக் குறைபாட்டாலேனும்-மிகையாலேனும் சிலர்க்குப் பெயர் அமைந்ததும் உண்டு.

மரம், செடி, கொடி, மலர், வான், மீன் முதலிய இயற்கைப் பொருட்களின் எழில் காரணமாகப் பெயரிடும் மரபிருந்ததை இத்தியார், முல்லையார், உத்திரையார், நாகையார், பசலையார், வெள்ளியார் எனும் பெயர்கள் காட்டவும் அவற்றை ஏனோ ஆராயவில்லை. மகளிர்க்கு ஆறுகளின் பெயர்களால் அழைக்கும் மரபு இன்றுள்ளது போல அன்றுமிருந்தது. இமயவரம்பன் குலத்தாரும், கரிகாலன் மரபினரும் பாடலிபுத்திர நகரத்தின் அருகே ஓடும் சோணையாற்றின் பெயரைச் செங்குட்டுவன் தாய்க்கு இட்டிருந்ததும் நினைக்கத் தக்கது.

காலமாற்றத்தால் இந்த மரபு முற்றிலும் மாறுபட்டுவிட்டது. பெயரில் என்ன இருக்கிறது – எந்தப்  பெயராய் இருந்தால் என்ன என்று சேக்ஸ்பியரும் கேட்டார்.

காலத்தின் கோலமும் மாற்றமும் மருட்சி தருகின்றன.  இந்த மாற்றம் உலகில் எல்லா நாடுகளிலும்  பரவியிருக்கிறது.  புகழ் வாய்ந்த பொறியாளர் ஒருவர் தன் பிள்ளைக்குக் காரி என்று பெயரிட்டார்.

கறுப்பன்னனையும்  – கார்மேகத்தையும் – கிருஷ்ணனையும்  (கரியன்) பொறுத்துக் கொண்ட ஊர் காரியை ஏற்கவில்லை. வகுப்பறை நண்பர்கள் அந்தப் பெயரைச் சொல்லி வதைத்ததைத் தாங்க முடியாமல் பள்ளிக்குப் போக அந்த மகன் மறுத்து விட்டானாம்.   இவ்வாறு  நடந்த கதை பலவற்றை பட்டியலிடலாம். வெள்ளியங்கிரியை – ரசிதாசலம் என்று மாற்றிய கதையும் உண்டு.

இவற்றையெல்லாம் செவியுறும்போது தமிழ்ப்பெயர்கள் மீண்டும் தழைக்குமா என்ற ஏக்கப் பெருமூச்சு மேலெழுகிறது..!

முனைவர் ந.அருள்

இயக்குநர்

மொழி பெயர்ப்புத்துறை

தமிழ்நாடு அரசு 

தொடர்புக்கு: dr.n.arul@gmail.com
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *