மானமுடையவரின் பெருமிதம் மிகவும் இனியது..! – ஔவை ந.அருள்

பதிணென் கீழ்கணக்கு நூல்களின் பாவளத்தின் சுவையைப் பார்த்து வருகிறோம். அதன் தொடர்ச்சியாக இன்னா நாற்பது மற்றும் இனியவை நாற்பது ஆகியவற்றிலிருந்து ஒரு சில பாடல்களின் பொருள் அறிந்து இலக்கிய இன்பம் நுகரலாம்… 9. இன்னா நாற்பது அறிமுகவுரை கீழ்க்கணக்கில் ‘நாற்பது’ என்றமைந்த நூல்கள் நான்கினுள் ஒன்று ‘இன்னா நாற்பது’. நான்கு நூல்களும் ‘நானாற்பது’ எனப்படும். ‘கால மிடம்பொருள் கருதி நாற்பான் சால வுரைத்தல் நானாற் பதுவே’ (91) என்பது, இலக்கண விளக்கப் பாட்டியல். பொருள் பற்றி வருவன இன்னா நாற்பது. இன்னலாக்குதலை ‘இன்னா’ என்றனர். இன்னா என்னும் சொல்லினையுடைய நாற்பது கவி யாதொரு நூலினுண்டு, அந்நூல் இன்ன நாற்பது என்பார் உரையாளர். இந்நூலில், நாற்பது பாடல்கள் உள்ளன. ஒவ்வொரு பாடலும், தந்நான்கு கருத்துகளை உடையன. நான்மணிக்கடிகையைப் போன்று, இந்நூல் அமைந்துள்ள போதிலும், ஒவ்வொரு கருத்தையும் ‘இன்னா’ என எடுத்துக் கூறுதலால், இச்சிறப்புப் பெயரைப் பெற்றது. இந்நூலை இயற்றியவர் ‘கவிலதேவர்’. கபிலர் என்ற பெயருடையார் பலர் இருந்தனர். முற்பட்டவராகக் கூறத்தக்கவர், சங்க காலப் பாரிக்கு உற்ற தோழனாக விளங்கிய அந்தணராகிய கவிலர் ; பிற்பட்டவராகக் கூறத்தக்கவர், இந்நூலாசிரியராகிய கபிலர். தீய பழக்க வழக்கங்களை ‘இன்னாதன’ அல்லது ‘வேண்டாதன’ என்று கூறுவதாக இந்நூலின் நாற்பது பாடல்களும் அமைந்துள்ளன. கூறியது கூறலாகச் சிலபல கருத்துகள் மீளவும் வருகின்றன. அவ்வாறு வருவன, அவ்வறங்களை வலியுறுத்தும் பொருட்டே எனலாம். கொடுங் கோல் மற மன்னர் கீழ் வாழ்தல் இன்னா; நெடுநீர் புணை இன்றி நீந்துதல் இன்னா; கடு மொழியாளர் தொடர்பு இன்னா; இன்னா, தடுமாறி வாழ்தல் உயிர்க்கு. 3 கொடுங்கோல் கடுமன்னன் ஆளுகையின் கீழ் வாழ்வது துன்பமானது. மிதவையின்றி, நீண்ட நீர்ப்பரப்பைக் கடப்பது துன்பமானது. கடுஞ்சொல் பேசுவோர் தொடர்பு துன்பமானது. தடுமாற்றத்துடன் வாழ்வது மனிதர்க்குத் துன்பமானது. கள் இல்லா மூதூர் களிகட்கு நற்கு இன்னா; வள்ளல்கள் இன்மை பரிசிலர்க்கு முன் இன்னா; வண்மை இலாளர் வனப்பு இன்னா; ஆங்கு இன்னா, பண் இல் புரவிப் பரிப்பு. 9 கள்ளில்லாப் பழையவூர், கள்ளுண்னிகட்கு மிகவும் துன்பமானது, கொடுப்போர் இல்லாமை, கொள்வோர் தமக்கு மிகவும் துன்பமானது, வள்ளன்மை இல்லாதாரின் அழகு, துன்பமானது. அவ்வாறே, சேணம் இல்லாத குதிரையின் இயக்கம் துன்பமானது. புல் ஆர் புரவி மணி இன்றி ஊர்வு இன்னா; கல்லார் உரைக்கும் கருமப் பொருள் இன்னா; இல்லாதார் நல்ல விழைவு இன்னா; ஆங்கு இன்னா, பல்லாருள் நாணுப் படல். 15 புல்லைத் தின்னும் குதிரையின் மீது, மணியில்லாமல் ஊர்ந்து செல்வது, துன்பமானது. கல்லாதவர் கூறுகின்ற செயலின் பயன், துன்பமானது, வறியவரின் நல்லதொரு விருப்பம், துன்பமானது. அவ்வாறே, பலருள்ளும் நாணமடைதல் துன்பமானது. உண்ணாது வைக்கும் பெரும் பொருள் வைப்பு இன்னா; நண்ணாப் பகைவர் புணர்ச்சி நனி இன்னா; கண் இல் ஒருவன் வனப்பு இன்னா; ஆங்கு இன்னா, எண் இலான் செய்யும் கணக்கு. 16 உண்ணாமல் சேர்த்து வைக்கின்ற பெரும்பொருள் வைப்பு, துன்பமானது, பொருந்தாப் பகைவரின் நட்பு, மிகவும் துன்பமானது. பார்வையற்ற ஒருவனின் அழகு, துன்பமானது. அவ்வாறே, எண்ணறியாதான் போடும் கணக்குத் துன்பமானது. உரன் உடையான் உள்ளம் மடிந்திருத்தல் இன்னா; மறன் உடையான் ஆடையால் மார்பு ஆர்த்தல் இன்னா; சுரம் அரிய கானம் செலவு இன்னா; இன்னா, மன வறியாளர் தொடர்பு. 18 அறிவாற்றல் உடையவன், உள்ளம் சோம்பியிருத்தல், துன்பமானது. வீரமுள்ள ஆட்களை உடையவன் தனித்து மார்தட்டி ஆரவாரித்தல் துன்பமானது. அரிதாகிய கடுங்காட்டில் பயணம் செய்வது, துன்பமானது, மன வறுமையாளர் நட்புத் துன்பமானது. யானைஇல் மன்னரைக் காண்டல் நனி இன்னா; ஊனைத் தின்று ஊனைப் பெருக்குதல் முன் இன்னா; தேன் நெய் புளிப்பின் சுவை இன்னா; ஆங்கு இன்னா, கான் யாறு இடையிட்ட ஊர். 22 யானைப்படை இல்லாத மன்னரைக் காண்பது, மிகவும் துன்பமானது. பிறிதின் உடலைத் தின்று, தன் உடலைப் பெருக்குதல் மிகவும் துன்பமானது. தேனும் நெய்யும் புளித்துவிட்டால், சுவைத்துன்பம். அவ்வாறே, காட்டாற்றின் நடுவூரும் துன்பமானது. பெருமை உடையாரைப் பீடு அழித்தல் இன்னா; கிழமை உடையாரைக் கீழ்ந்திடுதல் இன்னா; வளமை இலாளர் வனப்பு இன்னா; இன்னா, இளமையுள் மூப்புப் புகல். 27 பெருமிதம் உடையாரைப் பெருமிதம் குறையச் செய்தல், துன்பம், உரிமை உடையாரை உரிமையினின்றம் நீக்குதல், துன்பம், செழுமை இல்லாதவரின் அழகு, துன்பம், இளமைப் பருவத்தில் முதுமைப் பருவம் வந்து புகுதல் துன்பம். பிறன் மனையாள் பின் நோக்கும் பேதைமை இன்னா; மறம் இலா மன்னர் செருப் புகுதல் இன்னா; வெறும் புறம் வெம் புரவி ஏற்று இன்னா; இன்னா, திறன் இலான் செய்யும் வினை. 38 பிறன் மனையாளைப் பின் தொடரக் கருதும் அறியாமையானது துன்பம். வலிமையிலா மன்னர் போர்க்களம் புகுவதென்பது துன்பம். கடுவேகக் குதிரையின் வெறுமை முதுகில் ஏறிச் செல்வது துன்பம். ஆற்றல் சிறிதும் இல்லாதவன் செய்யும் செயலானது துன்பம். 10. இனியவை நாற்பது அறிமுகவுரை வாழ்க்கையில் தேவையற்றவற்றை ‘இன்னாமை’ என்றும், தேவையானவற்றை ‘இனியவை’ என்றும் கூறி, இன்னா நாற்பது என்றும், இனியவை நாற்பது என்று இரு நூல்கள் கீழ்க்கணக்கில் உள. திருவள்ளுவர், ‘செய்தக்க வல்ல செயக்கெடும் செய்தக்க செய்யாமை யானுங் கெடும்’ (466) என்பார். செய்ய வேண்டாதன செய்தல் கூடா. செய்ய வேண்டுவன செய்தல் வேண்டும். இங்குச் செய்ய வேண்டுவன பற்றியதே ‘இனியவை நாற்பது’. இன்னா நாற்பது போன்ற கட்டுக்கோப்பு, இந்நூலில் இல்லை. அந்த நாற்பதில், ஒவ்வொரு பாடலிலும், நந்நான்கு இன்னாதன உள. இந்த நாற்பதில் இனியவை நான்கினைக் கூறும் பாடல்கள் நான்கே (1,3,4,5) உள்ளன. மற்றவையெல்லாம், மும்மூன்று இனியவற்றையே கூறுகின்றன. அவையும் முன்னிரண்டடிகளில் இரண்டு இனியவற்றையும், பின்னிரண்டடிகளில் ஓர் இனியதையும் சுட்டுகின்றன. இந்நூல், பொருளமைதியில் திரிகடுகத்தையும், நூலமைப்பில் இன்னா நாற்பதையும் அடியொற்றிச் செல்கின்றது. இதன் பெயரை இனியது நாற்பது, இனியவை நாற்பது, இனிது நாற்பது என்றெல்லாம் பதிப்பாசிரியர் குறிப்பிட்டுள்ளனர். இவற்றுள், ‘இனியவை நாற்பது’ என்பதே பொருத்தமாகும். இந்நூலின் ஆசிரியர், மதுரைத் தமிழாசிரியர் மகனார் ‘பூதஞ்சேந்தனார்’. சேந்தனார் என்பது, அவர்தம் இயற்பெயர். பூதன் என்பது, அவர்தம் தந்தையாரின் பெயர். யானை யுடைய படைகாண்டல் முன்இனிதே ஊனைத்தின் றூனைப் பெருக்காமை முன்இனிதே கான்யாற் றடைகரை யூர்இனி தாங்கினிதே மான முடையார் மதிப்பு. 4 யானையுடைய படையைக் காண்பது மிகவும் இனியதே. பிற உயிரின் தசையைத் தின்று, தன்னுடலின் தசையைப் பெருக்காமை மிக இனியதே. காட்டாற்றின் கரையமைந்த ஊர் இனியது. அவ்வாறே, மானமுடையவரின் பெருமிதம் மிகவும் இனியதே. கடமுண்டு வாழாமை காண்டல் இனிதே நிறைமாண்பில் பெண்டிரை நீக்கல் இனிதே மனமாண்பி லாதவரை யஞ்சி யகறல் எனைமாண்புந் தான்இனிது நன்கு. 10 கடனால் உண்டு வாழாமையைக் காண்பது இனியதே. கற்பின் மாட்சிமை இல்லாத துணைவியரை விலக்கல் இனியதே. உள்ளத்தின் உயர்விலாதவரை அஞ்சி நீங்குதல் எப்படிப்பட்ட மாட்சிமையைவிடவும் அதுவே நல்லினிமை ஆகும். குழவி பிணியின்றி வாழ்தல் இனிதே சுழறும் அவையஞ்சான் கல்வி இனிதே மயரிக ளல்லராய் மாண்புடையார்ச் சேரும் திருவுந்தீர் வின்றேல் இனிது. 12 குழந்தை நோயில்லாமல் வாழ்தல் மிகவும் இனியதே. அவையறிந்து ஏற்றவாறு பேச அஞ்சாதவன் பெற்ற கல்வி மிகவும் இனியதே. மயங்குபவர் அல்லராய், மாட்சிமையுடையாரைச் சேரும் செல்வமும் நீங்காததாயின் மிகவும் இனியது. மன்றின் முதுமக்கள் வாழும் பதிஇனிதே தந்திரத்தின் வாழும் தவசிகள் மாண்பினிதே எஞ்சா விழுச்சீர் இருமுது மக்களைக் கண்டெழுதல் காலை இனிது. 18 ஊரம்பலத்தில் அகவையாலும் அறிவாலும் நிரம்பிய மக்கள் வாழுமூர் மிகவும் இனியதே. ஆகம விதிப்படி வாழ்கின்ற தம் ஒழுக்கத்தினரின் பெருமை மிகவும் இனியதே. குறையாச் சிறப்புடைய இருமுது மக்களாய பெற்றோரைக் கண்டெழுவது காலை மிகவும் இனியது. வெல்வது வேண்டி வெகுளாதா னோன்பினிதே ஒல்லுந் துணையும்ஒன்று உய்ப்பான் பொறை இனிதே இல்லாது காமுற் றிரங்கி இடர்ப்படார் செய்வது செய்தல் இனிது. 24 வெற்றி பெறக் கருதிச் சினங்கொள்ளாதான் இயற்றுகின்ற தவம் இனியதே. இயன்ற வரையில் ஏற்ற செயலைச் செய்பவனின் பொறுமை இனியதே. இல்லாத பொருளை மிக விரும்பி, ஏங்கித் துன்புறாமல், செய்யத்தகுந்ததைச் செய்வது இனியது. நன்றி பயன்தூக்கி வாழ்தல் நனிஇனிதே மன்றக் கொடும்பா டுரையாத மாண்பினிதே அன்றறிவார் யாரென் றடைக்கலம் வெளவாத நன்றியின் நன்கினியது இல். 30 பிறர் செய்த நன்மையின் பயனை ஆராய்ந்து வாழ்வது இனியதே. அவை நடுவில் மாறுபடக் கூறாத பெருமிதம் இனியதே. அடைக்கலமாக வந்த பொருளை நாளை அறிபவர் யாரென அதனைக் கவராத நன்மையைக் காட்டிலும் நல்ல இனியது வேறில்லை. எல்லிப் பொழுது வழங்காமை முன்இனிதே சொல்லுங்கால் சோர்வின்றச் சொல்லுதல் மாண்பினிதே புல்லிக் கொளினும் பொருளல்லார் தங்கேண்மை கொள்ளர் விடுதல் இனிது. 34 இரவுப் பொழுதில், சுற்றித் திரியாமை மிகவும் இனியதே. கருத்தைச் சொல்லும்போது, சோர்வடையாமல் சொல்வது சிறப்பாய் இனியதே. தானே வந்து தழுவிக் கொண்டாலும், பொருளற்றவர் தம் நட்பைக் கொள்ளாமல் தள்ளிவிடுவது இனியது. பத்துக் கொடுத்தும் பதியிருந்து வாழ்வினிதே வித்துற்குற் றுண்ணா விழுப்பம் மிகஇனிதே பற்பல நாளும் பழுதின்றிப் பாங்குடைய கற்றலிற் காழினியது இல். 40 பத்துவகைப் பொருள்களைத் தந்தேனும் பிறந்த ஊரில் வாழ்வதுதான் இனியதே. விதைக்க வைத்திருந்ததைக் குற்றியுண்ணாத உயர் குணம் மிகவும் இனியதே. பற்பல நாள்களும் குற்றமில்லாமல் தகுதியுடைய நூல்களைக் கற்பதைவிட மிகவும் இனியதாக வேறில்லை.

– முனைவர் ந.அருள்,

தொடர்புக்கு: dr.n.arul@gmail.com
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *