- செய்திகள்

மாநில உரிமைகளில் மத்திய அரசு தலையிடுவதை அனுமதிக்க மாட்டோம் கனிமொழி எம்பி பேச்சு

திமுக ஆட்சி அமைந்தால் மாநில உரிமைகளில் மத்திய அரசு தலையிடுவதை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என்று மக்களவை உறுப்பினர் கனிமொழி கூறினார்.

விடியலை நோக்கி ஸ்டாலின் என்ற பிரசார பயணத்தை மதுரையில் கனிமொழி மேற்கொண்டு வருகிறார். இரண்டாவது நாளாக நேற்று மதுரை வடக்கு தொகுதிக்கு உள்பட்ட பகுதியில் பயணம் மேற்கொண்டார். செல்லூர் கண்மாயைப் பார்வையிட்ட அவர் அப்பகுதி விவசாயிகள் பொதுமக்களைச் சந்தித்துப் பேசினார். பின்னர், செல்லூர் 50 அடி சாலையில் உள்ள மண்டபத்தில் நெசவாளர்கள் கட்டுமான தொழிலாளர்கள் உள்ளிட்டோருடன் கலந்துரையாடினார். அப்போது அவர் பேசியதாவது:

கட்டுமான தொழிலாளர்களுக்கு அதிமுக அரசு நிவாரண நிதியை முறையாக வழங்கவில்லை. பதிவு செய்த தொழிலாளர்களுக்கு நிவாரண நிதியை அரசு வழங்க மறுத்துவிட்டது. திமுக ஆட்சி அமைந்ததும் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு உரிய நியாயம் வழங்கப்படும். மத்திய அரசு எதைச் செய்தாலும் அதற்கு தலையசைக்கும் அரசாக அதிமுக அரசு இருந்துவருகிறது.

இங்கிருக்கும் அமைச்சர்களும் செயல்படாத நிலையிலேயே இருந்து வருகின்றனர். இதனால் மக்களுக்கான உரிமைகள் பறி போய்க்கொண்டிருக்கின்றன. அதுபோலவே மூன்று வேளாண் சட்டங்களை மத்திய அரசு கொண்டு வந்திருக்கிறது. திமுக ஆட்சிக்கு வந்ததும் மாநில உரிமைகள் மீட்கப்படும். அதோடு மாநில உரிமைகளில் மத்திய அரசு தலையிடுவதை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என்றார். அதைத்தொடர்ந்து செல்லூர் பகுதியில் உள்ள கைத்தறி நெசவு இடத்தை பார்வையிட்டார்.

அப்போது செய்தியாளர்கள், மதுரையில் முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு சிலை அமைக்க அரசு அனுமதி அளித்திருப்பதாக அமைச்சர்கள் கூறுகிறார்களே எனக் கேட்டனர். அதற்கு பதில் அளித்த கனிமொழி எம்பி, திமுக தலைவர் கருணாநிதி மறைந்தபோது அவரது நினைவிடத்துக்கு இடம் கொடுக்க எத்தகைய நிலையை அதிமுக அரசு மேற்கொண்டது என்பது அனைவருக்கும் தெரியும் என்றார். அவருடன் திமுக நிர்வாகிகள் என் முத்துராமலிங்கம் வவேலுசாமி முன்னாள் மேயர் குழந்தைவேலு உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

Leave a Reply