- சென்னை, செய்திகள், மாவட்டச்செய்திகள்

மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு சீராக உள்ளது அமைச்சர் பன்னீர்செல்வம் பெருமிதம்

சென்னை, பிப்.17-
‘முதல்-அமைச்சர் ஜெயலலிதா தலைமையில் இந்த அரசு பொறுப்பேற்றது முதல், மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு நிலை சீராக உள்ளது’ என்று நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சட்டசபையில் கூறினார்.

சட்டசபையில் அமைச்சர் பன்னீர்செல்வம் நேற்று தாக்கல் செய்த இடைக்கால பட்ஜெட்டில் கூறியிருப்பதாவது:-

கட்டமைப்பு வசதி

முதல்-அமைச்சர் ஜெயலலிதா தலைமையில் இந்த அரசு பொறுப்பேற்றது முதல், மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு நிலை சீராக உள்ளது.  காவல் துறையால் உறுதியுடன் எடுக்கப்பட்டு வரும் திறமையான நடவடிக்கைகளினால் சமூகவிரோத, தீவிரவாத மற்றும் நில அபகரிப்பு சக்திகள் ஒடுக்கப்பட்டுள்ளன.   இந்த அரசு, 39 சிறப்பு நில அபகரிப்புத் தடுப்புப் பிரிவுகளை அமைத்து, ரூ.3,642 கோடி மதிப்பிலான நிலங்களை இதுவரை மீட்டுள்ளது.  காவல் துறைக்கு 12,093 கூடுதல் பணியிடங்களுக்கு ஒப்புதல் அளித்து காவலர்களின் எண்ணிக்கையை அதிகரித்துள்ளது.
கடந்த ஐந்தாண்டுகளில் 32 புதிய காவல் நிலையங்கள், 47 புதிய போக்குவரத்துக் காவல் நிலையங்கள், நான்கு புதிய காவல் கோட்டங்கள் இந்த அரசால் உருவாக்கப்பட்டுள்ளன.  இது தவிர, 11,496 காவலர் குடியிருப்புகள், 290 காவல் நிலையங்கள், 160 பிற காவல் துறை கட்டடங்கள் என கட்டமைப்பு வசதிகளை இந்த அரசு மேம்படுத்தியுள்ளது.
8500 பேர் தேர்வு
நாட்டிலேயே முதன் முறையாக, 2013-2014 ஆம் ஆண்டில் ‘தமிழ்நாடு சிறப்பு காவல் இளைஞர் படை’ அமைக்கப்பட்டது.  இவர்களில் 8,500 பேர், இரண்டாம் நிலைக் காவலர்களாகத் தற்போது தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.  2015-ஆம் ஆண்டில், 1,078 உதவி ஆய்வாளர்கள் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, காவல் துறையில் சேர்க்கப்பட்டுள்ளனர். 2016 2017ஆம் ஆண்டு இடைக்கால வரவு செலவுத் திட்ட மதிப்பீடுகளில் ரூ.6,099.88 கோடியை காவல் துறைக்கு இந்த அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.
தீயணைப்பு துறை
17.தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையை சேர்ந்த திறமை மிக்க தீயணைப்புப் படை வீரர்கள், கடந்த ஐந்தாண்டுகளில், 60,204 உயிர்களை மீட்டு, ரூ.1,858.56 கோடி மதிப்பீட்டிலான சொத்துக்களை அழிவிலிருந்து காப்பாற்றியுள்ளனர்.  சமீபத்தில் கடும் பாதிப்பை ஏற்படுத்திச் சென்ற வெள்ளத்தின்போது, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையின் துரிதமான, சிறப்பான செயல்பாட்டுத் திறன், வெள்ளிடை மலையாக வெளிப்பட்டது.
நீதி நிர்வாகம்
நிலுவையிலுள்ள வழக்குகளை கணிசமாகக் குறைக்க, 22 கூடுதல் மகளிர் நீதிமன்றங்கள், 18 குடும்ப நீதிமன்றங்கள் மற்றும் 11 விரைவு நீதிமன்றங்கள் உட்பட 216 புதிய நீதிமன்றங்களை இந்த அரசு நிறுவியுள்ளது.
இவ்வாறு இடைக்கால பட்ஜெட்டில் கூறியுள்ளார்.

Leave a Reply