- செய்திகள், தேசியச்செய்திகள், வணிகம்

மாநிலங்களுக்கு மத்தியஅரசு அறிவுறுத்தல் துவரம், உளுத்தம் பருப்பு வகைகள் போதுமான இருப்பு வைக்க

புதுடெல்லி, ஏப். 4:-

பருப்பு வகைகள் தட்டுப்பாடின்றி மக்களுக்கு கிடைக்கும் வகையில் மாநில அரசுகள் போதுமான அளவு இருப்பு வைக்க மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது. குறிப்பாக துவரம் பருப்பு, உளுத்தம் பருப்புகளை அதிகமாக இருப்பு வைக்க வேண்டும் என மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு பருப்பு வகைகள் சில்லரை விலையில் கிலோ ஒன்று ரூ. 200 வரை சென்று, தற்போது ரூ.160 முதல் 170 வரை விற்பனையாகிறது. வரும் காலங்களில் பற்றாக்குறையைப் போக்குவதற்கு கடந்த கரீப் பருவகாலத்தில் 50 ஆயிரம் டன் பருப்புவகைகள் அரசு கொள்முதல் செய்துள்ளது. இதேபோல, ராபி பருவத்திலும் கொள்முதல்செய்ய ஆயத்தமாகி வருகிறது.

இதுதொடர்பாக கடந்த வாரம் நுகர்வோர் விவகாரத்துறை சார்பில் கலந்தாய்வு கூட்டம் டெல்லியில் நடந்தது. அதில், மாநில அரசுகள் போதுமான அளவு பருப்புவகைகள் இருப்பு வைக்கவும், தங்களுக்கு தேவையான பருப்பு வகைகளை முன்கூட்டியே கேட்டுப்பெறவும், விலை உயர்வு வரை காத்திருக்க வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டது.

மேலும், அடுத்து வரும் பண்டிகை காலத்தில்  பருப்பு வகைகளின் தேவை அதிகரிக்கும். அதை இப்போதே ஈடுகட்டும் வகையில், மத்திய அரசிடமிருந்து பருப்புகளை கொள்முதல் செய்ய மாநில அரசுகள் தயாராக இருக்க மத்தியஅரசு கேட்டுக் கொண்டுள்ளது.  இதில் பருப்பு வகைகள் முதலில் வரும் மாநில அரசுகளுக்கே முன்னுரிமையில் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், செயற்கை பற்றாக்குறையை ஏற்படுத்தி கொள்ளை லாபம் அடிக்கும் நோக்கில் பருப்பு வகைகள் பதுக்கிவைக்கும் வர்த்தகர்களை கண்டுபிடித்து தண்டிக்கவும் மத்திய அமலாக்கப்பிரிவு அதிகாரிகளுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

Leave a Reply