- சென்னை, செய்திகள், மாவட்டச்செய்திகள்

மாணவிக்கு பச்சைக் குத்திய விவகாரம் டாக்டர் ராமதாஸ் கண்டனம்

சென்னை, பிப்.29-
மாணவிக்கு பச்சைக் குத்திய விவகாரம் தொடர்பாக டாக்டர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

மாணவிக்கு பச்சை குத்தல்

அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முதல்-அமைச்சருமான ஜெயலலிதாவின் 68-வது பிறந்த நாளை முன்னிட்டு மக்களுக்கு தொல்லை தரும் வகையில் பல்வேறு நிகழ்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன் ஒரு கட்டமாக சென்னை வேளச்சேரியில் 668 பேருக்கு பச்சை குத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கட்டாயப்படுத்தியும், காசு கொடுத்தும் அழைத்து வரப்பட்டவர்களின் கைகளில் ஜெயலலிதாவின் படம் பச்சை குத்தப்பட்டது.

அப்போது வாக்களிக்கும் வயதை எட்டாத பள்ளி மாணவி ஒருவருக்கு கட்டாயப்படுத்தி பச்சைக் குத்தப்பட்டது. இதனால் ஏற்பட்ட வலியை தாங்கிக் கொள்ள முடியாமல் அம்மாணவி கதறி அழுகிறார். துடிக்கிறார். ‘‘என்னால் வலி தாங்க முடியவில்லை. தயவு செய்து என்னை விட்டு விடுங்கள்'' என்று கதறுகிறார்.
ஆனால், அதையெல்லாம் பொருட்படுத்தாமல் சில பெண்கள் அவரை பிடித்துக் கொள்ள அவருக்கு பச்சை குத்தி முடிக்கப்படுகிறது.

பள்ளிச் சிறுமிக்கு துடிக்க, துடிக்க பச்சை குத்திய அ.தி.மு.க. நிர்வாகிகள், அதற்கு துணையாக இருந்த அமைச்சர்கள், ஊக்குவித்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா ஆகியோர் மீது தேசிய மனித உரிமை ஆணையம் தானாக முன்வந்து வழக்குப் பதிவு செய்ய வேண்டும். சட்டப்படி தண்டனை அளிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு டாக்டர் ராமதாஸ் கூறினார்.

Leave a Reply