- செய்திகள்

மாணவர்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்க சுகாதாரத்துறை நடவடிக்கை டெங்கு காய்ச்சலை தடுக்க பள்ளிகளில்…

நெல்லை,ஆக 26-
நெல்லை மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்தும் வகையில் பள்ளிகளில் மாணவர்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்க சுகாதாரத்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.
டெங்கை தடுக்க
திருவள்ளூர் அருகே டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இந்த காய்ச்சல் தாக்கி இதுவரை அப்பகுதியில் 5 பேர் பலியாகி உள்ளனர்.
இதையடுத்து தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சல் பரவுவதை தடுக்க மாநில சுகாதாரத்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
நிலவேம்பு கசாயம்
அதன்படி, பள்ளிகளில் வாரத்தில் 5 நாட்கள் நிலவேம்பு கசாயம் மாணவ, மாணவியருக்கு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
நெல்லை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையிலும் நோயாளிகளுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கப்படுகிறது. மேலும் மாவட்ட பள்ளிகளில் சுகாதாரத்துறை ஊழியர்கள் நிலவேம்பு கசாயத்தை மாணவ, மாணவிகளுக்கு பெரிய அண்டாக்களில் எடுத்துச் சென்று வழங்கி வருகின்றனர்.
கொசுத்தொல்லை
இதன் ஒரு பகுதியாக பாளை சராள் தக்கர் மேல்நிலைப்பள்ளியில் நிலவேம்பு கசாயம் மாணவிகளுக்கு வழங்கப்பட்டது. நிலவேம்பு கசாயம் வழங்கினாலும் கொசு தொல்லை நெல்லை மாவட்டத்தின் அனைத்து பகுதியிலும் பரவலாக காணப்படுகிறது.
போர்க்கால நடவடிக்கை
குறிப்பாக மாநகர பகுதிகளில் கொசுக்கள் உற்பத்தி அதிகமாக உள்ளது. எனவே டெங்குவில் இருந்து காப்பதற்காக நிலவேம்பு கசாயம் கொடுப்பது போல, கொசுக்களை ஒழிக்கவும் போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

Leave a Reply