- செய்திகள்

மாடிப்படியில் இருந்து தவறி விழுந்து டைரக்டர் எஸ்.ஏ.சந்திரசேகர் படுகாயம் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை நடந்தது…

சென்னை, ஆக-25

நடிகர் விஜய்யின் தந்தையும் டைரக்டருமான எஸ்.ஏ.சந்திரசேகர் நேற்று மாடிப்படியில் இருந்து இறங்கும்போது தவறி விழுந்து படுகாயம் அடைந்தார். அவருக்கு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை நடந்தது.

கேரளாவில் கதை விவாதம்

டைரக்டர் எஸ்.ஏ.சந்திரசேகர் `சட்டம் ஒரு இருட்டறை' படம் மூலம் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர். மகன் விஜய்யையும் சினிமாவில் நடிகராக அறிமுகப்படுத்தினார். தொடர்ந்து படங்களை இயக்கி வந்தவர், சமீபகாலமாக நடிப்பதில் ஆர்வம் காட்டினார்.  சில படங்களில் நாயகனாகவும் நடிக்கத் தொடங்கினார். சில மாதங்களுக்கு முன்பு இவர் அதிரடி நாயகனாக நடித்த `நையப்புடை' என்ற படம் வெளிவந்தது.

தொடர்ந்து நாயகனாக நடிக்க விரும்பிய சந்திரசேகர், அதற்கான கதை விவாதத்திலும் ஈடுபட்டார். கதை முடிவானதும் நாயகனாக நடிப்பதோடு படத்தை இயக்கவும் முடிவு செய்திருந்தார். இதற்கான கதை விவாதத்தை நடத்த கேரள மாநிலத்தில் உள்ள குமரகம் பகுதிக்கு உதவி இயக்குனர்களுடன் சென்றவர், அங்குள்ள ரிசார்ட் ஒன்றின் மாடி அறையில் தங்கியிருந்தார்.

கீழே விழுந்தார்

நேற்று காலை கதை விவாதத்தை முடித்துக் கொண்டு மாடியில் இருந்து கீழே இறங்கியவர் கால் இடறி கீழே விழுந்ததாக கூறப்படுகிறது. இதில் அவரது தலையிலும் முதுகுப் பகுதியிலும் பலத்த காயம் ஏற்பட்டு மயக்கம் அடைந்தார்.  உடனடியாக அவரது உதவியாளர்கள் அவரை அருகாமையில் உள்ள தனியார் மருத்துமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் உடனடியாக அறுவை சிகிச்சை செய்ததை தொடர்ந்து மருத்துவர்களின்  தீவிர கண்காணிப்பில் இருந்து வருகிறார்.

விஜய் அதிர்ச்சி

எஸ்.ஏ.சந்திரசேகர் படுகாயம் அடைந்த செய்தி வெளியூர் படப்பிடிப்பில் இருந்த விஜய்க்குத் தெரிவிக்கப்பட்டது. அதிர்ச்சி அடைந்த விஜய் உடனடியாக கேரளாவுக்கு புறப்பட்டு போனார். இதற்கிடையே எஸ்.ஏ.சந்திரசேகர் சிகிச்சைக்குப் பின் நலமாக இருப்பதாக அவரது செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்.

இரண்டு மாதங்களுக்கு முன்பு நடிகர் கமல்ஹாசன் தனது ஆழ்வார்பேட்டை அலுவலகத்தில் மாடிப்படியில் இருந்து இறங்கும்போது கால் இடறி கீழே விழுந்து எலும்பு முறிவு ஏற்பட்டு தற்போது குணமாகி வருகிறார். இப்போது டைரக்டர் எஸ்.ஏ.சந்திரசேககரும் அதேபாணியில்  விழுந்திருப்பது பட உலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply