- செய்திகள், விளையாட்டு

மஹாராஷ்டிரா குடிநீர் பஞ்சத்தில் போட்டி அவசியமா? ‘ கிரிக்கெட் மைதானத்துக்கு தண்ணீரை வீணாக்குவது கிரிமினல் குற்றம் ’

மும்பை, ஏப். 7:-

மஹாராஷ்டிரா மாநிலத்தில், குடிநீர் பஞ்சம் தலைவிரித்தாடும் போது, கிரிக்கெட் மைதானங்களை பராமரிக்க தண்ணீரை செலவு செய்வது கிரிமினல் குற்றமாகும். ஐ.பி.எல். போட்டிகளை நீர்பற்றாக்குறை இல்லாத வேறு மாநில நகரங்களுக்கு மாற்றுங்கள் என இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்துக்கு(பி.சி.சி.ஐ)மும்பை உயர்நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.

மும்பை உயர்நீதிமன்றத்தில் ‘லோக்சத்தா இயக்கம்’ எனும் தொண்டு நிறுவனம் சார்பில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் கூறப்பட்டு இருந்ததாவது:

ஐ.பி.எல். போட்டிகளின் போது மும்பை , நாக்பூர், புனே உள்ளிட்ட நகரங்களில் உள்ள 3 ைமதானங்களை பராமரிக்க நாள்ஒன்றுக்கு 60 ஆயிரம் லிட்டர் நீர் தேவைப்படும். தற்போது மஹாராஷ்டிரா மாநிலம் முழுவதும் வறட்சி நிலவி தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. கடந்த ஒருவாரமாக தானே பகுதியில் குடிக்க தண்ணீர் இல்லை.

மும்பை நகர மக்களுக்கு குடிநீர் சப்ளை செய்வதிலும் பெரும் இடர்பாடு இருக்கிறது. ஆதலால், மைதானத்தை பராமரிக்க செலவு செய்யப்படும் நீருக்கு ஐ.பி.எல். தலைவர் வரி செலுத்த வேண்டும். அல்லது போட்டியை வேறு இடத்துக்கு மாற்ற உத்தரவிட வேண்டும் என அந்த மனுவில் கூறப்பட்டு இருந்தது.

இந்த மனுவுக்கு பதில் அளிக்கக் கோரி மஹாராஷ்டிரா கிரிக்கெட் அமைப்பு, விதர்பா கிரிக்கெட் அமைப்பு, மஹாராஷ்டிரா அரசு , மும்பை மற்றும் நாக்பூர் உள்ளாட்சி அமைப்புகளுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில், இந்த மனு நீதிபதிகள் வி.எம். கான்டே மற்றும் எம்.எஸ். கர்நிக் கொண்ட அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மும்பை கிரிக்கெட் அமைப்பின் சார்பில் ஆஜரான வழக்கறிஞரிடம் 3 மைதானங்களையும் பராமரிக்க நாள் ஒன்றுக்கு எத்தனை லிட்டர் நீர் தேவைப்படும் என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அதற்கு குறைந்தபட்சம் 40லட்சம் லிட்டர் தண்ணீர் தேவைப்படும் என வழக்கறிஞர் பதில் அளித்தார். இதற்கு அதிர்ச்சி தெரிவித்த நீதிபதிகள் இந்த அளவு தண்ணீர் என்பது மிகப்பெரிதாகும் என  தெரிவித்தனர்.

இதையடுத்து நீதிபதிகள் தங்கள் பி.சி.சி.ஐ. அளித்த உத்தரவில், “ கிரிக்கெட் அமைப்புகளும், பி.சி.சி.ஐ. அமைப்பும் எப்படி இந்த அளவு தண்ணீரை வீணாக்குகிறீர்கள். மக்களைக் காட்டிலும் உங்களுக்கு ஐ.பி.எல். போட்டிகள் தான் முக்கியமாக இருக்கிறதா?. எப்படி உங்களால் இந்த அளவுக்கு நீர் மேலான்மையில் கவனக் குறைவாக இருக்க முடிகிறது.  நீங்கள்தண்ணீரை வீணாக்குவது உண்மையில்  கிரிமினல் குற்றச்செயலாகும். இப்போது மாநிலத்தில் உள்ள சூழல் தெரிந்து கொண்டு இப்படி நீரை வீணாக்குகிறீர்களே '' என பி.சி.சி.ஐ. அமைப்பையும், மாநில கிரிக்கெட் அமைப்புகளையும் நீதிபதிகள் கடிந்து கொண்டனர்.

மேலும், “ மக்களின் நலன் கருதி, ஐ.பி.எல். போட்டிகளை நீர்பற்றாக்குறை இல்லாத மற்ற மாநில நகரங்களுக்கு மாற்றிக்கொள்ள வேண்டும் '' என பி.சி.சி.ஐ.அமைப்புக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

அதுமட்டுமல்லாமல், இந்த விவகாரம் தொடர்பாக மாநில அரசு சார்பில் அரசு வழக்கறிஞர் நேரில் ஆஜராகி கருத்தைத் தெரிவிக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

அதேசமயம் மும்பை மாநகராட்சி சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், தங்களால் போட்டியை பார்க்கவரும் ரசிகர்களுக்கு மட்டுமே குடிநீர் வழங்கமுடியும், மைதானத்தை பராமரிக்க வழங்கமுடியாது என தெரிவித்தது.

Leave a Reply