BREAKING NEWS

மழைக் காலத்தில் கொசுவலைத் திட்டம்…!

தமிழகத்தில் வடழகிழக்குப் பருவமழை தீவிரம் காட்டி வருகிறது.  தற்போதைய நிலவரப்படி தமிழகம் முழுவதிலும் பெய்துள்ள மழையின் அளவு சராசரியை விட 8 சதவிகிதம் அதிகம் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  மேலும் அடுத்த சில தினங்களுக்கு தமிழகத்தில் உள்ள பெரும்பாலான மாவட்டங்களில் கன மழைபெய்யும் என்றும் வானிலை ஆய்வுமைய இயக்குநர் தெரிவித்துள்ளார்.  அரபிக் கடலில் தென் கிழக்குப் பகுதியில் காற்றழுத்த தாழ்வு நிலை  உருவாகி வருவதால் தமிழகத்தின் மையப் பகுதிகளில் இருக்கும் மாவட்டங்களிலும் கனமழை பெய்வதற்கான எச்சரிக்கையினை இந்திய வானிலை ஆய்வு மையமும் அறிவித்துள்ளது.

தற்போதைய நிலவரப்படி தமிழகம் முழுவதிலும் விடாமல் பெய்து வரும் தொடர் மழையில் தமிழகத்தின் நிலத்தடி நீர்மட்டம் 4 முதல் 5 மீட்டர் அளவில் உயர்ந்துள்ளது என்கிற செய்திகள் மனம் குளிரவைக்கிறது.  நீண்ட காலத்திற்குப் பிறகு தமிழ்நாட்டில் கோடைக்காலத்தில் குடி தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டு, ரயில்களின் மூலம் ஜோலார்போட்டையில் இருந்து சென்னைக்கு குடி தண்ணீர் கொண்டு வரப்பட்டது.  ஆனால், தற்போது பெய்து வரும் அடைமழையால் தொடர்ந்து நிலத்தடி நீர்மட்டம் உயர்வதற்கான வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளது.  மேலும் சென்னைக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கும் வீராணம், புழல் ஆகிய ஏரிகள் உள்ளிட்ட நீர் நிலைகளும் நிரம்பி வருவதும் எதிர்கால கோடை காலத்தை சமாளிக்கும் விதமாக அமைந்துள்ளது.

அடைமழையின் நிலவரம் வருகின்ற டிசம்பர் 31 வரையில் அவ்வப்போது கூடுதலாகவும், மிதமாகவும் பெய்கிற மழைக்காலமாகத்தான் இருக்கும் என்கிற வானிலை ஆய்வு மையத்தின் அறிவிப்பு ஒரு பக்கம் மகிழ்ச்சியைத் தந்தாலும், இன்னொரு பக்கம் மழைக்கால பேரிடர் குறித்த அச்சமும் ஏற்படுகிறது. 2015-ம் ஆண்டு சென்னையில் உள்ள பெரும்பாலான பகுதிகள் மழைநீரால் மூழ்கிய சம்பவங்களும் நினைவுக்கு வருகிறது.

குறிப்பாக சுகாதாரம் மற்றும் குடியிருப்புப் பகுதிகளில் மழை நீர் செல்லுதல், அதனால் வீடுகள் இடியும் நிலை இவைகள் எல்லாமே, மழைக்காலத்தின் பின் விளைவுகள் எனலாம்.  குடியிருப்புப் பகுதிகள் தண்ணீர் தேங்குதலைத் தடுக்க என்னதான் அரசு இயந்திரங்கள் முடுக்கிவிடப்பட்டாலும், தொடர் மழைக் காலத்தில் அது முழு வெற்றியைக் கொடுப்பதில்லை.

மழைத் தண்ணீர் தேங்கும் நிலை ஏற்பட்டாலே, காய்ச்சல் மற்றும் தொற்றுநோய் பரவுதல் போன்ற துயர சம்பவங்களும் தொடரும் அவல நிலைகள் உண்டாகிவிடும்.  இந்தநிலையில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் அறிவிப்பு ஒன்று பொது சுகாதாரத்தைப் பேணிக்காக்கும் வகையில் வெளியாகி உள்ளது.  தமிழகத்தின் 37-வது மாவட்டமாக செங்கல்பட்டு அறிவிக்கப்பட்டு, தற்போது அதன் தொடக்கவிழாவில் பங்கேற்ற முதல்வர், ஏழை மக்களுக்கு இலவசமாக கொசுவலை வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.

அநேகமாக இந்தியாவில் உள்ள மாநிலங்களில் தமிழகம்தான் மக்களின் நிலை அறிந்து, இலவச காலணி முதல் கல்வி கற்க அதிலும் குறிப்பாக மாணவிகளுக்கு இலவச சைக்கிள், லேப்டாப் போன்றவைகளை வழங்கி இந்திய அளவில் கல்வி கற்போற் எண்ணிக்கையை உயர்த்தியது என்றால் அது மிகையாகாது.  இதற்காக மேட்டுக்குடி சிந்தனையாளர்கள், இலவசம் வழங்கி மக்களை அரசாங்கமே சோம்பேறிகளாக மாற்றி வருகிறது என்றெல்லாம் விமர்சித்தார்கள்.

ஆனால், தற்போது இதே இலவச திட்டங்களை இந்தியாவில் உள்ள மற்ற மாநிலங்களில் அறிவிக்கப்பட்டு வருகிறது. இந்த வரிசையில் தற்போது இலவசமாக கொசுவலை வழங்கும் திட்டம் நிச்சயமாக தமிழகத்தில் சுகாதாரத்தை மேம்படுத்தும்.  என்னதான் தூய்மையாக சுற்றுப் புறங்களை வைத்திருந்தாலும், மருந்துகளை தெளித்தாலும் கொசுக்களின் உற்பத்தியை தடுக்க முடிவதில்லை.  இதற்குக் காரணமே கொசு முட்டை உற்பத்திதான்.

ஒரு கொசுவானது முட்டையிடும் பருவத்தில் ஆயிரக்கணக்கான முட்டைகளை இட்டு கொசுக்களை உற்பத்தி செய்கிறது.  இந்தக் கொசுக்கள் வளர்வதற்கு தேங்கிய நீர் சிறிய அளவில் இருந்தால் போதும் கொசுக்கள் உற்பத்தி ஆகிவிடும்.  டெங்கு, மலேரியா, டைபாய்டு உள்ளிட்ட உயிருக்கு உலைவைக்கும் காய்ச்சலுக்கு இந்தக் கொசுக்கள்தான் காரணமாகிறது.  வசதி படைத்தவர்கள் குளிரூட்டப்பட்ட ஏ.சி அறையில் உறங்கினாலும், பெரும்பாலும் கொசுவலை மத்தியில்தான் அந்த அறையில் உறங்குவார்கள்.

ஏனெனில் கொசுக்கடியில் இருந்து தப்பிக்க கொசுவலை மட்டுமே உதவி செய்யும் என்பதால்தான். தற்போது அந்த கொசுவலை வசதியை தமிழக அரசு இலவசமாக வழங்க முன்வந்திருப்பது பாராட்டுதலுக்குரிய நடவடிக்கையாகும். இத்திட்டத்தால், ஏழை, எளிய, சாமன்யர்கள் கொசுக்கடியில் இருந்து தங்களைப் பாதுகாத்துக்கொள்ள வழி பிறந்ததை எண்ணி மகிழ்வார்கள். மேலும், இந்த மழைக்காலத்தில் கொசுக்கடியால் ஏற்படும் நோய்களிலிருந்து பாதுகாத்துக்கொள்ள பொதுமக்களுக்கு இத்திட்டம் பேருதவியாக இருக்கும். எனவே, உடனடியாக தற்போதைய மழைக் காலத்திலேயே இந்தத் திட்டம் அமல்படுத்தினால் நல்லது மக்களும் நலன் பெறுவார்கள்.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *