- செய்திகள், மாநிலச்செய்திகள்

மல்லையா சொத்து விவரங்களை வங்கிகளிடம் ஒப்படைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு

 

புதுடெல்லி, ஏப்.27:-

விஜய் மல்லையாவின் ேகாரிக்கையை நிராகரித்ததுடன், அவருடைய சொத்து விவரங்களை வங்கிகளின் கூட்டமைப்பிடம் ஒப்படைக்குமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

சொத்து விவரங்கள்

பிரபல மதுபான தொழில் அதிபர் விஜய் மல்லையா, நாட்டின் பல முன்னணி வங்கிகளிடம் வாங்கி இருந்த ரூ.9 ஆயிரம் கோடிக்கும் அதிகமான கடனை திருப்பிச் செலுத்தாமல் வெளிநாட்டுக்கு தப்பிச் சென்று விட்டார். அவருக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் எஸ்.பி.ஐ. உள்ளிட்ட 17 வங்கிகளைச் சேர்ந்த கூட்டமைப்பு வழக்கு தாக்கல் செய்தது.

கடந்த 7-ந் தேதி அந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, மல்லையா தன்னுடைய பெயரிலும், தன்னுடைய குடும்ப உறுப்பினர்களுக்கு சொந்தமாகவும், இந்தியா மற்றும் வெளிநாடுகளில் வைத்துள்ள அனைத்து சொத்துகளின் விவரங்களையும் 21-ந் தேதிக்குள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டது.

முன்பணம்

அதேபோன்று, மல்லையா தன்னுடைய நல்லெண்ணத்தைக் காட்டும் வகையில், நீதிமன்றத்தில் எவ்வளவு தொகையை முன்பணமாக செலுத்த தயாராக இருக்கிறார் என்பதை தெரிவிக்குமாறும், நீதிமன்றத்தின் முன்பு அவர் எப்போது ஆஜர் ஆக தயாராக இருக்கிறார் என்பதை தெரிவிக்குமாறும் உத்தரவு பிறப்பித்து இருந்தது.

நேற்று அந்த வழக்கு நீதிபதிகள் குரியன் ஜோசப், ஆர்.எப்.நரிமன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில் மீண்டும் விசாரணைக்கு வந்தது.

கண்ணாமூச்சி விளையாடுகிறார்

அப்போது, மத்திய அரசு தரப்பில் ஆஜரான அட்டார்னி ஜெனரல் முகுல் ரோகத்கி, ‘‘ஏப்ரல் 7-ந் தேதி உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை முற்றிலுமாக விஜய் மல்லையா செயல்படுத்தவில்லை. அவர் நீதிமன்றத்தின் முன்பு ஆஜர் ஆவதற்காக எப்போது நாட்டுக்கு திரும்புகிறார் என்று தெரிக்கவும் இல்லை. கடனை தீர்ப்பதற்காக தன்னுடைய நல்லெண்ணத்தை காட்டும் வகையில் அவர் உறுதி அளித்திருந்தபடி குறிப்பிட்ட எந்தவொரு தொகையையும் டெபாசிட் செய்யவும் இல்லை’’ என்று குறிப்பிட்டார்.

மேலும், ‘‘இந்தியாவின் நீதியில் இருந்து விஜய் மல்லையா தப்பி ஓடி விட்டார். அவர் கண்ணாமூச்சி விளையாடிக் கொண்டிருக்கிறார். சேவல், காளை கதையைச் சொல்லிக் கொண்டிருக்கிறார். அவர் வேண்டுமென்றே நீதிமன்றதிடம் சிலவற்றை மறைத்துக் கொண்டிருக்கிறார். அவருக்கு திரும்பி வரக்கூடிய எண்ணம் எதுவும் இல்லை. எனவே, நீதிமன்றத்தில் மூடி முத்திரையிடப்பட்ட உறையில் விஜய் மல்லையா தாக்கல் செய்து உள்ள சொத்து விவரங்கள் அனைத்தையும், வங்கிகளிடம் ஒப்படைக்கப்பட வேண்டும்’’ என்று கேட்டுக் கொண்டார்.

சட்ட பாதுகாப்பு
அதற்கு மல்லையா மற்றும் அவருடைய நிறுவனங்கள் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள் முறையே சி.எஸ்.வைத்தியநாதன் மற்றும் பராக் திரிபாதி ஆகியோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

மல்லையா தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சி.எஸ்.வைத்தியநாதன் தன்னுடைய வாதத்தின்போது, ‘‘விஜய் மல்லையாவிடம் இருந்து பிரிந்து சென்று, தற்போது வெளிநாட்டில் வசித்து வரும் அவருடைய மனைவி மற்றும் வெளிநாடு வாழ் இந்தியர்களான அவருடைய குழந்தைகளையும் பொறுப்பாக்க முடியாது. அவர்கள் தங்களுடைய வெளிநாட்டு சொத்துகளை வெளிப்படுத்துவதில் இருந்து சட்டத்தால் பாதுகாக்கப்படுகிறார்கள்’’ என்று தெரிவித்தார்.

ஒப்படைக்க உத்தரவு
அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், ‘‘மல்லையா, தன்னுடைய மனைவி, குழந்தைகளுடைய சொத்துகளை வங்கிகளிடம் தெரிவிக்காமல் இருப்பதற்கு உறுதியான ஆட்சேபணை எதுவும் இருப்பதாக தெரியவில்லை’’ என்று குறிப்பிட்டனர்.

அதனைத் தொடர்ந்து, மல்லையா தரப்பின் கோரிக்கையை நிராகரித்த நீதிபதிகள், அவர் நீதிமன்றத்தில் மூடி முத்திரையிடப்பட்ட உறையில் தாக்கல் செய்து உள்ள சொத்து விவரங்களை, வங்கிகளின் கூட்டமைப்பிடம் வழங்குமாறு உச்ச நீதிமன்ற பதிவுத் துறைக்கு உத்தரவிட்டனர்.

மேலும், மல்லையாவுக்கு எதிராக நிலுவையில் உள்ள வழக்குகளை 2 மாதத்திற்குள் முடிக்க வேண்டும் என்று பெங்களூரு கட்ன் மீட்பு தீர்ப்பாயத்திற்கும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
——————-

Leave a Reply