- செய்திகள்

மலை பகுதியில் பலத்தமழை குற்றால அருவியில் தண்ணீர் கொட்டுகிறது சுற்றுலா பயணிகள் குளிக்க தடை…

தென்காசி, ஆக17-

மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் திடீரென பலத்த மழை பெய்ததால் குற்றாலம் மெயின் அருவியில் ஆர்ச்சை தாண்டி தண்ணீர் விழுந்தது. இதை தொடர்ந்து சில மணி நேரம் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது.

குற்றால சீசன்

நெல்லை மாவட்டம் குற்றாலத்தில் கடந்த ஜூன் மாதம் சீசன் தொடங்கியது. சீசன் தொடங்கிய சில நாட்களாக அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. அவ்வப்போது அருவிகளில் வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டு வந்தது.

விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணிகள் கூட்டம் குற்றாலத்தில் அதிகமாக காணப்பட்டது. ஐந்தருவியில் 4 பிரிவுகளில் தண்ணீர் பரவலாக விழுந்தது. புலியருவி, பழைய குற்றாலம், சிற்றருவிகளில் தண்ணீர் மிதமாக விழுந்தது. எனினும் கடந்த ஆண்டை போல இந்தாண்டு சீசன் களை கட்டவில்லை.

கடும் வெயில்

கடந்த 12 நாட்களாக குற்றாலத்தில் வெயில் சுட்டெரித்ததால் மெயின் அருவி உள்பட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் வரத்து வெகுவாக குறைந்தது. இந்த மாதத்துடன் சீசன் முடிவடையும் நிலையில் உள்ளது.

இதற்கிடையே கடந்த சனி, ஞாயிறு, திங்கட்கிழமைகளில் தொடர் விடுமுறை காரணமாக சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது. அவர்கள் நீண்ட கியூ வரிசையில் காத்திருந்து அருவிகளில் குறைந்த அளவு விழுந்த தண்ணீரில் குளித்தனர்.

திடீர் மழை

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு 9 மணி அளவில் குற்றாலம் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் திடீரென பலத்த மழை பெய்தது. மேலும் குற்றாலத்திலும் சாரல் மழை பெய்தது. இந்த மழையால் இரவு 9.30 மணிக்கு  மெயினருவியில் பாதுகாப்பு வளைவை (ஆர்ச்) தாண்டி தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.

சுற்றுலா பயணிகளுக்கு தடை

மேலும் தண்ணீர் வரத்து அதிகரிக்க கூடும் என்பதால் பாதுகாப்பு முன்எச்சரிக்கை நடவடிக்கையாக மெயினருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. எனினும் சிறிது நேரத்தில் மழையின் வேகம் குறைந்தது. இதை தொடர்ந்து ஒரு மணி நேரத்துக்கு பின்பு வெள்ளப்பெருக்கு குறைந்தது.

இதைதொடர்ந்து சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர். நேற்று காலை மெயினருவி, ஐந்தருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. ஆனால் சுற்றுலா பயணிகளின் கூட்டம் ஓரளவே இருந்தது. அருவிகளில் தொடர்ந்து தண்ணீர் அதிகமாக விழுந்தால் சுற்றுலா பயணிகளின் வருகையும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply